Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

தீக்காயத்திலிருந்து நோயாளிகளின் உயிரை மீட்டு எடுப்பதில் நிபுணத்துவம் பெற்றது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை. அந்த மருத்துவமனையின் குளிர்சாதன இயந்திரம் எரிந்து புகைந்ததில் மூன்று நோயாளிகள் மூச்சுத் திணறி உயிர் இழந்தார்கள். மேலும் ஐவர் அபாய கட்டத்தில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏன் இந்த விபத்து? 'குளிர்சாதன இயந்திரத்தைப் பராமரிப்பது பொதுப் பணித் துறையின் பணி' என்று சொல்லி, பொறுப்பைத் திருப்பிவிடுகிறது மருத்துவமனை நிர்வாகம். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரோ, 'தீக்காயத்தில் இந்த மரணங்கள் நிகழவில்லை. புகைமூட்டத்தால்தான் இறந்துபோனார்கள்' என்று சொல்லி ஆறுதல் தேடிக்கொள்கிறார்! கூடுதல் வேதனையாக, 'இதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே சின்னதும் பெரிதுமாக மின் இணைப்பில் தீப்பொறி கிளம்பி பயமுறுத்தி வந்தது' என்கிறது ஒரு தகவல்.

விபத்து நடந்து சுமார் 20 நிமிடங்கள் கழித்தே தன் வேலையைத் தொடங்கி இருக்கிறது தீயணைப்புத் துறை. போக்குவரத்து நெருக்கடியால் தீயணப்பு வண்டி வந்து சேரத் தாமதம் என்று சாக்கு சொல்ல முடியாது. காரணம், மருத்துவமனையை ஒட்டியே இருக்கிறது தீயணைப்பு நிலையம்.

தீ விபத்து நேரும்போது, அதை அணைப்பதற்கான குறைந்தபட்சக் கருவிகள் இந்த மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தனவா? அவற்றைக் கையாள் வதற்கான பயிற்சி அங்கு யாருக்கேனும் அளிக்கப்பட்டு இருந்ததா? விடை தெரியாத கேள்விகள் இவை.                                        

தலைநகரின் புகழ்மிக்க அரசு மருத்துவமனையிலேயே இப்படி நிகழும் என்றால், தொலைதூரத்து ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் நிலைமையை நினைக்கும்போது பயமும் பரிதாபமும் ஒருசேர வாட்டுகிறது.

வழக்குகளில் இருந்து தப்புவதற்கான 'நெஞ்சுவலி' சிகிச்சைக்கு மட்டுமே பெரிய மனிதர்கள் எட்டிப் பார்க்கும் இடமாக இருக்கும் வரையில், அரசு மருத்துவமனைகளில் இந்த அலட்சிய பராமரிப்பு தொடரத்தான் செய்யுமா? அமைச்சர்களும், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் அரசாங்க மருத்துவமனைகளில் மட்டும்தான் சிகிச்சை பெற்றாக வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் மட்டுமே திருந்தக்கூடிய அலட்சியமோ இது?!