Published:Updated:

தெர்மாக்கோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூவிற்கு மேலும் சில முத்தான யோசனைகள்..!

தெர்மாக்கோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூவிற்கு மேலும் சில முத்தான யோசனைகள்..!
தெர்மாக்கோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூவிற்கு மேலும் சில முத்தான யோசனைகள்..!

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமால் தடுக்க கூட்டுறவுத்தறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூர்மையாக சிந்தித்து ஒரு புதுமுயற்சி எடுத்துள்ளார். அதாவது, அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் குழந்தைகள் ஸ்கூல் ப்ராஜெக்ட் செய்ய பயன்படுத்தும் தெர்மாகோல் அட்டைகளை மொத்தமாக வாங்கி மூடியுள்ளார்.

ஆனால், பத்து லட்ச ரூபாய் செலவில் வாங்கி பரப்பிய தெர்மாகோல் அட்டைகள் பத்தே நொடிகளில் பறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காத்திருந்து ஏமாந்தால் மனம் எந்தளவிற்கு துன்பப்படுமோ அதைவிட பல மடங்கு அமைச்சரின் மனம் துன்பத்தில் துவண்டு போயிருக்கும் என எங்களால் உணரமுடிகிறது. அதனால், அவருக்கு எங்களால் முடிந்த சில யோசனைகள்....

ஒருமுறை ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னாள் சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா என்பவர் தனது வாயில் கட்சி கொடியை செருகி, நீச்சல் குளத்தில் மிதந்தவாறே `ஜலபிரதட்சணம்' செய்து கொண்டாடினார். அவர் வழியை பின்பற்றி கூட்டுறவுத்துறை அமைச்சரின் ஆதரவாளர்கள் வாயில் கொடிக்கு பதிலாய் குடையை செருகி,அவர்களை ஆற்றில் மிதக்கவிட்டு, ஆற்றுத்தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கலாம். இதற்காக  கருப்பையாவை கூட்டிவந்து சிறப்பு பயிற்சி கொடுக்கச்சொல்லலாம்.

மதுரையின் வீதிகளில் கிரம்மர் சுரேஷ் பொறித்து வைத்த போஸ்டர்களையும், பேனர்களையும் அள்ளிப்போட்டு எடுத்துவந்து ஆற்றின் மேற்பரப்பில் விரித்துவிடலாம். வைகை மட்டுமல்ல... கோதாவரி, காவேரி நதிகளையும் சேர்த்து மூடும் அளவிற்கு பேனர்கள் கொட்டிக்கிடக்கின்றன. சும்மா முயற்சி பண்ணுங்க. முயற்சி திருவினையாக்கும், முயன்றால் சாதிக்கமுடியும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே இருப்பதுபோல் கலர் கலர் குடைகளால் பந்தல் வேயலாம். குறிப்பாக, டோரா, டாம் அண்ட் ஜெரி படம் வரைந்து கைப்பிடியில் விசில் தொங்கும் குடைகளாய் வாங்கிவந்து வேயலாம்.சும்மா கலர்ஃபுல்லாக இருக்கும்.

ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனின் ஆட்கள் அணிந்து வேலைப்பார்த்த தொப்பிகளை மலிவு விலைக்கு பேரம் பேசி செகண்ட் ஹேன்டில் வாரிப்போட்டு லாரியில் எடுத்துவரலாம். அவற்றையெல்லாம் ஆற்றின் மேல் தூக்கி எறிந்தால், அதை பயன்படுத்திக்கொண்டு ஆற்றுத்தண்ணீர் சூரியனிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளும். மேலும், தொப்பித்தூக்கி பாறை கொடைக்கானலில் தான் உள்ளது என்பதால் எறியும் தொப்பிகளை ஆறு எங்கே ரிட்டர்ன் எறிந்துவிடுமோ என பயப்படவும் தேவையில்லை.

ஆறு பாயும் இடத்தில் வெயில் கொளுத்துவதால்தான் அத்தனை பிரச்னையும். எனவே, ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எண்ணூர் எண்ணெய்க் கழிவுகளை அள்ளிய வாளிகளைக் கொண்டோ அல்லது கொட்டாங்குச்சிகளைக் கொண்டோ ஆற்று நீரை அள்ளிக்கொண்டு போய் நிழலான பகுதியில் ஊற்றி வைக்கலாம்.

கோடை காலங்களில் நமது உடலிலுள்ள நீரை சூரியன் ஸ்ட்ரா போட்டு உறியும் என விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து தப்பிக்க குளுக்கோஸ் சாப்பிட சொல்வார்கள். அதனால், சூரியனை எதிர்த்து போராட ஆற்று நீரில் டன் டன்னாக குளுக்கோஸ் வந்து கொட்டிவிடலாம். முடிந்தால் வியர்க்கூறு பவுடரையும் சேர்த்து கொட்டிவிடலாம்.

விஷால் வேட்டையாடி பிடிக்கும் திருட்டு வி.சி.டிக்களை எல்லாம், அனுமனுக்கு வடை மாலை கோர்ப்பது போல் ஒன்றாக கோர்த்து ஆற்றின் மேல் மிதக்கவிடலாம். குறிப்பாக, டிவிடியை மல்லாக்க படுக்கப்போட்டால் சூரியக்கதிர்களை பிரதிபலித்து வானத்திற்கே ரிட்டர்ன் அனுப்பிவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிம்பிளாக ஒரு யோசனை. `கையிலேயே வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக...' கட்சியிலேயே வைகை செல்வனை வைத்துக்கொண்டு எதற்கு திண்டாடவேண்டும். அவரையே கூப்பிட்டுக் கேட்டால் அருமையான யோசனையை சொல்லிவிட்டுப்போகிறார். கடைசியாக, எல்லா வேலையையும் சிறப்பாக செய்துமுடித்துவிட்டு `உதயசூரியனின் கொடும் சதியில் இருந்து வைகை ஆற்றை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்' என அறிக்கை கொடுத்துவிட்டு மூட்டை முடிச்சோடு வீட்டுக்கு கிளம்பலாம்.

-ப.சூரியராஜ்