Published:Updated:

கலாம் வேண்டாம்...பிரணாப் ஓகே!: பா.ஜ. கூட்டணி முடிவு?

கலாம் வேண்டாம்...பிரணாப் ஓகே!: பா.ஜ. கூட்டணி முடிவு?
கலாம் வேண்டாம்...பிரணாப் ஓகே!: பா.ஜ. கூட்டணி முடிவு?
கலாம் வேண்டாம்...பிரணாப் ஓகே!: பா.ஜ. கூட்டணி முடிவு?

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை ஆதரிப்பது தொடர்பாக பா.ஜனதா தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணியில்  கருத்துவேறுபாடு  ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க  அக்கூட்டணி  தீர்மானித்துவிட்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு போட்டியாக அப்துல் கலாமை நிறுத்தும்  நோக்கத்தில்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி முயற்சிகளை  மேற்கொண்டதை தொடர்ந்து இவ்விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

கலாமை மையம்கொண்டு ஜனாதிபதி தேர்தல் சுழலத் தொடங்கியதும்,காங்கிரஸ்  மேலிடம் பதறத் தொடங்கியது.உடனடியாக சில காய் நகர்த்தல்களை  மேற்கொண்டு,மம்தாவுக்கு ஆதரவாக நின்ற முலாயம் சிங்கை அவரிடமிருந்து பிரித்து  தங்கள் வசம் கொண்டுவந்தது.

கூடவே பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி,ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட  தலைவர்களையும் வளைத்தது.

இந்நிலையில்,ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக பா.ஜனதா  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று  முற்பகல் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை நிறுத்த திட்டமிட்டுள்ளதால்,  அவருக்கு மாற்றாக உருவெடுத்துள்ள அப்துல் கலாமை ஆதரிக்கலாமா அல்லது வேறு  யாரையாவது நிறுத்தலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது ஜனாதிபதி தேர்தலில் கலாமை ஆதரிக்க வேண்டாம் என ஐக்கிய ஜனதா தளக்  கட்சித் தலைவர் ஷரத் யாதவ் உள்ளிட்ட சில கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு  தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கருத்து வேற்றுமை காரணமாக முடிவு எதுவும் எட்டப்படாமலேயே கூட்டம்  முடிவடைந்த நிலையில்,நாளை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரணாப் முகர்ஜி,தனக்கே உரித்தான அரசியல் அனுபவம் மற்றும்  சாமர்த்தியமான அணுகுமுறை காரணமாக எதிர்முகாமான பா.ஜனதாவையும் தமக்கு  ஆதரவாக வளைத்துவிட்டார் என்றும், எனவே ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ. கூட்டணி  பிரணாப்பை ஆதரிக்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.