Published:Updated:

‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்

‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்
‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்

‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்

ள்கட்சிப் பூசல், ஆர்வக்கோளாறால் முடிவு எடுக்கிறார், மற்ற கட்சியினரிடம் பணம் பெற்றார், கணவரை தனியாகத் துரத்தி விட்டார்... என்றெல்லாம் எத்தனையோ குற்றசாட்டுகள் தன் மீது கூறப்பட்டாலும், "நான் முதலைமைச்சர் ஆகியே தீருவேன்' என வைராக்கியத்துடன் தெரிவித்து வருகிறார் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின்' பொதுச்செயலாளர் தீபா. 

இந்நிலையில், "பதிவு செய்து கட்சி ஆரம்பித்தவர்கள் மட்டும்தான் அரசியல் வாழ்க்கை பற்றிக் கனவு காணத் தகுதி படைத்தவர்கள். ஆனால், இன்றுவரை கட்சியைப் பதிவு செய்யாமல், தன்னை நம்பி வரும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் வரை நன்கொடையாகப் பெற்று, அந்தப் பணத்தை மோசடி செய்திருக்கிறார் தீபா" என்று அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் ஜானகிராமன்.

இந்த மோசடிப் புகார் குறித்து ஜானகிராமனிடம் பேசியபோது "நான் பல வருஷமா அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசியாக இருந்தவன். முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தவுடன் கட்சி இரண்டாக உடைந்தது. எனக்கு யார் பக்கமும் சேரப் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அ.தி.மு.க-வை காப்பாற்ற இவர்தான் சரியான நபர் என்று கருதி பலர், தீபாவின் பின்னால் படையெடுத்துச் சென்றார்கள். நானும் அந்த எண்ணத்தில்தான் தீபாவுக்கு ஆதரவு அளித்தேன். உருவ ஒற்றுமை, இவரின் வேகம், அரசியல் குறித்த பார்வை ஆகிய அனைத்தும் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால், போகப்போகத்தான் தெரிந்தது. ஒரே உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும் புலி வேறு; பூனை வேறு என்பது. தீபா தலைமையிலான கட்சியில் உறுப்பினர் ஆவதற்கு ஆரம்பத்தில் 20 ரூபாய் கொடுத்து ஒரு மனுவை வாங்கி எழுதிக் கொடுத்தோம். பின்னர் தீபா பேரவை ஆரம்பித்ததும் நிர்வாகிகள் பட்டியலைத் தயார் செய்தார். அதில் என்னையும் சேர்த்து மொத்தம் 24 பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டோம். 'ஒவ்வொருவரும் கண்டிப்பாக நன்கொடை கொடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். நான் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தேன். என்னைப்போல ஒவ்வொருவரும் அவரவர் வசதிகேற்ப பல லட்சங்களைக் கொடுத்தனர். இது தவிர, கட்சியோட எல்லா செலவுகளையும் ஒவ்வொருத்தர் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்க.. ஆனால், ரசீது ஏதும் கொடுக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலின்போது, நான் மட்டுமே ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு பண்ணிருக்கேன்.

அதுக்கப்பறம் ஏற்கெனவே உள்ள உறுப்பினர்களை மறுபடியும் ஃபார்ம் வாங்கி உறுப்பினராகச் சேர்க்கணும்னு சொல்லி இரண்டரை லட்சம் மனுக்களை கொடுத்தாங்க. ஒரு மனுவோட விலை 20 ரூபாய். நான் மட்டும் 5,000 ஃபாரம் வாங்கி எங்க தொகுதியில இருக்குற தொண்டர்களிடம் கொடுத்து, நிரப்பிக்கொடுக்கச் சொன்னேன். இந்த நேரத்துலதான் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ரத்தான அடுத்தநாளே தீபா பேரவை கேன்சல் ஆயிருச்சி. அதுபற்றி எந்தவொரு பதிலும் இப்போ வரைக்கும் வரவில்லை. ஆனால், தீபா பேரவை ரத்தானது குறித்து ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இருந்து பேரவையின் செயலாளர் ராஜா பேருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதை யாருக்கும் தெரியாம தீபா மூடி மறைச்சிட்டாங்க.

கட்சி வளர்ப்பு நிதி என்ற பெயரில் திரும்பவும் பணம் பிடுங்கும் அத்தியாயம் நடந்துச்சி. எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தேன். அரசியலைமைப்பு ரீதியாகத்தான் தீபா பேரவை நடந்திட்டிருக்கு, ‘சங்க விதிகளின்படி, எந்த ஒரு பதிவும் உங்க பேரவைக்கு இல்லை என்பதை அறிந்தேன். இதுபற்றி ஏற்கெனவே உங்க செயலாளர் ராஜாவுக்கு மனு அனுப்பிட்டோம்’ என்று ரெஜிஸ்டர் ஆபிஸ்ல சொல்லிட்டாங்க. அப்போதான் தெரிஞ்சுது ஏற்கெனவே தீபா பேரவையில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்பட்ட ராஜாவும், அவரது மனைவி சரண்யாவும் இன்னமும் அதே பொறுப்புகளில் நீடிப்பது. அவர்களை இன்னமும் தீபா நீக்கவில்லை. நீக்கிட்டேன்னு சொன்னது எல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று எனக்குப் புரிஞ்சுது. நான் தீபாகிட்ட வந்து இதுபற்றிக் கேட்டேன். ஆனால், ஒரு பதிலும் சொல்லவில்லை. இத்தகவலை நான் எல்லார்கிட்டயும் சொன்னேன். பேரவை உயர்மட்டக் குழுவில் இருந்த 12 பேர் தீபாவை விட்டுப் பிரிஞ்சு போயிட்டாங்க. இவங்க கட்சி நடத்தல, கட்சிங்கற பேருல தன்னை நம்பி வந்த தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் சிட் ஃபண்ட் கம்பனி மாதிரி பேரவையை நடத்தி இதுவரை பல கோடி மோசடி செஞ்சுருக்காங்க. எனவேதான், போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார். 

மேலும், "அவங்களுக்குத் தேவை பணம். அதை மற்ற கட்சிகளிடம் இருந்து ராஜா, சரண்யா வாங்கினார்கள்.  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து தீபா பணம் வாங்கினாங்க. இன்னொரு பக்கம், பணம் பறிக்க தன் கணவரை தனியாகக் கட்சி ஆரம்பிக்கவைத்து, சும்மா நடிக்கச் சொல்லியிருக்காங்க. மொத்தத்தில் இவர்கள் அனைவரும் பணம் பறிக்கும் நாடகக் கும்பல். நான் இப்போ புகார் கொடுத்தது என் பணம் எனக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மட்டும் இல்லை. இனிமேலும் தீபாவை நம்பி யாரும் பணத்தை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'என்னை யாருன்னே தெரியாது. இதுவரைக்கும் என்னைப் பார்த்ததே இல்லைன்னு' தீபா சொல்லியிருக்காங்க. நான் அவங்க கட்சியில சேரும்போது அவங்களே எடுத்த புகைப்படம், ஆர்.கே நகர்த் தொகுதியில்  பிரச்சாரத்தின்போது, ஒரே வண்டியில பக்கத்துல பக்கத்துல நின்னு பிரசாரம் செஞ்சது எல்லாம் மக்களுக்கு தெரியும்." என்றார்.

இப்படி ஏகப்பட்ட குற்றசாட்டுகளினால் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' ஆரம்பித்த மிகக்குறுகிய காலத்திலேயே அரசியல் பயணத்தில் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தீபா தன் அரசியல் பயணத்தின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

படங்கள்: ஹரிஹரன்

அடுத்த கட்டுரைக்கு