Published:Updated:

தமிழிசை செளந்தரராஜனின் சாதனைகளும், வேதனைகளும்! - ரியல் ஸ்டோரி

தமிழிசை செளந்தரராஜனின் சாதனைகளும், வேதனைகளும்! - ரியல் ஸ்டோரி
தமிழிசை செளந்தரராஜனின் சாதனைகளும், வேதனைகளும்! - ரியல் ஸ்டோரி

தமிழக பா.ஜ.க-வின் கட்டதுரை தமிழிசையைப் பற்றிக் கட்டற்ற 'கலாய்'க் களஞ்சியமான கொக்கிபீடியாவில் இருந்து... 

பெயர் : தமிழிசை சௌந்தரராஜன்
இருப்பிடம் : சென்னை
பிறப்பு : ஜூன் 2, 1961.
பொறுப்பு : தமிழக பா.ஜ.க தலைவர்
வகித்த பதவிகள் : தேசிய செயலாளர், சட்டமன்ற வேட்பாளர், நாடாளுமன்ற வேட்பாளர் (அது ஒரு சோகக்கதை).

இவரைப் பற்றி :

தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். மருத்துவரான இவர் க்ளினிக்கில் இருந்ததை விட டி.வி. விவாதங்களில் இருந்த நேரம்தான் அதிகம் என ஒரு உட்டாலக்கடி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இவர், சீரியல் பார்க்கும் பெண்கள் முதல் சுட்டி டி.வி. பார்க்கும் குழந்தைகள் வரை 'அக்கா' என அன்போடு அழைக்கப்படும் சின்னத்திரைப் பிரபலம். 

சாதனைகள் : 

ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி சர்ச்சையில் சிக்கும் கட்சி பா.ஜ.க என்றால், ஆளுக்கு ஆள் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி சிக்கிக்கொள்வது தமிழக பா.ஜ.க. அப்படியான வரலாறு கொண்ட கட்சியில் தமிழகத் தலைவர் பொறுப்பு வகிப்பதற்கே ஜோராகக் கைதட்டலாம். சுப்பிரமணியன் சுவாமி கூறும் கருத்துகளை, 'அது அவருடைய சொந்தக் கருத்து; கட்சியின் கருத்து அல்ல...' எனச் சொல்லிச் சமாளித்துப் பன்னெடுங்காலமாகக் கட்சியைக் கட்டிக்காப்பதே இவரது சீரிய சாதனை. 

தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் கடையநல்லூர் முதல் கஜகஸ்தான் நாட்டின் கரகண்டா நகரம் வரைக்கும் எந்தப் பஞ்சாயத்து என்றாலும் அக்காவின் அறிக்கை தவறாமல் வெளிவரும். மங்கோலியா நாட்டுப் பிரதமரே தமிழிசையின் அறிக்கையைப் பார்த்துவிட்டுத்தான் வெளியூர் கிளம்புவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் தமிழிசைதான் களம் இறங்கப் போவதாக முதலில் பேச்சு அடிபட்டது. தேர்தல் என்றாலே அக்காவுக்குக் கொஞ்சம் அலர்ஜி என்பதால் நாசூக்காகத் தப்பித்து கங்கை அமரனைக் கோத்துவிட்டது நிகழ்கால சாதனை.

வேதனைகள் : 

'தமிழகத்தில் எங்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது...' எனத் தமிழிசை அக்கா பேசியதற்கு, மொத்த மக்களும் 'எங்க... பார்ப்போம்...' என வெட்டவெளியை வடிவேலு திறந்து பார்க்கும் காட்சியை மனதில் ஓட்டிச் சிரித்தது முரட்டு வேதனை. தேசிய பா.ஜ.க-வினர் என்ன செய்தாலும் தமிழகத்தில் அதற்கு முட்டுக் கொடுக்க வேண்டிய தர்மசங்கடத்தில் நெளிகிறார் அக்கா. இமான் அண்ணாச்சி டேபிள் மேட் விற்றதைப் போல, 'தெருமுக்கு டீக்கடைக்காரர் கொடுத்தாச்சு... பால்காரர் கொடுத்தாச்சு... நீங்க எப்போ மிஸ்டுகால் கொடுக்கப் போறீங்க...' என எம்.எல்.எம் கம்பெனி அளவுக்கு இறங்கி ஆள் பிடித்தது அவரே மறக்க நினைக்கும் வேதனை. அத்தனை பெரிய தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தாலும் தமிழிசை அக்கா இதுவரை ஒரு கவுன்சிலராகக் கூட இருந்ததில்லை என்பது உச்சபட்ச அவலம். 

உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வென்றதற்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடும் 'தங்கத்தாமரை' தமிழிசை அக்காவுக்குள் தமிழகத்தில் ஓர் இடத்தையும் பிடிக்கவில்லை என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறதாம். 'மோடியிடம் செய்கிறார்கள் நமஸ்காரம்.. வீட்டில் போய் செய்கிறார்கள் பலகாரம்' என அடுக்குமொழி டி.ஆர் கூட அசால்ட்டாகப் போட்டுப் பொளக்கும் அளவுக்கு அக்காவின் அரசியல் கிராஃப் அத்தனை வீக். 

சோதனைகள் :

ஸ்டாலினின் கருத்துக்குப் பதிலளித்த தமிழிசை, 'பா.ஜ.க எப்படியாவது குட்டிக்கரணம் அடித்துத் தமிழகத்தில் உறுதியாகக் காலூன்றும். தி.மு.க காரர்களை விட நாங்கள் நன்றாகவே குட்டிக்கரணம் அடிப்போம்' எனக் கூறினார். 'ஏம்மா... குட்டிக்கரணம் அடிக்க சர்க்கஸ் கம்பெனியா நடத்துறீங்க. தெரிஞ்சுதான் பேசுறீங்களா..?' எனக் கூட்டத்தில் இருந்தவர்களே கலாய்த்தது ரொம்பவே சோதனை. 
பா.ஜ.க-வை வம்பிழுப்பதை குஷ்பூ நிறுத்த வேண்டும் எனச் சின்னப்புள்ளைத்தனமாக கம்ப்ளெய்ன்ட் செய்வதைப் பார்த்தாலே அக்காவுக்குக் குழந்தை மனசு எனப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வம்புக்கிழுத்து டார்ச்சர் செய்கிறார்கள் என அவ்வப்போது நொந்துபோய் கண் கலங்குகிறாராம். 

வைரல் வாக்கியங்கள் :

'பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.' (எப்போ..?)
'அது அவரது தனிப்பட்ட கருத்து.' (அதுசரி..!)
'நாங்க இருக்கோம்.' (நாங்க இருக்கணும்ல)

மேலும் பார்க்க : 

குழப்பங்களும், குந்தகங்களும் - தமிழக பா.ஜ.க
சொந்தக்கருத்து சோகம்
'என்னம்மா என்னாச்சுமா?' - விவாத நிகழ்ச்சி

மேலும் படிக்க : 

டெலிபோன் டைரக்டரி
மங்கம்மா சபதம்

டயல் செய்ய : 

1800-266-2020 
(இன்றிலிருந்து நீங்களும் பா.ஜ.க உறுப்பினர். அரே ஓ சம்போ...)

- விக்கி