Published:Updated:

எந்த தர்மம் வெல்லும்? - அ.தி.மு.க மானஸ்தர்களுக்கு சில கேள்விகள்

எந்த தர்மம் வெல்லும்? - அ.தி.மு.க மானஸ்தர்களுக்கு சில கேள்விகள்
எந்த தர்மம் வெல்லும்? - அ.தி.மு.க மானஸ்தர்களுக்கு சில கேள்விகள்

பிரேக்கிங் செய்திகள், இன்டர்வெல் ட்விஸ்டுகள் என அடுத்தடுத்து நடக்கிற அரசியல் ஸ்டன்ட்கள் எல்லாம் இப்போது சாமானிய மக்களுக்கும் அத்துப்படி. 'நீங்க எந்த எந்த நேரத்துல எப்படி டைப் டைப்பா முழிய வெச்சுக்குவீங்கனு எங்களுக்கு நல்லாத் தெரியும்' என மக்களே கரைவேட்டிகளுக்கு டைமிங் கவுன்டர் கொடுக்கிறார்கள். 

'அரசியல்வாதி பேச்சு சொன்ன அடுத்த நிமிஷமே போச்சு...' என்பதுதான் லேட்டஸ்ட் சொலவடை. முன் தின இரவு ஒரு அணிக்கு ஆதரவாக உயிரைக் கொடுத்துக் கத்தும் ஒருவர் விடிந்தும் விடியாததுமாக எதிரணியில் தஞ்சம் புகுந்து ப்ளேட்டையே திருப்பிப் போட்டுத் தலைகீழாக தோசை சுடுவதெல்லாம் சமீபத்திய தமிழக அரசியலின் சாதனைகள். 

* 'தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்'னு உலகத்தில் எல்லோரையும் விட அதிகமாகச் சொன்ன அ.தி.மு.க அனுதாபிகளே... மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் சேரத் துடிக்கிற இந்தத் தருணத்தில் யாருடைய தர்மம் வென்றது? யாரோ ஒருவருடைய தர்மம் வென்றதானால் சூதுகவ்வியது உங்களில் ஒரு அணியைச் சேர்ந்தவர்களா அல்லது இந்தமுறையும் வழக்கமாக நீங்கள் மொட்டையடிக்கும் மக்களா?

* நீங்கள் தெய்வமாக வணங்கிய 'சின்னம்மா' சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கியதும் 'பன்னீர்செல்வம் ஒரு பச்சைத் துரோகி' என நரம்பு புடைக்க, நா வறழக் கத்திய ரத்தத்தின் ரத்தங்களே... இப்போது உங்கள் வளர்ச்சிக்காக அதே 'பச்சைத் துரோகி'யோடு கைகோக்க ஆயத்தமாகிவிட்டீர்களே... அப்போது சொன்னதற்கு நேர்மாறாக 'விசுவாசம் என்றால் ஓ.பி.எஸ்' என இப்போது அந்தர்பல்டி அடிக்கிறீர்களே... இதற்குப் பெயர் என்ன?

* 'அ.தி.மு.க எனும் தன்மான இயக்கத்தை அழிக்க நினைத்த பன்னீர்செல்வம் அணியினரின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது' என சின்னம்மா குடும்பத்தினருக்கு வெகுவாக முட்டுக்கொடுத்து முதல்வர் பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் இப்போது ஏன் தினகரனை நட்டாற்றில் விட்டுவிட்டு முகத்திரை கிழிக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை நாடுகிறார்?

* சசிகலாவை பொதுச்செயலாளராக்கிய போதும் 'ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் முடிவு' என்று கூறினீர்கள். சசிகலாவை முதல்வராக்க முயற்சித்த போதும் 'ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் முடிவு இது' எனக் கூறினீர்கள். தினகரனைப் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கியபோதும் அதையேதான் சொன்னீர்கள். அவரை ஆர்.கே.நகர் வேட்பாளராகக் களமிறக்கியபோதும் அதையேதான் கூறினீர்கள். இப்போது சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதற்கும் 'ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் விருப்பம்' எனச் சொல்லிவருகிறீர்கள்? அப்படியெனில் இடையிடையே பன்னீர்செல்வம் பின்னால் சென்றவர்கள், தீபா தலைமையேற்க விரும்பியவர்கள் எல்லோரும் தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க போன்ற பிற கட்சியைச் சேர்ந்தவர்களா..? 

* சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் தனி அணியைத் தொடங்கியபோது இதற்குக் காரணம், 'அவருக்கு பா.ஜ.க ஆதரவு இருக்கிறது; தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு இருக்கிறது' எனப் பேசினீர்களே... இப்போது நீங்கள் பன்னீருடன் இணையத் துடிப்பதற்குப் பின்னால் என்ன இருக்கிறது? அது முழுக்க முழுக்கப் பதவி வெறி என எடுத்துக் கொள்ளலாமா..?

* ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு விலகியதால் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை எனச் சொன்ன மானஸ்தர்களே... இப்போது ஏன் தொண்டர்களின் ஆதரவு துளியும் இல்லாததாக நீங்கள் அப்போது சொன்ன ஓ.பி.எஸ் வீட்டுப் பூட்டை ஆட்டிக் கொண்டிருக்கிறீர்கள். 

* சமீபகாலமாக உங்கள் கட்சி நிர்வாகிகள் இரவு நேரங்களில் மட்டுமே ஆலோசனை செய்து அறிக்கை வெளியிடுகிறீர்களே..? உங்கள் கழகத்தின் சகோதர நிறுவனமான(!?) 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' வீக்கெண்ட் விடுமுறை நாட்களில் மட்டும் செயல்படுவதைப் போல நடுராத்திரியில் மட்டும் செயல்படும் முடிவில் இருக்கிறீர்களா..? 

* பணம் கொடுத்து சின்னத்தை வாங்கிவிடலாம் என நினைத்த தினகரனும், பதவிக்காகத் தங்கள் நிலைப்பாட்டை எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிற சீனிவாசனும், எடப்பாடி பழனிசாமியும் ஆர்.பி.உதயகுமாரும் சூழ்ந்ததுதானா உங்கள் கட்சி?

* வருமான வரித்துறை ரெய்டில் வலுவாகச் சிக்கிய விஜயபாஸ்கர் இன்னும் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படவில்லை. சின்னம் வாங்க லஞ்சம் கொடுத்த புகாரில் கட்சிக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்த தினகரனை முழுமையாகப் புறக்கணிக்கவும் இல்லை. மக்கள் நலனும் இல்லை; கட்சி நலனும் இல்லை; பதவி ஆசை மட்டுமே உங்கள் அரசியல் வாழ்வுக்கான ஒரே நோக்கம் எனப் புரிந்துகொள்ளலாமா?   

- விக்கி