Published:Updated:

‘ஆர்.கே.நகருக்குத் தேர்தலே வேண்டாம்!’ - கொதிக்கும் சி.பி.எம் ராமகிருஷ்ணன்

‘ஆர்.கே.நகருக்குத் தேர்தலே வேண்டாம்!’ - கொதிக்கும் சி.பி.எம் ராமகிருஷ்ணன்
‘ஆர்.கே.நகருக்குத் தேர்தலே வேண்டாம்!’ - கொதிக்கும் சி.பி.எம் ராமகிருஷ்ணன்

‘ஆர்.கே.நகருக்குத் தேர்தலே வேண்டாம்!’ - கொதிக்கும் சி.பி.எம் ராமகிருஷ்ணன்

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பண விநியோகம் தொடர்பாகத்தான் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. பணவிநியோகத்தில் ஈடுபட்ட கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' எனக் கொதிக்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். 

ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த சில நாட்களாக அ.தி.மு.க அம்மா அணியின் நிர்வாகிகள், தொகுதி மக்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் பணம் விநியோகித்ததாக வீடியோ காட்சிகள் வெளியாயின. அதிகாலை நான்கு மணியளவில் நடந்த இந்த விநியோகத்தால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தனர்.

கலவரம், கத்திக் குத்து என கலவரச் சூழலில் இருக்கிறது

ஆர்.கே.நகர் தொகுதி. இந்நிலையில், இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரது வீடுகளில் சோதனையை நடத்தினர் வருமான வரித்துறை அதிகாரிகள். இந்தச் சோதனையில் அமைச்சரின் உதவியாளர் நயினாரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் கைப்பற்றதாகத் தகவல் வெளியானது. ஆளும்கட்சி நிர்வாகிகளையும் அமைச்சர்களையும் அதிர வைத்திருக்கிறது இந்த ரெய்டு காட்சிகள். சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ரெய்டு நடந்து வருவதால், கொதிப்பில் இருக்கிறது அமைச்சர் தரப்பு.

வருமான வரித்துறை சோதனைகள் குறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பாகத்தான் இந்த ரெய்டு நடக்கிறதா?' என தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த ரெய்டில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.கவும் பணப் பட்டுவாடாவில் இறங்கியுள்ளது. பன்னீர்செல்வம் அணியும் பணம் கொடுக்கும் வேலையில் இறங்கிவிட்டது. எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கும் புகார் மனு கொடுத்திருக்கிறோம். வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டதைப் போன்ற நிலைமை, ஆர்.கே.நகரில் வந்துவிடக் கூடாது" எனக் கொந்தளித்தார். 

- ஆ.விஜயானந்த்
 

அடுத்த கட்டுரைக்கு