Published:Updated:

கொடநாடு கொள்ளையனின் வாக்குமூலம்... கேமரா கண்கள்... ஜொள்ளு அதிகாரி! #NewsChat

கொடநாடு கொள்ளையனின் வாக்குமூலம்... கேமரா கண்கள்... ஜொள்ளு அதிகாரி! #NewsChat
கொடநாடு கொள்ளையனின் வாக்குமூலம்... கேமரா கண்கள்... ஜொள்ளு அதிகாரி! #NewsChat
கொடநாடு கொள்ளையனின் வாக்குமூலம்... கேமரா கண்கள்... ஜொள்ளு அதிகாரி! #NewsChat


கொடநாடு கொள்ளை கும்பல் வாக்குமூலம்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. அங்கு, ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் ஆகியோர் காவலாளிகளாகப் பணிபுரிந்து வந்தனர். கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் ஓம் பகதூர். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   இதனிடையே, கொடநாடு எஸ்டேட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனரா அல்லது முக்கிய ஆவணங்களைக் கடத்த முயன்றனரா என போலீஸார் தீவிர விசாரணை  நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஓம் பகதூரைக் கொன்றது, உடன் இருந்த கிருஷ்ண பகதூர்தான். இருவருக்குள் முன்விரோதம் இருந்ததாக ஒரு தகவலை போலீஸ் தெரிவித்தது. கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலைசெய்துள்ளார். பிறகு, அந்தக் கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். ஆனால், அந்தக் கையுறையில் ஒரு விரல் மட்டும் எரியவில்லை. இந்தத் தடயத்தைக் காவல்துறை கைப்பற்றி, ஆய்வுசெய்தது. அப்போது, கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் அது பொருந்தியதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது. 

இதையடுத்து, கிருஷ்ண பகதூரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக செய்தி பரவியது. இதற்கிடையில், கேரள போலீஸாரிடம் ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களின் ஸ்பெஷல் விசாரணையில், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். “விலை உயர்ந்த நகைகள், பணம் இருக்கும் என்று கணக்குப்போட்டு 11 பேர் சென்றோம். ஆனால், அங்கே சின்னச்சின்ன பொருட்கள்தான் சிக்கின. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் பொறித்த கை கடிகாரம்தான் பெரிய அயிட்டம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வாசலில் நின்ற காவலாளிகளில் ஒம் பகதூர் என்பவன் எங்களை மூர்க்கத்தனமாக தாக்கினான். வேறு வழியில்லாமல், அவனைக் கொன்றோம். இன்னொருவன், கிருஷ்ண பகதூர் பணி நேரத்தில் அங்கிருந்த லாரியின் பின்புறம் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். கீழே கிடந்த கம்பியால் அவனையும் தாக்கினோம். ரத்தவெள்ளத்தில் மிதந்தான். அப்புறம்தான்...உள்ளே புகுந்தோம். பெரிய ஏமாற்றத்தோடு கேரளா திரும்பினோம். எதிர்பாராதவிதமாக போலீஸில் சிக்கிக்கொண்டோம். எங்களுடன் வந்த ஐந்து பேர் பிரிந்துசென்றுவிட்டனர். எங்கேயிருககிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்களாம்.

கேரள போலீஸின் உதவியுடன் பிடிப்பட்ட 6 பேர்களை கோவைக்கு கொண்டுவருகிறார்கள். அவர்களிடம், கொடநாட்டில் இருந்து அடிக்கடி உளவு சொன்னது யார் என்று விசாரிக்க உள்ளார்கள். தப்பி ஒடிய 5 பேர்களை தமிழக, கேரள போலீஸார் வலை வீசித் தேடிவருகிறார்கள். 

கேமரா கண்கள்

சென்னை மாதிரி பல ஊர்களில் போலீஸாரின் கண்காணிப்பு கேமராக்களில் பல செயலற்று நிற்க...கோவையில் நிலைமையே வேறு! இங்குள்ள முக்கிய இடங்களில், போலீஸ் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே இருந்ததுதான். கமிஷனராக அமல்ராஜ் வந்த பிறகு, நிறைய மாறுதல்களை செய்து வருகிறார். விமான நிலையத்தில் சந்தேகத்துக்குரிய யாராவது நபர் இறங்கி வெளியே வந்து மாநகருக்குள் வந்தால்...அவரை கேமரா கண்கள் பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு துல்லியமாக ஃபாலோ பண்ணுகிறார்கள் கோவை கமிஷனர் ஆபீஸில் உள்ள நவீன கன்ட்ரோல் ரூம் போலீஸார். பிரம்மாண்ட டி.வி. ஷோ ரூம் மாதிரி ஏராளமான டி.விக்களை வைத்திருக்கிறார்கள். ஒரு க்ரைம் காட்சி என்றால்... 70 எம்.எம். திரையில் பார்க்கும் அளவிற்கு ஜூம் செய்து பார்க்கிறார்கள். நீலகிரியில் இருந்து வீட்டை விட்டு ஒடி வந்த மாணவிகள் கோவை நகருக்குள் நுழைய..அவர்கள் கேமராவில் சிக்கினர். பெண்மணி ஒருவரிடம் செயினை பறித்துக்கொண்டு ஒடிய திருடனை கேமரா வழியாக துரத்தி போலீஸ் மைக்கில் தகவல் சொல்லி ரோந்து ஜீப் விரைந்து போய் திருடனை அமுக்கியது. ஆள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்ற கார் ஒன்றை விரட்டிப் பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் உதவியிருக்கின்றன. தற்போது நகரின் பல்வேறு இடங்களில் போலீஸாரின் கேமராக்கள் சுமார் 500. இவை தவிர, வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள்...என தனியார் நிறுவனங்களின் கேமராக்கள் சுமார் 4000.  இவற்றையும் படிப்படியாக நவீன கன்ட்ரோல் ரூம் இணைப்பில் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். எல்லாம் முடியும்போது, கோவை ஒருவேளை கிரைம் ஃப்ரீ சிட்டியாக கூட மாறலாம். 

ஜொள்ளு அதிகாரி

திருச்சி மாவட்ட போலீஸில் லேட்டஸ்ட் டாக் -  மன்மத பானம் விடும் போலீஸ் அதிகாரி ஒருவரைப் பற்றித்தான். சமீபத்தில் 'மணமான ஊரின்' போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார். அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவரைப் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கிறார். அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, அந்த குறிப்பிட்ட போலீஸிடம் தகவல் சொல்லி தன்னுடைய செல் எண்ணுக்கு போன் பண்ணச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த பெண் போலீஸ் மிரண்டு போய் போன் பண்ணவில்லையாம். பிறகு, அந்தப் பெண் போலீஸின் செல்லுக்கு நேரிடையாக தொடர்பு கொண்டிருக்கிறார் அந்த அதிகாரி. இந்த விஷயத்தை சக போலீஸாரிடம் சொல்லிவிட, அத்தோடு அந்த அதிகாரி சைலண்ட் ஆகிவிட்டாராம். இதன்பிறகு இன்னொரு பெண் போலீஸிடம் வழிந்திருக்கிறார். அவரோ, விஷயத்தை போலீஸ் மேலிடத்திடம் சொல்லி மாறுதல் வாங்கிக்கொண்டு ஒடிவிட்டாராம். இப்போது மூன்றாவதாக பெண் போலீஸ் ஒருவருக்கு ஏகப்பட்ட சலுகை வழங்கி வருகிறாராம் அதிகாரி. வெளியூர் வேலைகள் எல்லாம் தராமல் பார்த்துக்கொள்கிறாராம். மாவட்டமே சிரிக்கிறது! 

 டெல்லி மேலிடம் போட்ட திடீர் 'தடா'

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார்.. ஆகியோரது வீடுகளில்  வருமான வரித்துறை ரெய்டு நடந்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன்..ஆகிய நால்வரும் பணி செய்யவிடாமல் தடுத்ததாக சென்னை போலீஸில் புகார் பதிவானது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவை எளிதில் பெயிலில் வரக்கூடிய சட்டப்பிரிவுகளாக இருந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் டென்ஷன் ஆனார்கள். இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நீதிமன்ற கதவுகளைத் தட்ட தயாரானார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் டெல்லி மேலிடம் அவர்களுக்கு 'தடா' போட்டுவிட்டது.

இரண்டு லட்சம் பண்டல்

டெல்லி தேர்தல் கமிஷனில் சில நாட்களுக்கு முன்பு, எடப்பாடி கோஷ்டியினர் இரட்டை இலை சின்னத்தைப் பெற கட்சி நிர்வாகிகள் 6,500 நிர்வாகிகளின் கையெழுத்து அடங்கிய டாக்குமெண்டுகளை சமர்ப்பித்து தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். ஆனால், பன்னீர்செல்வம் கோஷ்டியினரோ இரண்டு லட்சம் நிர்வாகிகளின் பெயர் விவரங்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். மேலும் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார்கள். எடப்பாடி கோஷ்டியினர் தேர்தல் கமிஷனிரிடம் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு வாங்கியிருப்பதால், நிதானமாக செயல்படுகிறார்கள். மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஒருவர் பேசும்போது, சசிகலாதான் பொதுச்செயலாளர் என்று தேர்தல் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோமே, அதை வாபஸ் பெற்றால், ஒ.பன்னீர்செல்வம் கோஷ்டியினர் திருப்தியாகிவிடுவார்கள் அல்லவா? என்றாராம். அதற்கு அமைச்சர் வேலுமணி, “ஒ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவி, முதல்வர் பதவியெல்லாம் இருந்தவர். அவர் கட்சிக்குள் இருந்தபோது, சசிகலா குடும்பத்தினரை தூக்கி அடித்தாரா? அவர் செய்யத்தவறியதை நடத்திக்காட்டிவிட்டோம். அதற்கு என்ன கிரடிட் கொடுக்கிறார்கள்? நீங்கள் சொல்வது போல, புகாரை வாபஸ் பெற்றால், எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என்கிற பெயரில் இரட்டை இலை சின்னத்தை ஒ. பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிடுவார்கள். அப்புறம் நாம் அவரிடம் காவடிதான் தூக்கவேண்டும்," என்று கோபமாக கேட்க...கேள்வி கேட்ட பிரமுகர் கப்சிப் ஆகிவிட்டாராம்.  

கொடநாடு கொள்ளையனின் வாக்குமூலம்... கேமரா கண்கள்... ஜொள்ளு அதிகாரி! #NewsChat
கொடநாடு கொள்ளையனின் வாக்குமூலம்... கேமரா கண்கள்... ஜொள்ளு அதிகாரி! #NewsChat

எடப்பாடி நிர்வாகம் எப்படி?

தலைமைச் செயலகத்தில் இப்படி சொல்கிறார்கள்...ஜெயலலிதா காலத்தில் ஆரம்பித்து இதுவரை  2000 அரசுத்துறை ஃபைல்கள் பெண்டிங் கிடந்ததாம். பல மாதங்களாக கிடந்த அவற்றை பார்த்து முதல்கட்டமாக சுமார் 1540 ஃபைல்களில் கையெழுத்துப்போட்டுவிட்டாராம் முதல்வர் எடப்பாடியார். முதல்வரை யார் வேண்டுமானாலும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே சந்திக்கலாம். காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் அமர்ந்து ஃபைல் பார்க்கிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். இதெல்லாம் பாஸிட்டிவ் விஷயங்கள். சில நெகட்டிவ் ஆன விஷயங்களும் இருக்கின்றன. 

தமிழக போலீஸின் உளவுப்பிரிவு எஸ்.பி பதவி முக்கியமானது. இந்த பதவியில் தற்போது இருப்பவர் கண்ணன். இவருக்கும் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒரு திரியை கொளுத்திப்போட்டிருக்கிறார்கள். தகவல் கசிவது இப்படித்தான் என்று என்று பழியை கண்ணன் மீது போட்டதன் விளைவு... அடுத்த சில நாட்களில் கண்ணன் டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப்போகிறார்கள். சென்னை ஆர்.கே. நகர் தேர்தல் நின்றுபோய் இரண்டுவாரங்கள் முடிந்துவிட்டன. தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சியினரின் புகார்களுக்கு ஆளான போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர் சாரங்கன் உள்ளிட்ட 22 பேர்கள் + 10 வருவாய்துறை அதிகாரிகள் நற்றாற்றில் நிற்கிறார்கள். தேர்தல் நின்ற மறுநாளே இவர்கள் அனைவரும் பழைய இடங்களில் நியமித்திருக்கவேண்டும். ஆனால், பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியும், அவர்களை எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை.  தினகரனை ஜெயிக்க வைக்கவா பார்த்தீர்கள்? என்று சொல்லி ஃபைலை பெண்டிங் வைத்துவிட்டாராம் முதல்வர் எடப்பாடி . இதற்கிடையில், அ.தி.மு.கழகத்தில் சமீபத்தில் நடக்கும் உள்குத்துகளைப் பார்த்து, “வேண்டவே வேண்டாம்” என்று ஏதேதோ சாக்குப் போக்குகளை சொல்லி லீவு போட்டு போனார் உளவுத்துறை ஐ.ஜி-ஆன சத்தியமூர்த்தி. ஒரு மாதம் ஆகியும் அந்தப் பதவியில் அமர யாரும் வரமறுக்கவே, வேறுவழியில்லாமல் மீண்டும் சத்தியமூர்த்தியை இழுத்துவந்து வலுக்கட்டாயமாக அதே பதவியில் உட்காரவைத்துவிட்டார்கள். என்ன இருந்தாலும், எடப்பாடி சமூகத்தவராச்சே? இதேபோலவே, முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையும் அவரது செக்யூரிட்டி பிரிவு எஸ்.பி- ஆக இருந்தவர் சுதாகர். அவருக்குப் பிறகு, ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டத்தில் சுதாகர்தான் செக்யூரிட்டி எஸ்.பி -ஆக நீடித்தார். அவரைத்தொடர்ந்து எடப்பாடியார் முதல்வர் ஆனதும் சுதாகரே தொடர்ந்தார். ஆனால், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் சுதாகர் என்று கொங்கு மண்டலத்து பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி காதில் போட, சுதாகரை அங்கிருந்து தற்போது மாற்றிவிட்டார்கள்.