Published:Updated:

பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க.

பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க.
பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க.

மிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியையே அந்தப் பதவியில் தொடர வைப்பதா அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வர் பதவியில் அமரவைப்பதா என்ற ஆலோசனையில் பாஜகவின் டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.கவுக்குள் நடக்கும் பதவி,அதிகாரப்பகிர்வு மோதலில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா என்று தி.மு.க. எதிர்பார்ப்பதைவிட பா.ஜனதா எதிர்பார்ப்பதுதான் அதிகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க.கட்சிக்குள்ளும் நடக்கும் உச்சக்கட்ட குழப்பங்கள், தமிழகத்தின் மாநில ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க. அணியினர் தங்களுக்குள் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள குழுக்கள் அமைத்து விவாதிக்க முடிவெடுத்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு அவர்களின் குழப்பங்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது.ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியினர் தமிழக முதல்வர் பதவியையே குறிவைத்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. 

இதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே முதல்வர் பதவியில் நீட்டிக்க செய்ய பா.ஜனதா டெல்லி மேலிடம் விரும்புவதாகவும் இப்போது செய்திகள் அடிபடுகின்றன.அதற்கு உதாரணமாக,கார்களில் உள்ள சிவப்பு விளக்கை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே தலைமை செயலகத்தில் தனது காரில் இருந்த சிவப்புவிளக்கை அகற்றினார்.அங்கேயே செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தி பரபரப்பினைக் கூட்டினார்.அதனையடுத்து வரும் திங்கள் அன்று டெல்லியில் நடக்கும் 'நிதி ஆயோக்'கூட்டத்திலும் பழனிசாமி கலந்துகொள்கிறார்.அதில்,விவசாயிகள் பிரச்னை குறித்தும்,தீர்வு குறித்தும் அவர் பேசி,பிரதமரிடம் தீர்வைப் பெற்றுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்றிய மோடி!

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை கோரிக்கைகள் வைத்து இருந்தார்.அதை நீண்டகாலமாகக் கிடப்பில் வைத்திருந்த மத்திய அரசு,தற்போது நிறைவேற்றியுள்ளது.இது,எடப்பாடியின் அணுகுமுறைக்கு மோடி கொடுத்த பரிசு என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.இதே ஆதரவு நிலையை தமிழக முதல்வர் எடப்பாடிக்குக் கொடுக்க பிரதமர் விரும்புகிறார் என்பதற்கு இது உதாரணமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
            
போயஸ் கார்டனில் பூஜை!

ஜெயலலிதாவின் மரணம் அ.தி.மு.க. கட்சிக்குள் பிளவுகளையும், அரசு நிர்வாகத்தில் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கை மீண்டும் அ.தி.மு.கவில் ஓங்கியுள்ளது.தினகரன் அணி கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருக்கிறது. தினகரனே 'நான் ஒதுங்கிக்கொள்கிறேன்' என்று தடாலடியாக அறிவித்துவிட்டு அமைதியாகிவிட்டார்.இதனால் அவருக்குப் பின்னால் இருந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் என்று அனைத்து முக்கிய நபர்களும் தங்களுக்குள் இரவு பகலாகக் கலந்து பேசி, ஓபிஎஸ் தலைமையை எப்படி ஏற்பது,அவர் தலைமையில் தமிழக அரசு அமைந்தால் தங்களுக்கு எந்த வகையில் ஏற்றம் தரும் என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் கட்சிக்குள்ளும், ஆட்சி அதிகாரத்திலும் நிலவும் குழப்பங்களுக்கு காரணம் ஜெயலலிதா மரணம்தான். எனவே அவரின் ஆன்மாவை சாந்தப்படுத்தும் வகையில்,அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பூஜைகள் நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "ஜெயலலிதாவின்  ஆவி தொடர்பான பயம் டிடிவிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே,சசிகலா சிறை செல்ல நேர்ந்தது என்றும், மகாதேவன் மரணம் நிகழ்ந்தது என்றும், ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும் மன்னார்குடி உறவுகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சக்தி வாய்ந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் மன்னார்குடி உறவுகள். பரிகார பூஜைகளுக்காக கேரள மாநில மாந்திரீகர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளனர். அவர் விரைவில் போயஸ் கார்டன் இல்லத்தில்,பூஜை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்." என்றார்.  

- சி.தேவராஜன்