Published:Updated:

'எடியூரப்பாவிடம் இருந்து தொடங்குங்கள் பொன்னார்!' - பா.ஜ.க.வைக் கலாய்த்த 'நமது எம்.ஜி.ஆர்'

'எடியூரப்பாவிடம் இருந்து தொடங்குங்கள் பொன்னார்!' - பா.ஜ.க.வைக் கலாய்த்த 'நமது எம்.ஜி.ஆர்'
'எடியூரப்பாவிடம் இருந்து தொடங்குங்கள் பொன்னார்!' - பா.ஜ.க.வைக் கலாய்த்த 'நமது எம்.ஜி.ஆர்'

'எடியூரப்பாவிடம் இருந்து தொடங்குங்கள் பொன்னார்!' - பா.ஜ.க.வைக் கலாய்த்த 'நமது எம்.ஜி.ஆர்'

ருமான வரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கையை கவனித்து வருகின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள். 'அ.தி.மு.கவைக் காப்பாற்ற வேண்டுமானால், பா.ஜ.க.வை நேரடியாக எதிர்த்தால் மட்டுமே சாத்தியம் என தலைமைக் கழகத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரிலும் பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டோம்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தொடர்ச்சியான சோதனைகளை எதிர்கொண்டு வருகிறது அ.தி.மு.க. சசிகலா தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி அணி தொடங்கியது; சசிகலா சிறை சென்றது; தேர்தல் ஆணைய விசாரணை; இரட்டை இலை முடக்கம்; தேர்தல் ரத்து என அ.தி.மு.க.வைக் குறிவைத்தே, பா.ஜ.க.வின் நடவடிக்கைகள் வேகம் பெற்று வருகின்றன. மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்தாலும், சசிகலா உறவுகள் ஆட்சி பீடத்தை நோக்கி நகர்வதை, பா.ஜ.க தலைமை விரும்பவில்லை என்பதையே சமீபத்திய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. 'இன்னொரு அதிகார மையம் உருவெடுத்துவிடக் கூடாது' என்பதை ஒரு காரணமாக அவர்கள் முன்வைத்தாலும், நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிக் காய்கள் நகர்த்தப்படுவதையும் ஆளும்கட்சியில் உள்ளவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டுகளால், அமைச்சர்கள் முகத்தில் கலவர ரேகை படர்ந்துள்ளது. இந்த அச்சத்தைப் போக்கும் விதத்தில், அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரில், மத்திய அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. 

இன்று காலை வெளிவந்த நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், சாமானியன் என்ற பெயரில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. ' கழகத்தின் மிடுக்கு காவிக்கு உணர்த்து' என்ற தலைப்பில் தொடங்கும் அந்தக் கட்டுரையில், ' தாயில்லா கோட்டை என்பதால் தலைமைச் செயலகத்துக்குள்ளேயே துணை ராணுவப் படையோடு வருமான வரித்துறையை ஏவியது; இப்போது இடைத்தேர்தல் முடிவுகள் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் வெற்றியை முன்மொழிகின்றன என்பது தெரிந்ததும் இடைத்தேர்தலை நிறுத்த அதே வருமான வரித்துறையை அமைச்சர் வீட்டுக்கே அனுப்பிவிட்டு, சோதனை முடிவதற்குள்ளேயே சோதனையில் கிடைத்ததாக ஒரு பேப்பரை ஊடகங்களுக்கெல்லாம் கசியவிட்டு, இந்த அரசின் மீது ஊழல் கறையைப் பூசுவது; அ.தி.மு.க அம்மா வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காகவே ஒரு கட்சியின் தலைவர் வீட்டுக்கு வருமான வரித்துறையை ஏவிவிடுவது என்றெல்லாம் நாகரிகமில்லாத அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது காவிக் கட்சியின் ஆட்சி. அழுத்தங்கள் கொடுக்க கொடுக்க நாம் விலைமதிப்பில்லாத வைரங்களாகத்தான் வெளியில் வருவோம். நம்மைப் பட்டை தீட்டுகிற வேலையைத்தான் பா.ஜ.க செய்துகொண்டிருக்கிறது' என்ற தொனியில் கட்டுரை முடிந்திருக்கிறது. 

இன்னொரு பக்கத்தில், 'எப்போது தொடங்கலாம்? எங்கிருந்து தொடங்கலாம்?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. ' முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளரை ஆயுள் முழுக்க தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும்' என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய வார்த்தைகளை வைத்துக்கொண்டு, அவருக்கு எதிராகக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அதில், 'வாஸ்தவமான பேச்சு பொன்னார். பதஞ்சலி, பகவத் கீதை, யோகா, சமஸ்கிருதம் என சகல வித்தைகளையும் பயன்படுத்தி வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்திய தேசத்தின் அடையாளமான ஒருமைப்பாட்டை ஓட்டுக்காகக் குலைப்பவர்களையும் மத துவேஷங்களை முன்வைத்து மக்களைப் பிளப்பவர்களையும்...

தங்களின் அரசியல் வெற்றிக்காக அதிகாரங்களையும், தன்னாட்சி பெற்ற அதிகார பீடங்களையும் ஆயுதமாக்கிப் பிற கட்சிகளைத் துண்டாடுபவர்களையும் ஆயுள் முழுக்கத் தேர்தலில் நிற்பதற்கே தடை செய்யத்தான் வேண்டும். அப்படிச் செய்ய வேண்டிய தடையை இதோ வாக்காளர்களுக்கு பொது இடத்தில் சிறிதும் கூச்சமில்லாமல் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறாரே உங்கள் கட்சியின் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, அவரிடம் இருந்தே சீக்கிரமாகத் தொடங்குங்கள். தங்கத்தைத் தரம் பார்த்துச் சொல்வதற்கு உரைகல்லுக்குத்தான் உரிமை உண்டே தவிர, துருப்பிடித்த தகரங்களுக்கு அல்ல என்பது போல, உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் தொடங்கி, கோவா, மணிப்பூர் வரை சகல மாநிலங்களிலும் ஜனநாயகத்தை சாகடித்தவர்களான பா.ஜ.க.வினர் இன்னும் பிறருக்குப் போதிக்கும் அளவுக்கு வரவில்லை. அரசியல் பண்பாட்டில் வளரவில்லை என்பதுதான் உண்மை' எனக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

- ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு