Published:Updated:

டாஸ்மாக் வரலாற்றில் முதல்முறையாக... மது விற்பனை கடும் சரிவு! கிடுகிடுக்கும் நிர்வாகம்

டாஸ்மாக் வரலாற்றில் முதல்முறையாக... மது விற்பனை கடும் சரிவு!  கிடுகிடுக்கும் நிர்வாகம்
டாஸ்மாக் வரலாற்றில் முதல்முறையாக... மது விற்பனை கடும் சரிவு! கிடுகிடுக்கும் நிர்வாகம்

டாஸ்மாக் வரலாற்றில் முதல்முறையாக... மது விற்பனை கடும் சரிவு! கிடுகிடுக்கும் நிர்வாகம்

ச்சநீதி மன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கையால், 3000த்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழக அரசுக்கு சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து விற்பனையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.  

தமிழகத்தில் அரசுக்கு அதிக அளவில் வருமானம் பெற்றுத்தரும் துறையாக இருப்பது டாஸ்மாக்.மது விற்பனையில் கிடைக்கும் பெரிய அளவிலான வருவாய்தான்,தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு இலவச திட்டங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக அரசு நிர்வாகத்தை விமர்சித்து வந்தன.இதனையடுத்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும்,மதுவிலக்கு தமிழகத்தில் உறுதியாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.அதோடு,முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடியும்,விற்பனை நேரத்தைக் குறைத்தும் உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் மட்டும் 3303 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன.ஆனால் தமிழக அரசுத் தரப்பில் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விழுப்புரம், கிருஷ்ணகிரி,அரியலூர்,தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டாஸ்மாக் நிர்வாகம் பெரும் சிக்கலை சில நாட்களாக சந்தித்து வருகிறது.டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தினமும் கிடைத்து வந்த வருமானமும் பாதியாகக் குறைந்துள்ளதால்  மாற்று வழியைக் கண்டுபிடிப்பதில் டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரமாகியுள்ளனர்.

டாஸ்மாக் விற்பனை நிலவரம் குறித்தும்,மூடப்பட்ட கடைகள் நிலவரம் குறித்தும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில நிர்வாகி ராமு நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,"இந்த நிமிடம் வரையில்,மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளாக தரம் குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தவில்லை.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியட்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் காத்திருந்தனர். இப்போது தேர்தலும் ரத்துச் செய்யப்பட்டதால்,நாளை முதல் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் புதிய கடைகள் திறப்பதில் அதிக வேகம் காட்டுவார்கள்.டாஸ்மாக் வருமானத்தைப் பொறுத்தவரையில்,கடந்த 10 நாட்களாக பாதி வருவாய் குறைந்துவிட்டது.முன்பு, நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடி அளவுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் கிடைத்தது.ஆனால் மொத்தமுள்ள கடைகளில் பாதி கடைகள் மூடப்பட்டதால் வருமானமும் பாதியாகக் குறைந்துவிட்டது.

அதே போல மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய சுமார் 7 ஆயிரம் பேர் ஊழியர்களும் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.அவர்களில் பலர் மாவட்டங்கள் தோறும் புதிய இடங்களை டாஸ்மாக் கடைகள் அமைக்க இடம் தேடி வருகிறார்கள். அரசைப் பொறுத்தவரையில் முழுமையாக மதுவிலக்கு கொண்டுவர முயற்சிகள் எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக, ராஜஸ்தான் போன்ற வடமாநில அரசுகள், மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாகத் தரம் குறைப்பதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதை அறிந்துகொள்ளவும் அதைத் தமிழகத்தில் அமல்படுத்துவதில் தான் ஆர்வம் காட்டுகிறது.

ஏன் எனில்,அரசின் பெரிய வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திகழ்கின்றன. இதுவரையில், டாஸ்மாக் விற்பனை சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. குடோன்களில் சரக்குத் தேக்கம் ஏற்பட்டுள்ளது. திறக்கப்பட்டுள்ள கடைகள் முன்பு கூட்டம் அலைமோதுகிறது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது அரசுக்கே கூடுதல் தலைவலிதான்."என்றார்.

குடிநீர்த் தட்டுப்பாடு அதிகமாகி வரும் வேளையில், தமிழக அரசின் கவனம் டாஸ்மாக் பக்கம் மட்டுமே திரும்பியுள்ளது என்றும் மக்கள் நலனைவிட வருவாய்தான் முக்கியம் என அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்றும் பொதுமக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.


- சி.தேவராஜன்                                                

அடுத்த கட்டுரைக்கு