Published:Updated:

‘சுகாதாரமான குடிநீர் தருவதைவிட, சவபிரசாரம் முக்கியமா?' ஆர்.கே. நகர்வாசிகளின் கொதிப்பு

‘சுகாதாரமான குடிநீர் தருவதைவிட, சவபிரசாரம் முக்கியமா?' ஆர்.கே. நகர்வாசிகளின் கொதிப்பு
‘சுகாதாரமான குடிநீர் தருவதைவிட, சவபிரசாரம் முக்கியமா?' ஆர்.கே. நகர்வாசிகளின் கொதிப்பு

ணப்பட்டுவாடா, அடிதடி, மோதல் என்று இடைத்தேர்தல் நடக்கும் ஆர் கே நகர் தொகுதியை இந்தியாவே உற்றுநோக்குகிறது. 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில், என்ன செய்தாவது ஓட்டு வாங்கி விட வேண்டும் என்ற பரபரப்பில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இருக்கின்றனர்.

இதுதானா முக்கிய விஷயம்?

மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, ஜெயலலிதா மரணம்தான் ஆர் கே நகர் பிரசாரத்தில் முக்கிய விஷயமாக முன் வைக்கப்படுகிறது. பிரசாரத்தில் ஈடுபடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், "ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம்" என்று வாக்குறுதி அளிக்கிறார். இதுதான் பிரசாரத்தின் மையக்கருத்தாக முன்  வைக்கப்படுகிறது. இது டி.டி.வி.தினகரன் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

முகம் சுளித்த மக்கள்

இந்தச் சூழலில்தான் நேற்று (6-ம் தேதி) ஆர் கே நகரில் பிரசாரம் செய்த முன்னாள் கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், ஜெயலலிதாவின் உருவ பொம்மை ஒன்றை சவப்பெட்டியில் வைத்து பிரசாரம் செய்தார். அந்த சவப்பெட்டியில் தேசியக் கொடியும் போர்த்தப்பட்டிருந்தது. வித்தியாசமான பிரசாரம் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டார்கள். ஆனால், சவப்பெட்டியைப் பார்த்த மக்கள் பலர் முகம் சுளித்தனர். சவப்பெட்டி பிரசாரத்துக்கு தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் பார்வையாளர்கள் தலையிட்டு பிரசார ஊர்வலத்தில் இருந்த சவப்பெட்டியை அகற்றும்படி உத்தரவிட்டனர். இதனால் பிரச்னை முடிவுக்கு வந்தது. தேசிய கொடியை தவறாகப் பயன்படுத்தியதாக மா.பா.பாண்டியராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்றும் சொல்கின்றனர்.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் இருந்தபோது, அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வைத்து தமிழகத்தில் அ.தி.மு.க-வினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதே போல இப்போது நூதன முறையில்தான் ஓ.பி.எஸ் தரப்பினர் பிரசாரம் செய்கின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.

ஆன்மா பேசியது என்ன?

இது குறித்து ஆர்.கே.நகர்த் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனிடம் கேட்டோம். "தோல்வி பயம் காரணமாக இது போன்று அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். பிணத்தை வைத்து ஆதாயம் தேட நினைக்கின்றனர். யாராவது ஒருவர் மரணம் அடைந்து விட்டால், ஒருவாரம் கழித்து கருமாதி என்ற பெயரில் காரியம் செய்வார்கள். இதற்காக உறவினர்களுக்கு நான்கு மூலைகளிலும் கறுப்பு கலர் மை பூசிய கருமாதி கடிதம் அனுப்புவார்கள். இந்த கருமாதி கடித்தை வாங்குபவர்கள், தேதியை பார்த்த பிறகு, அந்தக் கடித்தைக் கிழித்துப் போட்டு விடுவார்கள். கருமாதி கடித்தை வீட்டில் வைத்திருப்பது அபசகுணம் என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த சூழலில் ஒரு சவப்பெட்டியை மக்களின் வீட்டுக்கு முன்பு கொண்டு வந்து பிரசாரம் செய்வது மக்களிடம் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும். இந்தப் பிரசாரம் எடுபடாது. ஜெயலலிதா மரணம் குறித்து இத்தனை நாள் பேசினார்கள். மர்ம மரணம் என்றால், என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டியதுதானே. அம்மா ஆன்மா என்னிடம் பேசியது என்று சொல்லுபவர்கள் உண்மையைச் சொல்லவேண்டும். அதை விடுத்து இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது" என்றார்.

ஆர்.கே.நகர்த் தொகுதியின் பிரதிநிதியாக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஆர்.கே.நகர் மக்களும் எதிர்பார்க்கத்தான் செய்கின்றனர். ஆனால் அது மட்டும்தானா பிரச்னை.  சுகாதாரமான குடிநீர். குப்பைகள் அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட வேண்டும். உயர் கல்வி நிலையங்கள் தொடங்க வேண்டும் என்பது போன்ற அடிப்படை கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள்? என்று ஆர்.கே.நகர் மக்கள் கேட்கின்றனர். அவர்களுக்கு பதில்தான்  கிடைத்தபாடில்லை.

-கே.பாலசுப்பிரமணி