Published:Updated:

ஆர்.கே நகர் தேர்தல் ரத்துக்குக் காரணம் விஷாலும் தீபாவும்! - அடுக்கடுக்காகக் காரணங்கள்

ஆர்.கே நகர் தேர்தல் ரத்துக்குக் காரணம் விஷாலும் தீபாவும்! - அடுக்கடுக்காகக் காரணங்கள்
ஆர்.கே நகர் தேர்தல் ரத்துக்குக் காரணம் விஷாலும் தீபாவும்! - அடுக்கடுக்காகக் காரணங்கள்

ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானதுக்கு புகுந்து விளையாடிய பணப் பட்டுவாடாவும், அதைக் கண்டுபிடிச்ச தேர்தல் ஆணையமும், மளிகைச் சீட்டு மாதிரி கொடுத்த காசையெல்லாம் கணக்கு எழுதி வெச்சிருந்த விஜயபாஸ்கரும்தான்னு ஊரே பேசித் திரியுது. ஆனா உண்மையான காரணம் என்னன்னு தெரியுமா? அதிர்ச்சியை முகத்தில் காட்டாம மேலே படிங்க... 

* தேர்தல் என்ன கிழமை நடக்க இருந்துச்சு? புதன்கிழமை. அது எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் மேதகு தீபா வழக்கமாகத் தனது தி.நகர் வீட்டில் ரெஸ்ட் எடுக்கிற நாள். தமிழ்நாட்டிலேயே... ஏன் இந்தியாவிலேயே வீக்கெண்ட்ல மட்டும் கட்சி நடத்துற ஒரே ஆளான தீபாவைத் தோற்கடிக்கிறதுக்காகத் திட்டமிட்டு புதன்கிழமை நடத்த அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்திருந்தாங்க. தேர்தலில் வெற்றி பெறுவீங்களானு கேட்டாலும், மத்தியான சாப்பாடு சரவணபவன்ல சாப்பிடுவீங்களானு கேட்டாலும், 'அதை நீங்கள்தான் கூற வேண்டும்' என டெம்ப்ளேட் பதிலால் அசரடிக்கும் தீபாம்மாவின் அரசியல் தந்திரங்கள் வென்று இப்போது தேர்தலையே ரத்து பண்ணிட்டாங்க. முடியுமா... நடக்குமா..?

* விஷால், திருட்டு வி.சி.டி விவகாரத்தில் பொங்கும்போதே 'அவர் அரசியலுக்கு வரப்போறார்'னு கொளுத்திப்போட்டுக் குளிர் காய்ஞ்சாங்க பலர். அதற்குப் பிறகு, நடிகர் சங்கப் பதவிகளுக்குக் குறி வெச்சது, நடிகர் சங்கக் கட்டடம் கட்டுறதுக்காக கில்லியா இறங்கி கிரிக்கெட் விளையாடினதுனு அவர் ஆடின ஆட்டங்கள் எல்லாமே 'இங்கே இருந்து லெஃப்ட்ல போனாலும் அரசியல் மேடை வந்துடும்ணே' கணக்காகவே இருந்தன. ஆனாலும், அவரை அரசியலுக்கு வரவிடாமல் அயல்நாட்டு சதிகள் ஒரு பக்கம், 'மதகதராஜா' படத்தை வெளிவிடாமல் உள்ளூர் சதி மறு பக்கமும் வேலையைக் காட்டின. எல்லாவற்றையும் மொத்தமா தகர்த்தெறியத்தான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனா, உஷாரான மற்ற கட்சிகள் அதுக்குள்ளேயே தேர்தலை அறிவிக்க வெச்சு வேட்புமனுத்தாக்கல் தேதியையும் முடிச்சு வெச்சிட்டாங்க. என்ன பண்றதுனு தெரியாம விஷால் இப்போ சுமோவில் பறந்து வந்து மொத்தத் தேர்தலையும் ரத்து பண்ணிட்டார். சோனைமுத்தா... போச்சா?

* தெய்வத்தின் செயலை மனிதன் எடுத்துரைப்பதா..? ஐயகோ..! இதோ அண்ணனே சொல்வார் கேளுங்கள். 

"தேர்தலைக் கண்டு கலங்குபவனில்லை இந்த வைகோ. இந்தியப் பாராளுமன்றத்திலே பெரும் அதிகாரம் பொருந்திய நேருவின் பேரன் ராஜீவ் காந்தியை மிஸ்டர். ராஜீவ் என அழைத்துக் கர்ஜித்தவன் நான். ஆர்.கே நகர் தேர்தல் எல்லாம் எனக்கு பீச் வாலிபால் விளையாடுவதைப் போல. அரசியல் அரிச்சுவடி கற்பித்த அண்ணன் கருணாநிதி துவண்டுபோய்ப் படுக்கையில் கிடக்கும்போது தேர்தலில் பங்குகொள்ளும் நெஞ்சுரம் எனக்கில்லை. தேர்தலைக் காண விரும்பாமல்தான் நீதிமன்றத்தில் ஸ்பெஷல் பெர்மிசன் கேட்டு புழல் ஏரியின் காற்று வாங்கிப் புழல் சிறையில் ஓய்வில் இருந்தேன். அங்கிருந்தபடியே தேர்தல் ஆணையத்தின் ப்ளூ பிரின்டைப் பார்த்து இந்தத் தேர்தலை ரத்து செய்யச் செய்ததும் நான்தான் எனச் சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்?" 

* அ.தி.மு.க-வையே நம்பி இருந்த நம்ம நாட்டாமை சரத்குமார், 'கட்சியை அ.தி.மு.க-வோடு இணைச்சுட்டு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைக் கேட்டு வாங்கிக்கலாமா... இல்லை அப்படியே மொத்தமா கலைச்சிட்டு 'ஜக்குபாய் -2' எடுக்க பாங்காங் போகலாமா...' ஒரு சீட்டு எடுத்துச் சொல்லு தாயின்னு கிளியிடம் சோகக்கதை பாடியவரைக் கட்சிக்காரர்கள் கூட்டிவந்து தேர்தலில் நிற்கச் செய்தனர். வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுமே 'டெபாஸிட் காசு ரிட்டர்ன் வந்திடுச்சு'னு துள்ளிக் குதிச்சவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிவந்து தினகரனுக்கு ஆதரவு கொடுக்க வைத்தனர். 'மனசு ரணமா கிடக்கும்போது தேர்தல் பிரசாரமெல்லாம் தேவைதானா..?'னு அவர் புலம்பியது யாருக்குக் கேட்டுச்சோ இல்லையோ எலெக்‌ஷன் கமிஷனுக்குக் கேட்டுடுச்சு. அடிச்சான் பாரு... கேன்சலேசன் ஆர்டர்! 

- விக்கி