Published:Updated:

விதிமீறல்: அமைச்சரின் ராஜினாமாவை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு!

விதிமீறல்: அமைச்சரின் ராஜினாமாவை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு!
விதிமீறல்: அமைச்சரின் ராஜினாமாவை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு!
விதிமீறல்: அமைச்சரின் ராஜினாமாவை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு!

பெங்களூர்: சட்ட விதிகளை மீறி வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும்,அதனை ஏற்க அம்மாநில முதல்வர் சதானந்தா கவுடா மறுத்துவிட்டார். 

தனது தாய் சுசீலாம்மா,மகள் திஷா குமார் ஆகியோர் பெயரில் 2 வீட்டு மனைகள் ஏற்கெனவே இருக்கும் நிலையில், அவற்றை மறைத்து கர்நாடக முதல்வரின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் "ஜி' பிரிவு மனையை சுரேஷ்குமார் பெற்றுள்ளார். இதன் மூலம், ராஜ்மகால் விலாஸ் 2-வது ஸ்டேஜில் உள்ள பெங்களூர் வளர்ச்சி ஆணையத்துக்குரிய ரூ. 3 கோடி மதிப்புள்ள 4,000 சதுர அடி வீட்டு மனையை ரூ. 10 லட்சத்துக்கு எஸ். சுரேஷ்குமார் பெற்றுள்ளார்.

எனவே, அந்த மனை ஒதுக்கீட்டை ரத்து செய்து வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் எஸ். பாஸ்கரன், கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா மற்றும் பெங்களூர் வளர்ச்சி ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்தப் புகார் மீது கர்நாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இது தொடர்பாக எஸ். பாஸ்கரன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டி நேற்று வெளியானது. இதையடுத்து அமைச்சர் சுரேஷ்குமார், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவிடம் நேரில் வழங்கினார்.

முதல்வர் சதானந்த கவுடாவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.ஆனால்,அதை ஏற்க முதல்வர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறுகையில்,"அமைச்சர் சுரேஷ்குமார் தவறிழைத்திருப்பார் என்று நான் நம்பவில்லை.எம்.எல்.ஏ. பதவியை வகிப்பதால்,கர்நாடக முதல்வரின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்டது.

அவரது தாய் மற்றும் மகளுக்கு பெங்களூர் எல்லைக்கு வெளியே வீட்டு மனை இருப்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சுரேஷ்குமார் என்னிடம் தெரிவித்துள்ளார். பசவேஸ்வர நகரில் புதிய வீடு வாங்குவதற்காக அந்த வீட்டு மனைகளை விற்றுவிட்ட தகவலையும் என்னிடம் தெரிவித்துள்ளார்.

அவர் இப்போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்க மாட்டேன்.அவரைப் போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் மாநில அரசுக்கு பலமாக உள்ளனர்.எனவே, அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.

எனினும்,இதுபற்றி கட்சி மேலிடத் தலைவர்களிடம் ஆலோசித்து தகுந்த முடிவு எடுப்பேன்.சுரேஷ்குமார் அமைச்சராக தொடர்ந்து செயல்படுவார்"என்றார்.