Published:Updated:

தானியங்களை காக்கும் குளுமை வீடுகள்!

விகடன் விமர்சனக்குழு
தானியங்களை காக்கும் குளுமை வீடுகள்!
தானியங்களை காக்கும் குளுமை வீடுகள்!

  ஞா.அண்ணாமலை ராஜா

1805 ஆம் ஆண்டு ஆலிவர் இவன்ஸ் என்பவர் நாம் தற்போது பயன்படுத்தும்  'ப்ரிட்ஜ்'ஐக் கண்டுபிடித்தார்.அதன் பிறகு 1902-ஆம் ஆண்டு வில்லியம் ஹாவிலாண்ட்  என்பவர் நாம் தற்போது சொகுசுக்காகப் பயன்படுத்தும் ஏர் கண்டிசனரை கண்டுபிடித்தார்.

ஆனால்  இதற்கெல்லாம் முன்பு 17ஆம் நூற்றாண்டிலேயே கிழக்கிந்திய கம்பெனி கரூரை  ஆண்டபோது, கரூரில் இவ்விரண்டையும் கண்டுபிடித்துவிட்டனர்! ஆனால் அது கருவி  இல்லை வீடு...அதுவும் குளுமை வீடுகள்!

விதைநெல் போன்ற தானியங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்திவைக்கவும் வேனில்  காலங்களில் குளுமையுடன் சொகுசாகவும் ஏதுவானது இவ்வீடுகள்.தமிழரின் குறிப்பாக  கரூவூரார்களின் கட்டடக் கலைக்கு இது மாபெரும் சான்று.

தானியங்களை காக்கும் குளுமை வீடுகள்!

இதைப் பற்றி ஆய்வு செய்த கரூரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் இல.பரணன்  நம்மிடம்,”இந்தியாவில் எங்கும் இல்லாத கரூரில் மட்டுமிருக்கும் கரூரின் வரலாற்றுச்  சான்று இந்தக் குளுமை வீடுகள்.வட ஆற்காடு ஜவ்வாதுமலையில் வசித்த பழங்குடி  மக்களிடமிருந்து கரூருக்கு வந்தது இந்த வீடுகட்டும் முறை.இவ்வீடுகளை அந்த மக்கள்  'பொட்டை' என்று கூறுவார்கள்.

இன்றைய விஞ்ஞான உலகில் நாம் சொல்லவேண்டுமானால் 'ஏர் கண்டிசனர் ஹவுஸ்'  எனலாம். இதன் அமைப்பு நிலத்தில் சுவர் எழுப்பப்படாமல் கருங்கற்களை 1க்கு 1.5 அடி  அகலத்தில் வைத்து நெருக்கி ஊன்றி அதே அளவுள்ள பலகைக்கற்களைப் பரப்பி மேலே  புற்றுமண்ணையும், செம்மண்ணையும்,கம்பு, சோளத் தவிட்டை விட்டுப் பிணைந்து  பூசிமெழுகிவிடுவர்.அந்தப் பலகைக்கற்களின் ஓரங்களிலும், நடுவேயும் மண்சுவர் எழுப்பிக்  கட்டி கூரையோ,நாட்டு ஓடோ வேய்ந்து விடுவர்.சுவர்கள் வழக்கமான அளவில்தான்  இருக்கும்.மரங்களில் கதவுகள் பொருத்திவிடுவர். இதன் உட்புறம் முழுமையான  குளுமையாக மாறிவிடும்.

அப்பகுதிகளில் விதைநெல்,சோளம்,இன்ன பிற தானியங்களையும் மூட்டையாகக்  கட்டியும்,காய்கறிகள் போன்றவற்றையும் வைத்துவிடுவர்.அவைகள் அப்பகுதியிலுள்ள  குளுமையால் பல மாதங்களுக்குக் கெட்டுப்போகாமலும்,அழுகாமலும் இருக்கும்.மேலே  வேயப்பட்டிருக்கும் நாட்டு ஓடும்,சீமை ஓடும் இயற்கையிலேயே குளிர்தன்மை  வாய்ந்தவை.வீட்டு சுவர்கள் நிலத்தில் படாமல் இருப்பதாலும் கருங்கல் தூண்களின் மேல்  இருப்பதால்  வெப்பத்தை ஏற்காமல் இருந்து வீட்டிற்கு குளுமையை  ஏற்படுத்துகிறது.வீட்டின் பயன்பாட்டை வைத்து இதை 'சாமி வீடு' என்று சொல்லி  மக்கள் பாதுகாத்துவந்தனர்.

தானியங்களை காக்கும் குளுமை வீடுகள்!

ஒரு காலத்தில் கரூர் மாவட்டத்திலுள்ள காணியாளம்பட்டி, வெட்டுக்காட்டூர், ஆலமரத்துப்பட்டி, தம்மாநாயக்கன் பட்டி ஆகிய  ஊர்களைச் சுற்றி நிறைய வீடுகள்  காணப்பட்டது. ஆனால் காலப்போக்கில் பராமரிப்பின்றி  பல வீடுகள் இடிந்துபோய்விட்டன.வெட்டுக்காட்டூர்,  தம்மாநாயக்கன்பட்டியில் பட்டியில்  மட்டும் தலா ஒரு வீடுகள் வீதம் உள்ளது” என்றார்.

நாட்டில் விளைகின்ற தானியங்களை சேமித்து வைக்கும் இந்திய உணவுக் கழக  கிடங்குகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதால்,பல லட்சம் டன் தானியங்கள்  மழையிலும்,வெயிலிலும் கிடந்து வீணாவது குறித்த பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை  சென்றுவிட்டது.

அதேப்போன்று பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளிலும்  அவற்றை பதப்படுத்தி வைக்க போதுமான குளிரூட்டி நிலையங்கள் இல்லாமல்,மொத்த  உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதம் வரை வீணாவதாக கூறப்படுகிறது.

இத்தகைய பிரச்னைகளுக்கு இதுபோன்ற குளுமை வீடுகள் ஒரு  வரப்பிரசாதம்.சாத்தியமான பகுதிகளில் இவற்றை கட்ட அரசாங்கமே மக்களை  ஊக்குவித்தால், வீணாகும் உணவு தானியங்களை ஓரளவாவது மிச்சப்படுத்தலாமே!