Published:Updated:

ஜெயலலிதாவின் சவப்பெட்டியும் அருவருப்பு அரசியலும்! #CoffinForVotes

ஜெயலலிதாவின் சவப்பெட்டியும் அருவருப்பு அரசியலும்! #CoffinForVotes
ஜெயலலிதாவின் சவப்பெட்டியும் அருவருப்பு அரசியலும்! #CoffinForVotes

‘ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது பிறப்பில் இருந்து விடை பெறுவது’, என்று ஜெயலலிதா 1999ம் ஆண்டு சிமி கேர்வலுக்கு அளித்த  நேர்காணலில் தெரிவித்திருப்பார்.

அந்த வார்த்தை இன்று இதயத்தில் ஈட்டியாய் இறங்குகிறது. இறந்த பின்னும் அவரது பிண மாதிரியை வைத்து ஓட்டுக் கேட்கும் அவரது ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் அவரை கொல்லும் ரணத்தைப் பார்க்க முடிகிறது. ஒருவர் இறந்து விட்டால் அவர் வாழ்ந்த காலத்தில் விட்டுச் சென்ற நினைவுகளை திரும்பிப் பார்ப்பது நாகரிகம். ஆனால் மக்களின் அனுதாபத்தின் வழியாக ஓட்டுக்களை வாங்கியே ஆக வேண்டும் என்று களம் இறங்கியிருக்கும் ஓ.பி.எஸ்.அணி ஜெயலலிதாவின் பிண மாதிரியை வைத்து ஓட்டுக் கேட்பது பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. ஆர்.கே.நகரில் நடந்து வரும் அரசியல் அருவருப்புகளை உலகமே முகம் சுழித்து பார்த்து வருகிறது. 

இது தான் உங்கள் அரசியல் நாகரிகமா ஓ.பி.எஸ். அவர்களே! ஜெயலலிதா உயிரோடு இருந்த காலம் வரை அவர் முகத்தின் முன்பு உங்கள் முதுகு வளைந்தே அல்லவா இருந்தது. அவரது நம்பிக்கைக்கு உரியவர் என்ற அடையாளம் உங்களை முதல்வர் நாற்காலியில் வைத்து அழகு பார்த்தது. அந்த பணிவெல்லாம் பொய் தானோ? 

வார்த்தைக்கு வார்த்தை வாயைத் திறந்தால் ‘இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா’ என்று ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டும் நீங்கள் அவர் அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். அவருக்கு ஓட்டுப்போட்ட மக்கள் எல்லாம் ‘அவர் உயிரோடு இருக்கிறாரா?’ என்று அப்பல்லோ மருத்துவமனை வாசலில் விழுந்து அழுது, புரண்டு கொண்டிருந்த போது உங்கள் செயல்பாடுகள் எல்லாம் ‘ஜென்’ மனநிலையில் இருந்ததே ஏன்?

அப்போது ஏன் நீங்கள் கொந்தளிக்கவில்லை. என் இதய தெய்வத்தின் இதயத்துக்கு என்ன ஆயிற்று என்று உண்மையை அறிய நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு பணிப்பெண்ணாக உடனிருந்த சசிகலாவை எதிர்த்து  ஒரு வார்த்தை கூட பேசாத உங்கள் பணிவின் மர்மம் யோசிக்க வைக்கிறது ஓ.பி.எஸ். உண்மையில் உங்கள் இதய தெய்வம் யார்..முதல்வர் நாற்காலியும்..அது தரும் அதிகாரமுமா? 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தமிழகத்தின் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்ததே? அப்போது மட்டும் அம்மா உப்புமா சாப்பிட்டார்? காபி குடித்தார் என்று கண்ணீர் மல்கினீர்களே!. இந்தத் தேர்தலிலும் ஓட்டுப் போட்டு அதிமுகவை காப்பாற்றுங்கள் என மக்களிடம் ஜெயலலிதா கேட்பதாக அவரது கை நாட்டு இடப்பட்ட கடிதம் ஒன்றை கொடுத்தீர்களே ஓ.பி.எஸ். நீங்கள் ஏன் அப்போதே உங்கள் அன்பு தெய்வத்தின் உண்மை நிலை அறிய பொங்கி எழவில்லை?

அதன் பிறகும் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நெருக்கடியான தருணத்திலும் அதே பதவி அதே பணிவு என்று நீங்கள் எங்கள் மக்களுக்கு காட்டிய சோக முகம் எல்லாம் பதவிக்காக மட்டும் தானா? உங்கள் பதவி பறிக்கப்பட்ட பின்பு தான் ‘ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வருவேன்’ என்ற குரல் உயர்த்தும் கோபம் உங்களுக்கு வந்ததா? 

மீண்டும் அந்த நாற்காலியைப் பிடிப்பதற்காகத் தான் அடுத்தகட்ட காய் நகர்த்தல்களை அழகாக நகர்த்தி வருகிறீர்களா? மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? உங்களை அம்மாவின் அனுதாபியாகப் பார்க்கிறார்களா? என்று இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு விடை தரப் போவது இந்த ஆர்.கே.நகர் தேர்தல் தானா? அதற்காகத் தான் உங்களால் முடிந்த அத்தனை உக்திகளையும் பயன்படுத்தி வருகீறீர்களா? 

கல்வி அமைச்சராக உள்ள மாபா பாண்டியராஜன் அறிவின் அடையாளமாக தன்னை முன் நிறுத்திக் கொள்பவர். நீங்களோ அனுதாபியாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர். உங்கள் ‘அம்மா’வின் பிண மாதிரியை வைத்து ஓட்டுக் கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மக்களின் ஓட்டைப் பெறுவதற்காக எந்த அவமானச் செயலிலும் உங்களை சமரசம் செய்து கொள்வீர்களா?

ஆம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நேர்காணலில் சொன்னது போல் ‘ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது பிறப்பில் இருந்து விடை பெறுவது’, என்றாரே. ஆனால் அதையும் கூட அவருக்கு நீங்கள் விட்டு வைக்கவில்லையா. அவரது இறப்பில் அரசியல், அவரை புதைப்பதில் அரசியல்...அத்தோடு முடிந்ததா. அவரது சமாதி தமிழகத்தின் அடுத்த அரசியல் களமாக மாற்றப்பட்டதே. ஒவ்வொருவராக புதுக்கட்சி துவங்குவதும், சபதம் ஏற்பதும், தியானம் செய்வது என ஜெயலலிதாவின் சமாதியை முற்றுகையிட்டு இருந்தீர்கள். 

‘அம்மா’ சமாதிக்கு வந்தவர்கள் எல்லாம் பதவி இழக்கின்றனர்.. அம்மா பழிவாங்குகிறாரா? என்று பேச்சு எழுந்த பின் அவரது சமாதிக்கு வந்து தியானம் செய்வதையும் விட்டு விட்டீர்கள். இப்போது உங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய களம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். அங்கு நடக்கும் அட்டகாச செயலில் ஒன்று தான் உங்களது  அணியினரின் பிரசார உக்தி. ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியை அதாவது பிண மாதிரியை பிரசார வேணில் வைத்து ஓட்டுக் கேட்டு வருகின்றீர். இது அத்தனை பெண்களையும் அருவருப்பு அடையச் செய்துள்ளது. உங்களுக்கு எதிராக கொதித்து எழவும் வைத்துள்ளது. இப்படியெல்லாம் பிரசாரம் செய்யும் உங்களுக்கு இதயம் இருக்கிறதா ஓ.பி.எஸ்.

ஆர்.கே.நகர் பகுதியில் அரசு அலுவலர்களே பணப்பட்டுவாடாவில் ஈடுபடும்  படங்கள் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து சந்தி சிரிக்கிறது. அப்படிக் கொடுக்கப்படும் பணத்தை வாங்கும் பெண்கள் தங்களது மேலாடைக்குள் மறைத்துக் கொள்வது இதயத்தில் அறைகிறது. பணம்  பத்து மட்டுமா செய்கிறது. 

தண்டையார் பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் பணம் பதுக்கப்பட்டிருந்த வீட்டில் சோதனைக்காக நுழைந்த அதிரடிப்படையினரை பெண்கள் அதிர வைத்துள்ளனர். தினகரன் அணியின் மகளிர் அணியினர் வடிவேலு காமடி பாணியில் தங்களது உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி அதிரடிப்படை அதிகாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளனர். அதிர்ச்சியில் அதிகாரிகள் இடத்தை காலி செய்துள்ளனர். இதெல்லாம் நடப்பது தமிழக அரசியல் களத்தில் தான். அதுவும் ஆர்.கே.நகரில் அரங்கேரி வரும் அருவருப்பான அரசியல் உக்திகள் உலகமே உற்றுப் பார்த்து வருவது உங்களுக்கு தெரியாதா? ஓ.பி.எஸ்.

ஆர்.கே.நகர்.தேர்தல் களத்தில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்காக இந்திய ஜனநாயகம், பெண்களின் மானம் எல்லாம் விற்கப்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயக ஓட்டு வங்கியாக இருக்கும் பெண்கள் சக்தியும் பணத்துக்காக விலைபோகிறது. இதே களத்தில் ஜெயலலிதாவின் மரணத்தையும், அவரது பிண மாதிரியையும் வைத்து ஓட்டுக் கேட்கும் உங்களுக்கெல்லாம் ‘.............’ ஏதாவது இருக்கிறதா? என்று கேட்கச் சொல்லி கொதிக்கிறது தமிழக பெண்களின் சார்பான என் மனம்.

யாழ் ஸ்ரீதேவி