Published:Updated:

போராட்டக்களமான கீழடி - என்ன நடந்தது?

போராட்டக்களமான கீழடி - என்ன நடந்தது?
போராட்டக்களமான கீழடி - என்ன நடந்தது?

திக்கரை நாகரிகம் பற்றி ஆய்வை நடத்துவதற்காக, மத்திய தொல்லியல் துறையினர் 2015-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள தனியார் தென்னந்தோப்பைத் தேர்வுசெய்தனர்.  முதல் வருட ஆய்விலேயே இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நாகரிகமாக வாழ்ந்ததற்கான அரிய பொருள்களையும், அவர்கள் வாழ்ந்த வீடுகளையும் கண்டுபிடித்தனர்.

தமிழரின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தத் தொல்லியல் ஆய்வால், தமிழர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த ஆண்டு ஆய்வுசெய்ய, மத்திய அரசு மிகவும் யோசித்தே அனுமதி வழங்கியது. இரண்டாவது வருடத்திலும் பல முக்கியமான பொருள்கள் கிடைத்தன.  இந்தப் பொருள்களை பெங்களூருக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டது மத்திய தொல்லியல் துறை. `இதைத் தமிழகத்திலேயே வைக்க வேண்டும். ஆய்வுக்காக அதிக இடங்களை அரசு ஒதுக்க வேண்டும்’ என வழக்குரைஞர் கனிமொழி வழக்கு தாக்கல் செய்த பிறகு, கீழடி விவகாரத்தின் பின்னால் இருக்கும் அரசியலும் பண்பாட்டு மோதலும் வெளிவந்தன.

அரசியல் தலைவர்கள் கனிமொழி, பழ.நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், சீமான், மாஃபா பாண்டியராஜன் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் கீழடிக்கு வரத் தொடங்கினர். கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பொருள்களில் ஒன்றுகூட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இல்லை. இதனால் பா.ஜ.க அரசுக்கு இந்த ஆய்வைத் தொடர்வதில் விருப்பமில்லை என்ற தகவல் பரவியது.

இந்த நிலையில் மூன்றாம்கட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்கவும் அனுமதி அளிக்கவும் மத்திய தொல்லியல் துறை தாமதப்படுத்தியது. பிறகு, அரசியல் கட்சியினர் பலரும் குரல் எழுப்பவே அனுமதியை வழங்கியது. அதேநேரம், இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்திவந்த மதுரையைப் பூர்விகமாகக்கொண்ட மூத்த தொல்லியல் அலுவலர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை, அதிரடியாக அசாமுக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிட்டனர். இதனால் இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமானது. ஓர் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது அது முழுமையாக முடியும் வரை அந்தக் குழுவை மாற்றக் கூடாது என்று விதி இருக்கும்போது, மிக ஆர்வமாக ஆய்வு செய்துவந்த அமர்நாத்தை இடமாறுதல் செய்ததைப் பல்வேறு அமைப்புகளும் கண்டித்தன. தன்னுடைய மாறுதலை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார் அமர்நாத் ராமகிருஷ்ணா. தீர்ப்பாயமும் இடமாறுதலை மறுபரிசீலனை செய்யச் சொன்னது. ஆனால், ஒரு வாரம் கழித்து அவருடைய இடமாறுதலை உறுதிசெய்து உத்தரவிட்டது. இது, தமிழர்களுக்கு எதிரான மறைமுகப் பண்பாட்டுப் போர் என்று தமிழர் அமைப்புகள் களத்தில் இறங்கின. இன்று காலை `மே 17’ இயக்கத்தினர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகப்பெரிய ஆர்பாட்டத்தை நடத்தி முடித்தனர்.

இந்த நிலையில் கீழடி ஆய்வைப்  பார்வையிட மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், மகேஷ் சர்மா ஆகியோர் வருவதாகத் தகவல் வர, `அவர்களுக்கு எதிராக முற்றுகையிடப்போகிறோம்’ என்று மக்கள் விடுதலைக் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

நேற்று காலையிலிருந்து கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருந்த இந்தக் கட்சியினர், சரியாக 2 மணிக்கு அங்கு வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்தில் பா.ஜ.க அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்து பார்வையிட்டனர். மோடி மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிராகவும், அமர்நாத் ராமகிருஷ்ணாவை மாற்றம் செய்ததை எதிர்த்தும் கோஷமிட்டனர் மக்கள் விடுதலைக் கட்சியினர். பதிலுக்கு பா.ஜ.க-வினரும் கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் பா.ஜ.க-வினர் அங்கு கிடந்த கம்பு, கட்டைகளை எடுத்துக்கொண்டு, போராட்டம் செய்தவர்களையும் பத்திரிகையாளர்களையும் விரட்டத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதியே கலவரமானது. சிறிது நேரத்தில் கூடுதல் போலீஸ் வந்து  மக்கள் விடுதலைக் கட்சிப் போராட்டக்காரர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

“கீழடி ஆராய்ச்சி தொடர்ந்து நடத்திட, அதற்கான உதவிகளைச் செய்வதற்காகப் பார்வையிடத்தான் வந்தோம். ஆனால், இங்கு கலவரக்காரர்களை அனுமதித்த போலீஸ், மத்திய அமைச்சர்களைப் பாதுகாப்பதில் முறை தவறிவிட்டது” என்றார் தமிழிசை. சிறிது நேரம் பார்வையிட்டவர்கள், கீழடி விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டத்தைப் பார்த்ததால் மிகவும் அப்செட்டாகி, அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.


படம் : ஈ.ஜெ.நந்தகுமார்.