Published:Updated:

வள்ளலுக்கே உதவிய வள்ளல்! நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் - அத்தியாயம் - 28

வள்ளலுக்கே உதவிய வள்ளல்! நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் - அத்தியாயம் - 28
வள்ளலுக்கே உதவிய வள்ளல்! நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் - அத்தியாயம் - 28

ராஜகுமாரி படம் வெளியான காலகட்டம் திரையுலக வரலாற்றில் முக்கியமான காலகட்டம். இச்சமயத்தில்தான் எம்.ஜி.ஆர் தன் திரையுலக, அரசியலில் முக்கியப் பங்கெடுத்துப் பலருக்கு அறிமுகமானார். அரசியல் பங்காளி கருணாநிதி மட்டுமல்ல, தன் வாழ்வில் பல முக்கியத் திருப்பங்களுக்குக் காரணமாகப்போகும் முக்கிய மனிதர்களை இந்தக் காலகட்டத்தில்தான் சந்தித்தார். அரசியல் ஆசான் அண்ணாதுரை, வாழ்க்கைத்துணைவி வி.என்.ஜானகி, திரையுலகப் போட்டியாளர் சிவாஜி கணேசன் இப்படிப் பலர்...

ராஜகுமாரி படத்தின் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் அடுத்த வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக 'பைத்தியக்காரன்' படத்தில் நடிக்கும் சூழல் உருவானது. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் வழக்கில் கைதாகி, தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் தியாகராஜபாகவதர் இருவரும் 'லண்டன் பிரிவியு கவுன்சிலி'ல் மேற்முறையீடு செய்திருந்தனர். தன் வாழ்நாளில் தனக்கென எந்தச் சொத்தும் சேர்க்காது தான தர்மங்களில் செலவிட்டதால் எதிர்பாராத இந்தச் சம்பவத்துக்குப்பின் கலைவாணர் குடும்பம் சிறிது பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகியிருந்தது. வழக்குச் செலவுகளுக்குக்கூடப் பெரும் சிரமத்தைச் சந்தித்தார் கலைவாணரின் துணைவியார் டி.ஏ.மதுரம்.

கலைவாணரின் துயரை உணர்ந்து பலரும் உதவி செய்தனர். இருப்பினும் அன்றைக்கு வழக்குச் செலவு அதிகமாக இருந்தது. மேலும் கலைவாணரின் நாடகக் குழுவில் இருந்தவர்கள் வாய்ப்பு இன்றி முடங்கிக்கிடந்ததும் கலைவாணருக்குக் கவலையைத்தந்ததால் அவருடைய ஆலோசனையின்பேரில், எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக  ஒரு திரைப்படம் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தது கலைவாணரின் குடும்பம். 

அப்படி எடுக்கப்பட்ட படம்தான் 'பைத்தியக்காரன்'. படத்தில் பலரும் ஊதியம் இன்றி கலைவாணரின் குடும்பத்துக்குச் செய்யும் கைமாறாக எண்ணிப் பணியாற்றினர். 

தனது வாழ்வில் தான்  பெரிதும் மதித்துவணங்குபவர்களில் ஒருவரான கலைவாணருக்கு ஏற்பட்ட இன்னலால் பெரும் கவலைகொண்டார் எம்.ஜி.ஆர்.  படத்தில் ஒரு வேடத்தினை ஏற்று நடிக்க முனவந்தார். எம்.ஜி.ஆர் தன் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களாகக் கருதி வணங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் என்.எஸ்.கிருஷ்ணன்; மற்ற இருவர் அறிஞர் அண்ணா மற்றும் உடன்பிறந்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி. 

“என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான்!” என எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என்.எஸ்.கே, எம்.ஜி.ஆரின் வாழ்வில் இடம்பெற்றது எப்படி....

எம்.ஜி.ஆரின் முதற்படமான சதிலீலாவதி திரைப்படமே கலைவாணருக்கும் முதற்படம். சினிமாவில் அறிமுகமானபோதே நாடகத்துறையிலும் பிரபலமாக விளங்கியவர். 

திரைப்படங்களில் தனக்கென ஒரு பாணியைக் கையாண்டு மக்களைச் சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்த கலைவாணர், நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்தவர். வறுமையினால் நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாகத் தன் வாழ்க்கையைத் துவக்கியவர். இயல்பாக நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டு நடிக்கத்துவங்கினார். தந்தை சுடலைமுத்துப்பிள்ளை, தாயார் இசக்கிஅம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. ஆனால் சதிலீலாவதிக்கு முன்னதாக அவரது இரண்டாவது படமான மேனகா வெளிவந்தது. மேனகாவின் வெற்றியால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவை ரசிக்கப்பட்டது.

தமிழ்சினிமாவில் அதுவரை நகைச்சுவைக் காட்சி என்பது முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, கேனைத்தனமாகச் சிரித்து, மக்களைச் சிரிக்கவைப்பது என்பதாக வரையறை செய்யப்பட்டிருந்தது.! என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழியில் சிரிக்கவைப்பது மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர். மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார். 40 களில் கொடிகட்டிப்பறந்த தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப்பறந்தபோதும் தனக்கென ஒரு நாடகக்குழுவையும் நடத்திவந்தார் என்.எஸ்.கே. 

நாடக வருமானம் என்பது அவரது சினிமா வருமானத்தில் மிகச் சொற்பமே என்றாலும் தனது நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தினார். நட்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது  அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது எனக் கலைஞர்களுக்காகவும் கலைக்காகவுமே தன் வாழ்வை அர்ப்பணித்தார் கலைவாணர். நடிகர்கள் நிறைவாக வாழ்ந்து கலைக்காகவும் கலைஞர்களுக்காவும் பாடுபடவேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தவர், தானே அதில் முதல்கலைஞனாகச் செயல்பட்டார்.

'வசந்தசேனா' படப்பிடிப்புக்காகப் புனே சென்றபோது காதல் ஏற்பட்டுக் கல்யாணத்தில் முடிந்தது டி.ஏ மதுரத்துடனான அவரது நட்பு.  தமிழ்சினிமாவில் முதல் தம்பதிக்கலைஞர்களான இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இவர்களுக்குப் புகழைத் தந்தன.

தோல்வியடையும் எனக் கருதப்பட்ட திரைப்படங்களைக்கூடத் தன் நகைச்சுவைக்காட்சிகளால் வெற்றி பெற வைத்தவர். அந்நாளில் பிரபல நிறுவனங்களின் படங்களில் அவரது குழுவினரின் தனிக்கதைகள் இடம்பெறும். தோல்வியடையும் படங்களைப் போட்டு அதில் கதைக்குத் தக்கபடி தனது நகைச்சுவையை இணைத்து வெளியிடச் செய்வார். படம் பெரும் வெற்றிபெறும். வெறும் நடிகராக மட்டுமன்றி இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது எனச் சினிமாவின் சகல துறையிலும் தேர்ந்தவர் கலைவாணர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவையும் இதற்குச் சான்று. 

பழம்பெருமை பேசி தமிழர்கள் வீணாகிவிடக்கூடாது என்ற கொள்கை கொண்ட என்.எஸ்.கே தனது திரைப்படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என நகைச்சுவையோடும் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது நிகழ்ந்து கலைவாணரின் தீர்க்க தரிசனத்துக்குச் சான்றாக அமைந்தது.  

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடைய கலைவாணர், தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் சிறுசிறு தவறுகளைத் திருத்தியவர் என்.எஸ்.கே. ஒரு மூத்த சகோதரர் போல் தன்மீது அன்பு காட்டியதையும், எப்போதும் மனிதாபிமானியாக வாழும் கலைவாணர் மீது எம்.ஜி.ஆருக்கு இனம்புரியாத ஒரு பாசம் ஏற்பட்டது. தன் வாழ்வின் இக்கட்டான நேரங்களில் கலைவாணரிடமே ஆலோசனை கேட்டுச் செயல்பட்டார் எம்.ஜி.ஆர். அதுமுதல் கலைவாணர் மீது பெரும் அன்புடன் பழகிவந்தார் எம்.ஜி.ஆர்.

தனது மேதமையால் கட்சி மாச்சர்யமின்றி அனைவராலும் போற்றப்பட்ட கலைவாணர் வாழ்வில் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பேரிடியைப்போல் குறுக்கிட்டது. வழக்குச் செலவைச் சமாளிக்க ஒரு திரைப்படம் எடுக்கலாமே என்று என்.எஸ்.கே வின் நண்பர்கள் டி.ஏ.மதுரத்திடம் யோசனை சொன்னார்கள்.அதன்படி படத்தயாரிப்புப் பணி துவங்கியது.  

கலைவாணர் குடும்பத்துக்கு ஏற்பட்ட இக்கஷ்டத்தைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், அவர் மீதான மரியாதையும் அன்பையும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இதைக் கருதி, படத்தில் ஒரு வேடம் ஏற்க, தானே சென்று வாய்ப்பு கேட்டார். மூர்த்தி என்ற கதாநாயகன் பாத்திரம் அவருக்குத் தரப்பட்டது. ஆரம்ப காலம் தொட்டு கணவர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் மட்டுமே ஜோடியாக நடித்துவந்த டி.ஏ.மதுரம், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கவேண்டிய கட்டாயம் உருவானது. இந்த வருத்தத்துடனேயே நடித்தார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. படத்தின் பெரும்பாதி முடிந்தநிலையில் திரையுலகம் மட்டுமன்றி மொத்தத் தமிழினமும் இந்த இருபெரும் கலைஞர்களின் எதிர்காலத்தை எண்ணி, கவலையுடன் தீர்ப்பை எதிர்நோக்கியிருந்த நிலையில், லண்டன் பிரிவியு கவுன்சிலில் செய்யப்பட்ட மேற்முறையீட்டின் மீதான தீர்ப்பு வெளியானது. அன்றைய பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் (எத்திராஜ் மகளிர் கல்லூரியை நிறுவியவர்) நடத்திய வழக்கில் கலைவாணர், தியாகராஜ பாகவதர் இருவரும் குற்றவாளிகள் அல்ல எனத் தீர்ப்பு வந்தது. தமிழகமே கொண்டாடியது அந்தத் தீர்ப்பை. 

“கணவருடன் நடிக்கமுடியவில்லையே” என்ற மதுரத்தின் கவலை காணாமல்போனது. உடனடியாகப் படத்தில் கலைவாணருக்கென ஒரு வேடம் புகுத்தப்பட்டு, மதுரத்தை இரட்டை வேடமாக்கி இன்னொரு மதுரத்துக்கு ஜோடியாகக் கலைவாணரை நடிக்கவைத்தனர். படம் வெற்றிபெற்றது. படத்தில் தன் சிறை அனுபவங்களை 'ஜெயிலிக்குப் போய் வந்த...' எனப் பாட்டாகப் பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத்துவங்கினார் கலைவாணர். சிறைமீண்டதற்குப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திரையுலகிலும் கலைவாணரின் புகழ் இன்னும் பலமடங்கு உயர்ந்தது. 

தங்கத்தட்டில் உண்டு, பட்டுடை உடுத்தி, பன்னீரில் குளித்து வாழ்ந்த எம்.கே. தியாகராஜபாகவதர் சிறை மீண்ட பின் என்ன ஆனார்...

- எஸ்.கிருபாகரன்

படங்கள் உதவி; என்.எஸ்.கே அவர்களின் புதல்வர் நல்லதம்பி