Published:Updated:

கூட்டணி மாற்றம் ஏற்படலாம்: கருணாநிதி

கூட்டணி மாற்றம் ஏற்படலாம்: கருணாநிதி
கூட்டணி மாற்றம் ஏற்படலாம்: கருணாநிதி
கூட்டணி மாற்றம் ஏற்படலாம்: கருணாநிதி

சென்னை: முன்னாள் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் மீது   அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டித்து வருகிற ஜூலை 4 ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மத்தியில் ஆளும்  கூட்டணி ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் திமுக  தெரிவித்துள்ளது.

திமுக முன்னணி நிர்வாகிகள்  பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது   நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து, இன்று கூடிய திமுக செயற்குழுவில்,    விவாதிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் திமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளை போடுவதாக   கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மான்ம் நிறைவேற்றப்பட்டது.

சிறை நிரப்பும் போராட்டம்

மேலும் அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டித்து வருகிற   ஜூலை 4 ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம்   நிறைவேற்றப்பட்டது.

" திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட  செயலாளர்கள்,  திமுக முன்னணியினர் மீது  குண்டர் சட்டம் போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுப்பதையும், இம் என்றால் சிறைவாசம் என்ற ஜார் மன்னன் ஆட்சியை நினைவுபடுத்துவது போல் கைது செய்வது - சிறையில் வைப்பது - குண்டர் சட்டத்தை ஏவுவது போன்ற பழி வாங்கும் போக்கினையும் இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இதையெல்லாம் கண்டித்து - நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்து வெற்றி காணவும் - களம் கண்டு என்றைக்குமே கலங்காத திமுகவினர் ஒன்று திரண்டு அறப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை இந்தச் செயற்குழு சுட்டிக்காட்டுவதோடு; அதற்கான சிறை நிரப்பும் போராட்டத்தை வருகிற ஜுலை 4 அன்று காலை தொடங்கி நடத்துவதென செயற்குழு தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னேற்பாடாக மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டம் மற்றும் பெருநகரங்களிலும் அறப்போர் விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்துவது என்றும் இச்செயற்குழு முடிவு செய்கிறது" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டணி  மாற்றம்

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி,  கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது,  மத்தியில் ஆளும் கூட்டணி  ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், கைது செய்யப்படும் திமுகவினர் நீதிமன்றம்  சென்று நியாயம் பெறுவதை தடுக்க,அவர்கள் மீது குண்டர் சட்டத்த்தின் கீழ்  வழக்குப்போடுவதாகவும்  குற்றம் சாட்டினார்.

தமிழக மீனவர்கள் மீது வேண்டுமென்றே இலங்கை அரசு வழக்குப்போடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் கருணாநிதி தெரிவித்தார்.