Published:Updated:

'மிரட்டப்பட்டாரா அய்யாகண்ணு?' போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட பின்னணி என்ன?

விகடன் விமர்சனக்குழு
'மிரட்டப்பட்டாரா  அய்யாகண்ணு?'  போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட பின்னணி என்ன?
'மிரட்டப்பட்டாரா அய்யாகண்ணு?' போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட பின்னணி என்ன?

'மிரட்டப்பட்டாரா அய்யாகண்ணு?' போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட பின்னணி என்ன?

விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர் ,ஒவ்வொரு நாளும் விதவிதமான முறைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தனர். எலிக்கறி தின்றும், பிச்சைப் பாத்திரம் ஏந்தியும், மொட்டை அடித்தும் எனப் பல்வேறு விதங்களில் விவசாயிகள் தங்களது அவல நிலைமையை எடுத்துரைத்துப் போராடினர்.  

உச்சகட்டமாக பிரதமர் அலுவலகம் எதிரே கடந்த 10-ம் தேதி திடீரென நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். நிர்வாணப் போராட்டம் அனைவர் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து, "நிர்வாணம் ஆனது விவசாயிகள் அல்ல...மத்திய அரசின் செயல்பாடு" என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாகக் கடந்த 22 -ம் தேதி சனிக்கிழமை மனிதனுடைய சிறுநீரைக் குடித்து  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த சூழலில் டெல்லி சென்ற தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக  விவசாயிகள் அறிவித்துள்ளனர். 41 நாட்களாக உயிரோட்டமாகப் போய் கொண்டிருந்த போராட்டத்தை திடீரென விவசாயிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது அனைத்து தரப்பிலும் கேள்வியை எழுப்பியுள்ளது 

இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எங்களைச் சந்தித்துப் பேசினார். எங்கள்  தரப்பில்  வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பிரதமரிடம் எடுத்துக்கூறி தீர்வு காண உதவுவதாக முதல்வர் உறுதி அளித்தார். இது தவிர, தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை  கூட்டி விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்புக்கு  அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ‘ஜி .கே வாசன் , நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ்  ,இயக்குநர் பாண்டிய ராஜ் உள்ளிட்டோர் எங்களைச் சந்தித்துப்பேசினர் ."நீங்கள் படுகிற துயரத்தைப் பார்ப்பதற்கு மிகுந்த கவலை அளிக்கிறது.எனவே போராட்டத்தை முடித்துக் கொண்டு தமிழக திரும்புங்கள். உங்களுக்கு ஆதரவாக இருந்து பிரச்னையைத் தீர்க்க  நடவடிக்கை எடுக்கிறோம்' என்று கூறினார்கள்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு போராட்டத்தைத்  தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.எங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் மே 25 -தேதிக்கு பிறகு மீண்டும் போராட்டத்தைத்  தீவிரப்படுத்த உள்ளோம் " என்றார் . 

"போராட்டத்தைத்  திரும்ப பெறும்படி ஏதேனும் அழுத்தம் இருந்ததா?" 

"நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது அதிர்ச்சி அடைந்த போலீசார் எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக போலீசார் எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். ‘யாராவது ஒருவனைக் கழுத்து அறுத்துக்கொண்டு வந்து இங்கே போட்டு விடுவோம்.ஒழுங்காகக் கலைந்து செல்லுங்கள்’ என்று மிரட்டினார்கள். ‘302-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உங்களை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டு மற்றவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம்’ என்று மிரட்டினார்கள். இப்படி பலவகையிலும் மிரட்டல் விடுத்துப் பார்த்தார்கள்.நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வில்லை.தற்போது தமிழக அரசியல் தலைவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தப் போராட்டத்தை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளோம்.மத்திய அரசு   எங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்றவில்லை என்றால் எங்களுடைய போராட்டம் தொடரும்" என்றார்    

 விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து செய்தி சேகரித்து வழங்கிய டெல்லி செய்தியாளர்கள் சிலரிடம் பேசிய போது ,"போராட்டத்தை திரும்ப பெறும்படி தொடர்ந்து அழுத்தம் இருந்தது.அதன் காரணமாக கூட போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கலாம் "என்று தெரிவித்தனர். 

-கே.புவனேஸ்வரி 

அடுத்த கட்டுரைக்கு