Published:Updated:

கிரைண்டர் கூப்பன், சுற்றி வரும் சுயேட்சைகள்! - ஆர்.கே நகர் ரவுண்ட் அப்

கிரைண்டர் கூப்பன், சுற்றி வரும் சுயேட்சைகள்! - ஆர்.கே நகர் ரவுண்ட் அப்
கிரைண்டர் கூப்பன், சுற்றி வரும் சுயேட்சைகள்! - ஆர்.கே நகர் ரவுண்ட் அப்

ஆர்.கே நகர் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் இறுதிகட்டப் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தண்டையார்பேட்டை பகுதிக்குள் மத்தியான வேளையில் ஒரு ரவுண்ட் அப் போனோம். ரோடு ஓரங்களில் காலியாக நிற்கிற லாரிகளையே சந்தேகப் பார்வை பார்க்க வைக்கும் அளவுக்கு இடைத்தேர்தல் ஃபார்முலா வெறி மக்களிடையே ஊறிப்போய்க் கிடக்கிறது. வார நாட்களின் வழக்கமான பகல்களைப் போல அல்லாமல் பரபரப்பாக இருக்கின்றன தண்டையார்பேட்டை பகுதித் தெருக்கள். 

எல்லாத் தெருக்களிலும் அந்தப் பக்கம் அ.தி.மு.க அம்மா அணி தினகரன் தேர்தல் பணிமனை, இந்தப் பக்கம் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி மதுசூதனன் தேர்தல் பணிமனை, ஒரு பக்கம் தி.மு.க-வின் மருது கணேஷ் தேர்தல் பணிமனை என ஆங்காங்கே இருக்கும் கொஞ்சூண்டு காலி இடங்களில் ஷாமியானா போட்டு வளைத்திருக்கிறார்கள். இது என்ன குறியீடோ தெரியலை. இவையெல்லாம் போதாதென வேட்பாளர் பட்டியலில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் ஏரியாவைச் சுற்றி வருகிறார்கள்.

அந்தப் பகுதி வீடுகளில் வசிப்பவர்கள், வீட்டைத் திறந்து வைத்துக்கொண்டு வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்து நாட்களாக இதுதான் அவர்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கக்கூடும். சென்னையின் வறண்ட தெருக்களில் வறண்ட புன்னகையை எதிர்நோக்கும் நமக்கு ஆர்.கே நகர் மக்களின் ஆர்வம் கொஞ்சம் கலவரத்தை உண்டாக்கியது. வந்தாரை வரவேற்கும் சென்னையின் நீட்சி தண்டையார் பேட்டைக்குள்தான் இப்போது தஞ்சம் இருக்கும் போல எனப் புளகாங்கிதமடைந்து சிரித்து வைத்தோம். அப்புறம் நான்கைந்து பேரிடம் விசாரித்தபிறகுதான் தெரிந்தது காரணம் அதுவல்ல என்று. 

சில நாட்களாகவே ஏரியாவுக்குப் பழக்கமில்லாத ஆட்கள் வந்து பணப் பட்டுவாடாவில் இறங்கி இருக்கிறார்களாம். அதனாலேயே புது ஆட்களைக் கண்டால் புன்னகை வீசி வரவேற்கிறார்கள். 'சும்மா சுத்திப் பார்க்க வந்தோம்' என்றவுடனேயே ஃபியூஸ் போன பல்பு மாதிரி ஆகிப்போனது அவர்கள் முகம். 'இருங்கம்மா... எங்களுக்குப் பின்னாடி ஏதோ வண்டி வந்துக்கிட்டு இருக்கு' எனச் சொல்லி எஸ்கேப் ஆனோம். 

கரைவேட்டிக்காரர்கள் சரசரவென ஏரியாவைச் சுற்றி வருகிறார்கள். லட்டுக்குள் மோதிரம் வைத்துக் கொடுப்பது, எலக்ட்ரானிக்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிக்கொள்ள வீட்டுக்கே போய் கூப்பன்கள் கொடுப்பது என அதிரிபுதிரி ஐடியாக்களை எல்லாம் மாஸ்டர் பிளானோடு நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்களாம். அநேகமாக அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஐடியா கொடுக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸில் நம்ம ஆட்களை மொத்தமாக ஏற்றிக் கொண்டுபோய் அங்கே வாடகை வீடு பிடித்துக் கொடுத்து வேலை வாங்குவார்கள் எனத் தெரிகிறது. ஜெய் ஹோ!

'அடுத்தடுத்து மூன்று தேர்தல்கள் வந்திருக்கின்றனவே... இதை நீங்கள் விரும்புகிறீர்களா..?' எனக் கேட்டால் கொஞ்சம் ஜெர்க் ஆகிறார்கள். தேர்தல் வரலைன்னா இப்படியெல்லாம் காசு பார்த்திருக்க முடியுமா...' என மனதில் நினைத்துக்கொண்டே 'வேற வழியில்லையே... எங்களுக்கு திட்டங்களைக் கொண்டுவர எம்.எல்.ஏ வேணும். அதுக்கு ஓட்டு போட்டுத்தானே ஆகணும்' எனப் பதில் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம்... டெலிகேட்டட் பொசிஸன்.

ஏப்ரல் - 12 அன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை ஆர்.கே நகர் மக்களின் காட்டில் அடைமழைதான். அதற்குள் என்ன என்ன டெக்னிக்குகளை எல்லாம் உபயோகிக்கக் காத்திருக்காங்களோ..? இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதையும் செலவுக்கணக்கில் சேர்க்கும் வரம்பு விதிக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இது போக, ஆர்.கே. நகரில் சில ‘குடி’மகன்களிடம் யாருக்கு பாஸ் ஓட்டு போடுவீங்கன்னு கேட்டா, உடனே தினகரன்னு சொல்றாங்க. அதுக்கு அவங்க சொல்ற காரணம், அவரு மேல தான் ஏதோ கேஸ் இருக்காம், சீக்கிரம் ஜெயிலுக்கு போக வாய்ப்பு இருக்குன்னு சொல்லிக்கிறாங்க’ன்னு சொல்றாங்க. ஆஹா... இவங்க கணக்கு வேற மாதிரி இருக்கே... எப்படி இருந்தாலும் இது அடுத்த இடைத்தேர்தல் ஃபார்முலாவை உருவாக்கும் தேர்தல். திருமங்கலம் ஃபார்முலாவின் அப்டேட்டட் வெர்ஷன் ஆர்.கே நகர்.  

- விக்கி