Published:Updated:

"அள்ளிய பல்லாயிரம் கோடியில் கிள்ளிக் கொடுப்பது இரண்டு ரூபாய்...!" தினகரன் பற்றிய அறப்போர் ஆதாரம்

"அள்ளிய பல்லாயிரம் கோடியில் கிள்ளிக் கொடுப்பது இரண்டு ரூபாய்...!" தினகரன் பற்றிய அறப்போர் ஆதாரம்
"அள்ளிய பல்லாயிரம் கோடியில் கிள்ளிக் கொடுப்பது இரண்டு ரூபாய்...!" தினகரன் பற்றிய அறப்போர் ஆதாரம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. பணம் படைத்த கட்சிகள் சில, தொகுதியில் உள்ள பெரும்பான்மையான வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவை பக்காவாக செய்து முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.கே நகர் தொகுதியில் மிகப்பெரிய அளவில், பண விநியோகம் நடந்திருப்பது 'இந்தத் தேர்தல் நடைபெறுமா?' என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ஆர்.கே நகரில் போட்டியிடும் 'அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி தினகரனுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?' என்ற வீடியோ ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. 

3.50 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், டி.டி.வி தினகரன் யார், அவருக்கும் சசிகலா குடும்பத்துக்கும் என்ன தொடர்பு, சசிகலா கும்பல் சம்பாதித்த பணத்தை இவர் வெளிநாட்டில் எப்படி முதலீடு செய்தார், இவருக்கு வாக்களித்தால் தமிழகத்தின் நிலை என்ன ஆகும் எனப் பல்வேறு தகவல்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். 

வீடியோவில்...

''வெளிநாட்டில் பணம் பதுக்கிய கிரிமினல் வழக்கில், 'நான் இந்தியக் குடிமகனே இல்லை' என்று வாதிட்டார். இவரது இந்த வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக 'நான் இந்தியக் குடிமகன் இல்லை' என்றவரா உங்கள் எம்.எல்.ஏ?

வெளிநாட்டுக்குப் பணம் கடத்திய குற்ற வழக்கில், 'ஃபாரின் எக்ஸ்சேன்ஜ் ரெகுலேஷன்' சட்டப்படி, விசாரணை நடந்துவருகிறது. இதில், இவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கூடிய சீக்கிரம் இவரும் இவரது சின்னம்மா போல சிறைக் கம்பியை எண்ணுவார் என்று எதிர்பார்க்கலாம்" என்பது உள்பட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ பிரசாரம் குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். "சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர் டி.டி.வி தினகரன் என்றாலும், அவரைப் பற்றிய முழு உண்மையும் ஆர்.கே நகர் மக்களுக்குத் தெரியாது. இவர் எந்த அளவுக்கு மாஃபியா கும்பலுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார், வெளிநாட்டில் எப்படிப் பணம் பதுக்கினார் என்ற விஷயங்களை எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும், மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை உருவாக்கியுள்ளோம். 

இது, ஆர்.கே நகர் மக்கள் தங்கள் எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமல்ல... தமிழகத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கப்போகும் தேர்தல். அதனால்தான், ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் அணி சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. பணம் வாங்கியிருந்தாலும்கூட விழிப்பு உணர்வோடு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இந்த வீடியோவை உருவாக்கியுள்ளோம். 

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பு, யார் நேர்மையான வேட்பாளர்? என்று சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். ஆனால், மற்றவர்களைக் காட்டிலும் டி.டி.வி தினகரன் வெற்றிபெற்றால், தமிழகத்தையே அந்தக் குடும்பத்திடம் அடகு வைப்பதுபோல. குடும்பமே தமிழகத்தை டேக்ஓவர் செய்துவிடும். அதை அனுமதிக்கக் கூடாது. அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இதை வெளியிட்டிருக்கிறோம். 

சசிகலா குடும்பத்துக்கு, களத்தில் மிகப் பெரிய எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், இன்னொரு பக்கம் பணமும் பெரிய அளவில் கொடுத்திருக்கிறார்கள். பணம் மக்களின் எதிர்ப்பை ஈடுகட்டுமோ என்ற சந்தேகமும் உள்ளது. அதனால்தான், ரூ.4,000 பணம் கொடுத்திருந்தாலும், அதை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 2 ரூபாய் என்ற அளவுக்குத்தான் வருகிறது. 'அவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால், உங்களுக்குக் கொடுத்திருப்பது ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான். அந்த இரண்டு ரூபாய்க்காக உங்கள் வாக்கை விற்காதீர்கள்' என்கிறோம். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், கெட்டவர்களுக்குப் போடாதீர்கள் என்று சொல்கிறோம். 

இந்த வீடியோவை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியா மூலம் கொண்டு செல்ல உள்ளோம். ஆர்.கே நகர் மிகவும் பின்தங்கிய பகுதிதான். என்றாலும் முதல்தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இவர்களிடம் மொபைல் போன் இருக்கிறது. இவர்கள் இந்த வீடியோவைப் பார்த்து, தங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். 

- பா.பிரவீன் குமார்