Published:Updated:

தமிழிசையின் தசாவதாரங்கள் - ஒரு கலக்கல் ரிப்போர்ட்!

தமிழிசையின் தசாவதாரங்கள் - ஒரு கலக்கல் ரிப்போர்ட்!
தமிழிசையின் தசாவதாரங்கள் - ஒரு கலக்கல் ரிப்போர்ட்!

டி.வி. விவாதங்களில் பங்கேற்று ஸ்டூடியோவை அதிரவிடுவது, போகிறபோக்கில் அஞ்சாறு அறிக்கைகளை விடுவது என எப்போதும் ஒரு குட்டி நியூஸ் சேனலாகவே முன்னணியில் நிற்பார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழிசை தான் தற்போதைய தமிழக அரசியலின் அசத்தல் ஆல்ரவுண்டர். எப்படின்னு கேக்குறீங்களா? படிங்க... புரியும்! (இதெல்லாம் அவருக்கே தெரியுமானு தெரியலை)

டிடெக்டிவ் தமிழிசை

சென்னை அண்ணா சாலையில் ரோட்டின் நடுவில் பள்ளம் உருவாகி காரும் பஸ்ஸும் உள்ளே எட்டிப்பார்த்தது ஊருக்கே தெரிஞ்ச விஷயம். திடீரென மாறின ஈரப்பதத்தால் மண் விலகியதுதான் இதற்குக் காரணம்னு திடீர் சூழலியல் நிபுணர் கம் நிதி அமைச்சர் ஜெயக்குமாரே சொல்லிட்டார். ஊழல் அரசு எனத் திட்டிய பொதுமக்கள் கூட மெட்ரோ திட்டத்தால் வந்த வினையாம்ப்பானு விலகி நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. பின்னர் அங்கே ஏற்பட்ட விரிசலுக்கு அருகிலே போய் சாலையில் உட்கார்ந்து உத்துப் பார்த்து ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க தமிழிசை அக்கா. தியான ட்ரெண்ட்ல இடம்பிடிக்கிற முயற்சியா இருக்குமோ? என்னவோ போங்க... எதிர்காலத்தில் சி.பி.ஐ லெவல் ஆராய்ச்சியெல்லாம் நடத்துவார் என நம்புவோமாக. 

இன்கம்டாக்ஸ் ஆபிஸர்  

விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்ட பெருந்தலைகளின் வீடுகளில் பெரும்பணம் சிக்கிய வருமான வரித்துறைச் சோதனைகளுக்குப் பின்னால் பா.ஜ.க இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 'அமைச்சர்களின் வருமான வரி ஏய்ப்புக்கு வலுவான ஆதாரம் இருக்கிறது. விரோதங்களின் அடிப்படையில் எல்லாம் சோதனை நடக்கலை'ன்னு அடிச்சுப் பேசியிருக்காங்க தமிழிசை அக்கா. இன்கம்டாக்ஸ் ரெய்டு வர்றது தமிழக அமைச்சர்களுக்கும் தென்காசி நாட்டாமைக்குமே தெரியலை. இதுலேர்ந்து என்ன தெரியுது..? ஆங் அதேதான். 

தீர்க்கதரிசி @ இல்லுமினாட்டி 

'அம்மா அணி' தினகரனும், 'புரட்சித்தலைவி அம்மா அணி' ஓ.பி.எஸ்ஸும் ரெண்டு பக்கமும் இரட்டை இலைச் சின்னத்துக்காக அடிச்சுக்கிட்டுக் கிடக்கும்போது  'இரட்டை இலை முடங்கும்'னு ஒரே போடா தமிழிசை போட அதேமாதிரி, சின்னம் முடங்கிடுச்சு. பணப் பட்டுவாடா பரபரப்பா நடக்குறப்போ இவங்க, 'தேர்தல் ரத்து செய்யப்படும்'னு கொளுத்திப் போடும்போது யாரும் நம்பலை. அப்புறம் நிஜமாகவே தேர்தல் ரத்தாகிடுச்சு. இப்போ... 'வருமான வரிச் சோதனை விவகாரத்தில் அமைச்சர்கள் சிக்கியிருப்பதால் அரசு கவிழ வாய்ப்பு இருக்கு'னு பேட்டியைத் தட்டியிருக்காங்க. இதுவும் நடந்துடுமோனு எடப்பாடி பழனிசாமியில் இருந்து அவர் கார் டிரைவர் வரையும் எல்லோரும் கலங்கிப் போய் நிற்கிறாங்களாம். அது மட்டும் நடந்துட்டா அடுத்து ஆட்சிக்கு வர்றவங்க தமிழிசைக்கு மெரினாவில் சிலை எழுப்பினாலும் ஆச்சரியம் இல்லை. 

நடப்பதை எல்லாம் முன்னாடியே சொல்றவங்களை தீர்க்கதரிசினு மட்டும் இல்லை... இல்லுமினாட்டினு கூடச் சொல்லலாம். அப்போ hence proved தமிழிசை ஒரு இல்லுமினாட்டி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இவர், 'விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு நல்வாழ்வு காத்திருக்கிறது' என்று கூறியுள்ளார். இதுவும் அப்படியே நடந்தால் நல்லாத்தான் இருக்கும். 

அண்ணனென்ன தம்பியென்ன..? 

அரசியல் களத்தில் இறங்கிட்டா சொந்தபந்தம் பார்க்காம விட்டு வெளுக்கிறது இந்திய அரசியல் வரலாற்றில் சகஜம். தமிழிசை சௌந்தரராஜன், தன் அப்பா குமரி அனந்தன் காங்கிரஸில் இருக்கும்போதே எதிர்க்கட்சியான பா.ஜ.கவில் இணைந்தவர். அப்போவே அப்படி... இப்போ கேட்கவா வேணும்? தன் சொந்தக் கட்சிக்காரரையே மறைமுகமா வெச்சு அடி அடின்னு அடிக்கிறதுல அக்கா கில்லி. சமீபத்தில் ஆர்.கே நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு கருத்தைச் சொல்ல, அதற்கு அப்படியே எதிர்மறையான கருத்தைச் சொல்லி, எதிர்ப்பு தெரிவித்தவர்களைப் போட்டுப் பொளந்தெடுத்தார். சொந்தக் கருத்துச் சொல்லியே காலத்தை ஓட்டும் கட்சியில் சொந்தக் கட்சி எம்.பி யையே வம்புக்கிழுக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் இந்தியாவில் அக்கா ஒருவருக்கு மட்டுமே இருக்கிறது என்பதை கூறிக்கொண்டு..!

'அமெரிக்க ஜனாதிபதி' தமிழிசை 

ஆயிரம் விமர்சனக் கணைகள் முகத்தைக் குறிபார்த்து வீசப்பட்டாலும் தன்னந்தனி ஆளாகத் தாங்கும் வல்லமை தமிழிசை அக்காவுக்கு உண்டு. 'டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும்'னு பேச, திருப்பூர்ல பெரிய விவகாரமே நடந்து போச்சு. 'அறிக்கை, டி.வி. பேட்டி னு நேரத்தைக் கடத்துனா போதாது; களத்துல இறங்கணும்' என மக்கள் கவுன்ட்டர் கொடுக்க அக்கா கொஞ்சநேரத்துக்கு கப்சிப். இந்தக் கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் அடுத்தடுத்த அறிக்கைகள் வந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனா பாருங்க... அமெரிக்க ஜனாதிபதி லெவல்ல பில்டப் கொடுத்தாலும் நம்ம தமிழிசை அக்கா இதுவரையும் ஒரு கவுன்சிலர் பதவியில் கூட இருந்ததில்லை. பாவத்த! யாரு கண்ணு வச்சாங்களோ?

- விக்கி