Published:Updated:

'நீதி செத்துப்போச்சு... நியாயம் நாசமா போச்சு..!' - 'நாட்டாமை' சரத்குமாருக்கு வந்த சோதனை

'நீதி செத்துப்போச்சு... நியாயம் நாசமா போச்சு..!' - 'நாட்டாமை' சரத்குமாருக்கு வந்த சோதனை
'நீதி செத்துப்போச்சு... நியாயம் நாசமா போச்சு..!' - 'நாட்டாமை' சரத்குமாருக்கு வந்த சோதனை

'நாட்டாமை'க்கு யார் கண் பட்டதோ தெரியலை. தீவிர அரசியலில் இறங்கிய பிறகும் 'சண்டமாருதம்', 'நீ நான் நிழல்' எனப் பல பேர் போன படங்களில் நடித்துக் கலையுலகைக் கட்டிக் காத்துக்கொண்டு இருந்தார் நம் 'நாட்டாமை' சரத்குமார். ஒருகாலத்தில் உடற்பயிற்சிக் கருவிகளைத் தூக்கிப் பயிற்சி செய்த கைகள் முழு நேரமாக அதிமுக-வுக்கு ஆதரவு வயலின் வாசித்துக் கொண்டிருக்கின்றன. 'நீதிடா..! நியாயம்டா..! நேர்மைடா..!' என நெஞ்சு கொதித்துப் பேசிய அந்த ஒரே ஒரு மானஸ்தனும் இப்போ உல்டா பேர்வழி ஆகிட்டார். 

* அரசியல், சினிமா எனப் போகும் இடமெல்லாம் சரத்குமாரை ஊறவைத்து அடிக்கிறார்கள். கொஞ்சகாலம் பரபரப்பாக இருந்த நடிகர் சங்கப் பிரச்னை இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. சரத்குமார் மீது ஊழல், கையாடல், கூட்டுச்சதி என ஏகப்பட்ட புகார்களை அடுக்கி அவரை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்டது விஷால் தரப்பு. விஜயகாந்தைப் போல நடிகர் சங்கத் தலைவராக இருந்து கட்சி தொடங்கியவர் என்பதாலோ என்னவோ சித்தப்புவின் நிலைமையும் கேப்டனைப் போலவேதான். 

* எல்லாத் தேர்தலுக்குப் பிறகும், ஆளும் கட்சியிலோ ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சியிலோ துண்டு போட்டுப் படுத்துத் தூங்கும் நவீன நாகராஜசோழன் எம்எல்ஏ சரத்குமாருக்கு இந்த முறை அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, 'அதிமுக எங்களைக் கறிவேப்பிலையாக நினைத்துத் தூக்கி எறிகிறது' எனப் பேசினார். அப்புறம் சீட் கிடைத்ததும்  'ம்ம் ம்ம் போங்க தம்பி... இதெல்லாம் அரசியல்ல சகஜம்' எனத் துண்டை உதறித் தோளில் போட்டார். கிடைத்த ஒரே ஒரு சீட்டையும் கோட்டை விட்டுத் தோட்டமே கதியாகக் கிடந்தார். சொந்தக்கட்சி ஒரு பக்கம் தொங்கலில் கிடக்க 'அதிமுக-வை யாராலும் அழிய விட மாட்டேன்' என உறுதிமொழி எல்லாம் எடுத்து மெர்சல் ஆக்கினார் நாட்டாமை. 

* ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நின்றாவது மக்களுக்கும் பிற கட்சிகளுக்கும் தன் இருப்பைக் காட்டலாம் என நினைத்தவருக்கு தேர்தல் ஆணையம் செய்தது முரட்டு டிராஜடி. வேட்புமனுத் தாக்கல் செய்த கட்சிக்காரரின் மனுவையும் மாற்று வேட்பாளரின் மனுவையும் ஒருசேர நிராகரித்து சோககீதம் பாடியது. யாரை ஆதரிப்பது எனத் தெரியாமல் கடைசி நேரத்தில் விழி பிதுங்கி நின்றவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளோடு (?) கலந்து பேசி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை எடுத்தார். இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கப் போவதாகச் சொன்ன அடுத்த பதினாறு மணிநேரத்தில் நாட்டாமை வீட்டில் வருமான வரித்துறை ரெய்டைப் போட்டது. 

* பத்தோடு பதினொன்றாகக் களத்தில் இறங்கியிருந்தாலும்கூடத் தப்பித்திருப்பார் போல. பாவம் 'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்த' கதையாக தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த உடனேவா இந்த துரதிருஷ்டம் வந்து தாக்கணும்? வெயில்காலமும் அதுவுமா வெளியில் அலையாம சிவனேனு வீட்டில் உட்கார்ந்து ஏ.சி காத்தையாச்சும் வாங்கிக்கிட்டு இருந்திருக்கலாம். இப்போ வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ளே விட்டுக்கிட்ட மாதிரி ஆகிப்போச்சு. 

* 'அதிமுக நிலைகுலைஞ்சு போயிடக் கூடாது. ரெண்டு அணிகளும் இணையணும்'னு ஆசைப்பட்டு ஆதரவு கொடுக்க வந்தார். கடைசியில் அவர் கட்சியே சீர்குலைஞ்சிடும் போல. திடீரென ரெய்டு நடத்துறதுக்குக் காரணம், நடைபெறப்போகும் இடைத்தேர்தலில் தினகரன் அணி வெற்றிபெறப் போவதைத் தெரிந்துகொண்டு திட்டமிட்டு தினகரன் ஆதரவாளர்களாகப் பார்த்து செக் வைக்கிறாங்களாம். என்னடா இது ஆர்.கே நகருக்கு வந்த சோதனை! 

நீதி செத்துப் போச்சு... நியாயம் நாசமாப் போச்சு!

- விக்கி