Published:Updated:

"கொதிக்கிற எண்ணெயைத் தெளிச்சாங்க..."- திருநங்கை சீதாவின் துயரம் #TransgenderDay

"கொதிக்கிற எண்ணெயைத் தெளிச்சாங்க..."- திருநங்கை சீதாவின் துயரம் #TransgenderDay
News
"கொதிக்கிற எண்ணெயைத் தெளிச்சாங்க..."- திருநங்கை சீதாவின் துயரம் #TransgenderDay

"கொதிக்கிற எண்ணெயைத் தெளிச்சாங்க..."- திருநங்கை சீதாவின் துயரம் #TransgenderDay

வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வழியில் உள்ள ஆரிமுத்து மோட்டூர் பகுதியில்தான் நான் சீதாவை சந்தித்தேன். தமிழகத்திலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்கென 20-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித் தந்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதில் ஒரு வீடு, சீதாவுடையது. அவரது முகத்தில் இழையோடும் அலட்சியமும், புன்னகையும் ரசிக்கத்தக்கதாகவே இருந்தது. என்னை சிறிதுநேரம் கூர்ந்து பார்த்துவிட்டு பேசத் தொடங்கினார். 

“இந்த இடத்துக்குப் பேரு என்ன தெரியுமா..? பாலியல் ஊனமுற்றோர் காலனி. அரசாங்கம் அப்படித்தான் சொல்லுது. திருநங்கையை மூணாவது பாலினமா  உச்சநீதிமன்றமே சொன்னபிறகும் கூட, எங்களை ஊனமுற்றவர்களா நடத்துற ஒரு அரசாங்கத்துக்கிட்ட நாங்க என்னத்தை எதிர்பார்க்கிறது..?" -சீதாவின் பேச்சில் கொஞ்சம் ஆவேசத்தை உணர்கிறேன். 

“இப்போ எனக்கு 40 வயசு. 12 வயசுலயே எனக்குள்ள ஒரு பொண்ணு இருக்கிறதை உணர்ந்துட்டேன். ஆனா, எல்லாரும் என்னை சீனிவாசனாத்தான் பாத்தாங்க. என் சுயரூபம் தெரிஞ்சபிறகு, அடி, உதை, அவமானம்... எல்லாத்தையும் விட்டுட்டு எனக்கான உலகத்தைத் தேடி ஓடி வந்தேன். எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சாச்சு. இன்னைக்கு எனக்குன்னு நாலு உறவுகள் இருக்காங்க. லேசா, தலைசாஞ்சு படுத்திட்டா, `என்னம்மா ஆச்சு'ன்னு கேக்க ரெண்டு புள்ளைங்க இருக்காங்க..."-ஆவேசம் தணிந்து நெகிழ்ச்சியாகப் பேசத் தொடங்குகிறார் சீதா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பெரும்பாலும் திருநங்கைகள் தங்கள் கடந்தகாலத்தைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. பெரிய வித்தியாசமில்லை. எல்லோருடைய அனுபவமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை தங்கள் பாலியல் சிக்கலைப் புரிந்துகொள்ளாமல் தவிப்பது, தங்களுக்குள் இருக்கும் பாலின மாறுபாடைப் புரிந்து கொண்டபிறகு, பொதுவிடங்களில் அதை மறைக்கத் தவிப்பது, மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கும் காலத்தில் குடும்பத்தினரின் சித்திரவதைகளை அனுபவிப்பது, தன்னைப்போலவே பாலின சிக்கல் கொண்ட இன்னொரு உயிரைக் காணத் துடிப்பது, கண்டடைந்ததும் குடும்பத்தை விட்டு விலகி அவர்களிடம் சரணாகதி அடைவது... இப்படித்தான் திருநங்கைகளின் வாழ்க்கைப்பாதை அமைகிறது. லட்சத்தில் ஒருவர் தான் பெற்றோரால் புரிந்து கொள்ளப்படுகிறார். பெரும்பாலானோருக்கு வாய்ப்பது கடும் கசப்பு வாழ்க்கை தான். 

தன் குடும்பத்தை விட்டு விலகி வீதிக்கு வரும் திருநங்கை, இந்த சமூகத்தால் பாலியல் அடையாளமாகத் தான் பார்க்கப்படுகிறார். பிடித்த வேலை பார்க்க, நாகரீகமாக ஒரு வீடெடுத்துத் தங்க, சமூகத்தில் தன் அடையாளத்தோடு வாழ அனுமதிக்கப்படுவதில்லை. மூன்றாம் தரமாகத்தான் இந்தச் சமூகம் திருநங்கைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. 

நூறில் 10 பேருக்குக் கூட திருநங்கைகளுடைய உளவியல் புரிவதில்லை. இந்தப் பாலியல் சிக்கல் என்பது யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. அது பிறவியிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஆணாகப் பிறக்கிற திருநங்கை, வளர, வளர தனக்கேற்பட்ட பாலியல் மாற்றத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறாள். பெண்ணாகப் பிறக்கிற திருநம்பிக்கும் அதுதான் நேர்கிறது. உடலளவில் ஒரு மாதிரியும், உணர்ச்சியும் மனமும் வேறுமாதிரியும் இருக்கிற ஒரு உளச்சிக்கல் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. வளர வளர பாலியல் சிக்கலும் வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் அது தடை உடைத்து வெளிப்படும். தன்னைப்போலவே, தனக்கான சுயத்தைத் தேடி அலையும் மற்றொரு திருநங்கையைப் பார்த்ததும் அன்பு பிரவகிக்கும். எல்லாவற்றையும் தூக்கி எரிந்து விட்டு தனக்கான சமூகத்தைத் தேடி ஓடத்தூண்டும். 

திருநங்கைகள் வாழ இந்த சமூகம் வைத்திருக்கும் இரண்டு வழிகள்... ஒன்று, பிச்சையெடுப்பது... இரண்டாவது, பாலியல் தொழில் செய்வது. இந்த இரண்டையும் கடந்தே திருநங்கை தனக்கான ஒரு சுயத்தை கண்டடைய வேண்டியிருக்கிறது. 

ஒரு திருநங்கைக்கு ஆகப்பெரிய துயரம், ஆகப்பெரிய மகிழ்ச்சி எது..? 

திருநங்கைக்கு தன்னுடலில் ஒட்டியிருக்கும் ஆணுக்கான அடையாளம் தான் பெருந்துயரம். திருநம்பிக்கு தன் பெண்ணுடல். தான் உடலளவில் ஆணாக இருக்கிறோம் என்ற எண்ணமே திருநங்கையை வதைத்தெடுக்கிறது. ஆண் உடலோடு இருக்கும் திருநங்கை, அந்த அடையாளத்தை அறுத்தெறிந்து தன்னைப் பெண்ணாக முழுமைப்படுத்திக் கொள்ளும் தருணத்திற்காக காத்திருக்கிறாள். அதற்காகவே சம்பாதிக்கிறாள். அதற்காகவே உயிர் வாழ்கிறாள். 

இன்னைக்கு அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே அறுவை சிகிச்சை செஞ்சு விட்டுடுறாங்க. போதாக்குறைக்கு, சிங்கப்பூர், தாய்லாந்துன்னு போயி ஆபரேஷன் செஞ்சுக்கிட்டு வந்திடுறாங்க. எங்க காலத்துல அதெல்லாம் இல்லை. வந்தா வாழ்வு, வரலேன்னா சாவு..." விரக்தியாகச் சிரிக்கிற சீதா தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.  

“சுடுகாட்டுக்கு பக்கத்துல இதுக்குன்னே ஒரு வீடு இருக்கும். அங்கே என்னை அழைச்சிட்டுப் போனாங்க. அறுக்கும்போது செத்துப்போனா பொதைக்கிறதுக்கு, மொதல்லயே குழி வெட்டிட்டாங்க... சடங்கு செய்யிற தாயம்மா,  நான், என்னை தத்தெடுத்த அம்மா மூணுபேரு மட்டும் தான் அங்க இருந்தோம். நைட்டு 10 மணிக்கு பூஜைய ஆரம்பிச்சாங்க. `மாத்தா' படத்துக்கு முன்னாடி பழம், பண்டத்தை எல்லாம் வச்சு தோத்திரப்பாட்டு பாடினாங்க. 1 மணி ஆச்சு. என்னோட உறுப்ப ஒரு நூலால இறுக்கிக் கட்டி, கொஞ்ச நேரம் நடக்கச் சொன்னாங்க. சவரக்கத்திய எடுத்து சாமி முன்னாடி வச்சு `ஓ.. மாதாஜி'ன்னு பெருங்குரலெடுத்து கத்துச்சு தாயம்மா. என் அம்மா, தோளுக்குள்ள கையக் கொடுத்து, மொழங்கால இடுப்புல வச்சு புடிச்சிக்கிட்டா. தாயம்மா அந்த சவரக்கத்தியால, முடிச்சிப்போட்டு வச்சிருந்த என்னோட உறுப்பை, மேல ஒரு வெட்டு, கீழே ஒரு வெட்டு. நொடியில துண்டாக்கிட்டா... அந்த அடையாளம் என் உடம்பை விட்டு போனதுல கிடைச்ச நிம்மதி எனக்கு ஏற்பட்ட வலியையெல்லாம் காணாம ஆக்கிடுச்சு...

ரத்தம் ஆறா ஓடுதுன்னு சொல்வாங்கள்ல, அந்த மாதிரி ஓடுது. மயக்கமா, தூக்கமான்னு தெரியல. கண்ணசந்தா தாயம்மா ஓங்கி அறையுறா. அழுகக்கூட திராணியில்ல. சுக்கையும், எலுமிச்சம்பழத்தையும் குடுத்து திங்கச் சொன்னாங்க. கொஞ்ச நேரத்தில என்னை கீழே உக்காரவச்சு, ரத்தம் ஒழுகிற இடத்தில கொதிச்ச எண்ணையை தெளிச்சாங்க. செத்துப் பொழைச்சேன். அஞ்சு தடவை தெளிச்சபிறகு ரத்தம் நின்னுச்சு. அப்புறமா பூண்டுத்தோலும், ஓமமும் போட்டு நெருப்பு பத்தவச்சு, அந்தப் புகையில என் காயத்தை காட்டச் சொன்னாங்க. அன்னைக்கு ராத்திரிப் பூரா தூங்க விடல. தூங்கினாலோ, மயக்கமா படுத்தாலோ உசுரு போயிடுமாம். நாலுநாள் வரைக்கும் இதே மாதிரி ஓடுச்சு... அஞ்சாம் நாள்ல இருந்து 40 நாள் வரைக்கும், நாலடி தள்ளி நிக்க வச்சு, கொதிக்கிற தண்ணிய அள்ளி காயத்தில ஊத்துனாங்க. அதோட மனசுக்குள்ள உறுத்திக்கிட்டிருந்த ஏதோ ஒண்ணு என்னை விட்டுட்டு போயிடுச்சு... பரிபூரணமா திருநங்கை ஆயிட்டேன். என் ஜனங்க, என் உறவுகள்ன்னு நிம்மதியா இருக்கேன்..." உணர்ச்சிவசப்படுகிறார் சீதா. 

திருநங்கைகள் என்றால், அசிங்கமாகப் பேசுவார்கள், வரம்பு மீறி நடந்து கொள்வார்கள் என்பது தான் பொதுவாக இருக்கும் எண்ணம். ஆனால், திருநங்கைகளின் இயல்பு இதுவல்ல. அவர்களின் கட்டுக்கோப்பும், கண்ணியமும் வேறெவரும் கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு மூத்த திருநங்கையைப் பார்க்கும்போது மற்றவர்கள் `பாம்படத்தி' (வணக்கம் அம்மா) என்று தலை குனிந்து வணங்குகிறார்கள். அதை ஆமோதிக்கிற மூத்தவர் `ஜீத்தரோ' (நல்லாயிரு) என்று வாழ்த்துகிறார். மூத்தவர் நின்றால், மற்றவர்கள் அமர்வதோ, பேசுவதோ இல்லை.  
இவர்கள் தெய்வமாக பூஜிக்கும் `போத்ராஜ் மாத்தம்மா' ஆலயம் குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் உள்ளது. திருநங்கைகள் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு சென்று மாத்தம்மாவை வழிபட்டு வரவேண்டும். அதேபோல, கூத்தாண்டவர் கோவிலுக்குச் செல்வதையும் வாழ்வியல் கடமையாக தீர்மானித்து வைத்துள்ளார்கள்.

ஆணைப்போல, பெண்ணைப்போல திருநங்கைகளும் ஒரு பாலினம். ஆனால், அவர்களை ஒரு உயிரினமாகக் கூட மதிக்காத சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று கொஞ்சம் பேர் அடுத்த நிலைக்கு நகர்ந்திருக்கிறார்கள். படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். பாரதி கண்ணம்மா, கல்கி, ஸ்வேதா, `லிவிங் ஸ்மைல்' வித்யா, ஸ்வப்னா, பிரித்திகா போல பல முன்மாதிரிகளும் அங்கே உருவாகியிருக்கிறார்கள். திருநங்கைகள் நம்மிடம் கைதட்டிக் கேட்பது பணத்தை அல்ல...  அவர்களது உரிமையை... பாகுபாடற்ற வாய்ப்புகளை... அதைப் புரிந்துகொண்டு அவர்களை சக மனிதர்களாக நடத்துவோம்..!

-வெ.நீலகண்டன்