Published:Updated:

பேச்சுவார்த்தையை முறித்த வில்லன்கள்!’   அ.தி.மு.க-வில் இப்போது இதுதான் நிலை

பேச்சுவார்த்தையை முறித்த வில்லன்கள்!’   அ.தி.மு.க-வில் இப்போது இதுதான் நிலை
பேச்சுவார்த்தையை முறித்த வில்லன்கள்!’   அ.தி.மு.க-வில் இப்போது இதுதான் நிலை

பேச்சுவார்த்தையை முறித்த வில்லன்கள்!’   அ.தி.மு.க-வில் இப்போது இதுதான் நிலை

.தி.மு.க-வின் இருஅணிகளையும் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் ஏப்ரல் 21-ம் தேதி அமைக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளும் இணைப்பு குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். 24-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழகத்தில் இணைப்பு பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டு இருந்தனர்.

 அதற்கு முன்னதாக தேனியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றால் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்தே முற்றிலுமாக நீக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதுபற்றி பேசிய டி.டி.வி.தினகரன், 'கட்சியில் இருந்து தான் ஏற்கனவே ஒதுங்கிவிட்டேன். இதுவரை கட்சியில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்று அறிவித்தார். அதையடுத்து ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டு இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து எடப்பாடி பழனிசாமி அணி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அணி ஏப்ரல் 25, 26, 27 ஆகிய நாட்களில் அ.தி.மு.க அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தியது. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாண பத்திரங்களை கையெழுத்து வாங்கினர்.  அந்த கூட்டத்தில், பேசிய மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள், ''ஓ.பன்னீர்செல்வத்துக்கு  முதல்வர் பதவி, கட்சியின் பொதுசெயலாளர் பதவி எல்லாம் கொடுக்க கூடாது. கட்சியை உடைக்க முயற்சித்தவரிடம் இருந்து 122 எம்.எல்.ஏ-க்களை காப்பாற்ற நாம் பட்ட கஷ்டங்களை மறந்துவிடக்கூடாது. சுயமரியாதையை எதற்காகவும் இழக்க வேண்டாம்" என்று காரசாரமாக பேசினார்கள். 

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாங்கள் விதித்த  2 நிபந்தனைகளை நிறை வேற்றினால்தான் பேச்சு வார்த்தை என்று உறுதியாக கூறிவிட்டனர். இரு அணியின் மூத்த நிர்வாகிகளும் ஆளாளுக்கு மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை. பேச்சுவார்த்தை அறிவிப்பு வெளியிட்டு 15 நாள் அகியும் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

மே தின பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகரில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கான காரணங்களை விளக்கி பேசினார். அவர் பேசுகையில், ''ஜெயலலிதா சாவில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். டி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைத்ததாக கூறினார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெயரை நீக்காமல், கூடுதலாக எடப்பாடி பழனிசாமி பெயரை மட்டும் சேர்க்கிறார்கள். இவர்களை எப்படி நம்புவது? என்னை ‘அந்தர்பல்டி’ அடித்ததாக கூறுகிறார்கள். எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றுவோம் என்று கபடநாடகம் ஆடுகிறார்கள். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. நீங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் உங்களை திருத்துவார்கள்.  ஜெயலலிதா விருப்பப்படி ஆயிரம் ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்றால்,சசிகலா குடும்பத்திடம் இருந்து அ.தி.மு.க விடுபட வேண்டும்'' என்று தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்.   

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த மே தினவிழாவில் பேசியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த பன்னீர்செல்வம் அந்தர்பல்டி அடித்து, பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறார். இது என்ன நியாயம்.  இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. ஆனால், பன்னீர்செல்வம் அணியில் தினமும் விதவிதமாக பேட்டி கொடுத்துக்கொண்டு வருவதுதான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பேச்சுவார்த்தையின்போது தான் எல்லாவற்றிலும் சுமுகமான முடிவை எடுக்க முடியுமே தவிர, நிபந்தனை போட்டுக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. ஆகவே, நிபந்தனை எதுவும் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் எல்லா தீர்வுகளையும் காண்பதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். நிபந்தனையோடு பேசும் எதுவும் வெற்றிஅடையாது' என்று போட்டு உடைத்தார்.

அ.தி.மு.க அம்மா அணியின் உள்வேலைகளை மோப்பம் பிடித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியினர், பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம் என்று முடிவெடுத்து பன்னீர்செல்வத்தின் சுற்றுபயணத்தை ரெடி செய்துவிட்டனர். ஏப்ரல் 5ம் தேதி மாநாடு போன்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். சென்னை அருகே துரைப்பாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் அந்தக் கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சி புதிய நிர்வாகிகள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுகிறார். தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப் பயணம் உள்பட அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் எதிர்கால திட்டங்களையும் அந்த கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறார்.  இரண்டு அணிகளுக்குமே பதவிதான் வில்லன்களாக நின்று பேச்சுவார்தையை குலைக்கிறது.

  -எஸ்.முத்துகிருஷ்ணன்
 

அடுத்த கட்டுரைக்கு