Published:Updated:

'ஜெ.அறிவித்த மின்திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை'

'ஜெ.அறிவித்த மின்திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை'
'ஜெ.அறிவித்த மின்திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை'
'ஜெ.அறிவித்த மின்திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை'

சென்னை: புதுக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த மின்திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் ஆகும் என்று  அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசும்போது, "சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெறுவது "இடைத்'' தேர்தல் அல்ல; ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகளை "எடை'' போடும் தேர்தல் என்று சொன்ன தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்த "இடைத்'' தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் "நடை''யைக் கட்டி விட்டார்'' என்று நாம் அந்தத் தொகுதியில் போட்டியிடாமல் புறக்கணித்ததைப் பற்றி கிண்டல் செய்திருக்கிறார்.

அவரே தனது பேச்சில் புதுக்கோட்டை நகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதற்காக அரசின் சார்பில் சிறப்பு உதவித் தொகையாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டதையும், மேலும் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் மற்றும் வளைவுகள் அமைக்க உத்தரவிட்டிருப்பதையும் சொல்லியிருக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் இவ்வாறு பிரத்யேகமாக அரசின் சார்பில் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக செய்வது சரிதானா என்பதை தேர்தல் ஆணையம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அதையெல்லாம் ஏற்கனவே உணர்ந்த காரணத்தாலும்,பணத்தை வாரி வாரி இறைத்த காரணத்தாலும்தான் திமுக புதுக்கோட்டை இடைத்தேர்தலிலே போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது.


மின்சாரத் தடை காரணமாக பொதுமக்கள் வருத்தமாக இருப்பார்கள் என்பதை தான் அறிவேன் என்றும்,அதற்குக் காரணம் ஏற்கனவே இருந்த திமுக ஆட்சிதான் என்றும், வருங்காலங்களில் மின் தேவை நிறைவு செய்யப்படும் என்று கூறியதோடு, எந்தெந்த மின் திட்டங்களிலிருந்து எவ்வளவு மின்சாரம் விரைவில் கிடைக்கும் என்றதோர் பட்டியலையும் அங்கே பேசியிருக்கிறார்.

அவர் படித்த பட்டியலிலே உள்ள அனைத்து மின் நிலையங்களும் தி.மு. கழக ஆட்சியிலே அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதை நான் பலமுறை அறிக்கைகள் மூலமாகச் சொல்லியிருக்கிறேன். உதாரணமாக எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், திமுக ஆட்சியில் 8-12-2006-ல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.அதன் உற்பத்திதான் 2013 ஆகஸ்டில் தொடங்கவுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007-ல் தொடங்கப்பட்டது.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அத்திட்டத்தின் உற்பத்திதான் விரைவிலே வரவுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் 2,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26-6-2007-ல் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் உற்பத்தி மிக விரைவில் வரவுள்ளது.

2006-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011-ல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012-ல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013-ல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014-ல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

2006-ம் ஆண்டு தமிழகத்திலே திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா, எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு அப்போதே முயற்சிகள் எடுத்திருப்பாரானால்,தற்போது மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டு மக்கள் அவதிக்கு ஆளாகியும் இருக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.