பீகாரில், நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில், லல்லு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ், சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். அவர், 'தனது பெயரில் இருக்கும் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து விபரங்களைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்காமல் ஏமாற்றிவிட்டார்' என்று பீகார் பி.ஜே.பி தலைவர் சுஷில் குமார் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''2010-ம் ஆண்டு அவுரங்கபாத் மாவட்டத்தில் ஏழு பேரிடம் இருந்து ரூ. 53.34 லட்சம் மதிப்பிலான நிலம் வாங்கி இருக்கிறார். அந்த விபரத்தை 2015-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது சொல்லாமல் மறைத்துள்ளார். இதைத் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுபோவோம்'' என்று குற்றம் சாட்டினார்.

பீகாரின் பி.ஜே.பி மாநில துணைத் தலைவர் தேவேஷ் குமார் கூறுகையில், ''2010-ம் ஆண்டு அந்த சொத்தை தேஜ் பிரதாப் யாதவ் வாங்கும்போது அவருக்கு 20-வயதுதான். அந்த வயதில் அந்த நிலத்தை வாங்க ரூ. 53 லட்சம் ரூபாய் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது? இப்போது அந்த சொத்தின் மதிப்பு ரூ. 15 கோடி. அந்த சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். இந்த விவரங்களை எல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு அவர் தெரிவிக்கவில்லை. அவர், பீகாரின் அமைச்சராக இருக்க எந்தத் தகுதியும் இல்லை. அவர்மீது இந்தியத் தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் நிதிஷ்குமார், அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.