Published:Updated:

இதுதான் நிலை..! கேள்விக்குறியாகும் பத்திரிகைச் சுதந்திரம்

இதுதான் நிலை..! கேள்விக்குறியாகும் பத்திரிகைச் சுதந்திரம்
இதுதான் நிலை..! கேள்விக்குறியாகும் பத்திரிகைச் சுதந்திரம்

ழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கும்  அற்புத செயல் போல், எங்கோ புதைந்திருக்கும் செய்திகளை மக்களுக்குக்  கடத்துகிறார்  பத்திரிகையாளர் . உருவங்களைப்  பார்க்கும் கண்களுக்கு மத்தியில் அதன் நிழலை ஊடுருவும் புலனாய்வு பார்வைக்காரர்  பத்திரிகையாளர். தகவல்களை, சம்பவங்களை தெரியப்படுத்துவதோடு அல்லாமல் அதனுள் நுட்பமாகப்  புதைந்திருக்கும் பின்னணியையும் வெளிக்கொண்டு வரும்போது அந்தப்  பத்திரிகையாளரின் பணி  ஆபத்து நிறைந்ததாக  மாறுகிறது. "ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றிப்  பொதுவாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்" என்கிறார் அண்ணல் காந்தி. அவரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் உண்மைகளை வெளிக்கொண்டு வர போராடி, தமது உயிரையே இழந்த ஒரு  பத்திரிகையாளரால் உருவானது 'உலகப் பத்திரிகை  சுதந்திர நாள்'

பேச்சுரிமைக்கான சுதந்திரம் :

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது  'எல் எஸ்பேக்டேட்டர்' பத்திரிகை அலுவலகம்.... சீறி வந்த ஒரு வாகனத்திலிருந்த குண்டர்கள் , அலுவலக  வாசலிலேயே அந்த பத்திரிகை  புலனாய்வு செய்தியாளர்  'கில்லெர்மோ கேனோ இசாசா' வை ஈவு இரக்கமின்றிச் சுட்டுத் தள்ளிவிட்டுப்  பறக்கின்றனர். போதைப்  பொருள் கடத்தலை அம்பலப்படுத்தியதால், மாபியா கும்பல் ஒன்று இந்த வெறிச்செயலை நிகழ்த்தியுள்ளது என்பதே இந்தப்  படுகொலையின் பின்னணியாகும். 1986 -ல் கொலம்பியா நாட்டில் நடந்த இந்தப் படுகொலை, சர்வதேச சமூகத்தை உலுக்குகிறது. அதன்பின் 1993 இல் ஐக்கிய  நாடுகள் பொதுச்சபைக்  கூட்டத்தில் 'மனித உரிமைகள் சாசனப் பகுதி 19- ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவே இந்நாள் சிறப்பு நாளாகப்  பிரகனப்படுத்தப்படுகிறது ' என தீர்மானித்து ஒவ்வோர்  ஆண்டும் மே 3-ம் நாள் பத்திரிகை சுதந்திர நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991-ம் ஆண்டு இந்நாளிலேயே 'ஊடக சுதந்திரச் சாசனம் ' முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி வருடந்தோறும் பத்திரிகை சுதந்திரத்துக்கு  பங்காற்றும் ஒருவருக்கு யுனெஸ்கோ நிறுவனத்தினர் உலக பத்திரிகை சுதந்திர விருது கொடுத்து கவுரவிக்கின்றனர். இந்தநிலையில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது ?

பாதுகாப்பற்ற நிலையில்  பத்திரிகை  சுதந்திரம் :

'நாடாளுமன்ற-சட்டமன்றம்,நீதி, நிர்வாகம் ஆகிய மூன்று தூண்களை கண்காணிக்கவும்,தவறுகளைச்  சுட்டிக்காட்டுவதும்  நான்காவது தூணான பத்திரிகைத்  துறையின் கடமை. பேச்சு சுதந்திரமும்,கருத்துச்  சுதந்திரமும் அடிப்படை ஆனால், சுதந்திரமாகச்  செயல்பட முடியாதளவு சமகாலத்தில் பல அச்சுறுத்தல்களைச்  சந்தித்துவருகின்றனர். ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலற்ற நிலையில்  இருப்பதற்கும், உறுதியேற்கும் நாள்தான் 'பத்திரிகை சுதந்திர நாள்' ஆனால் அரசாலும் ஆளும்கட்சியாலும் ஊடக சுதந்திரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. களத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அத்துமீறல்கள் ஒருபுறம், ஊழல் அரசியல்வாதிகளாலும் போக்கிலிகளாலும் மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ' என்கிறார் ஊடகவியலாளர் மணிமாறன். இதற்காக அவர் எடுத்துக்காட்டிய புள்ளிவிவரங்கள் கசப்பான உண்மையாக வெளிப்படுகின்றன.

புள்ளிவிபரம் சொல்லும் உண்மை :

'உலக நாடுகளில் ஊடகச்  சுதந்திரத்தின்  நிலை குறித்த ஆய்வறிக்கை ஆண்டுதோறும் வெளியாகிறது. இதில் ஊடக சுதந்திரக் குறியீடு (Press freedom index)  எண்கள் மூலம் ஊடக சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றனர்.

பின்லாந்து 8.59 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 8.76, நார்வே 8.79 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 21.70 புள்ளிகள் பெற்று 38 வது இடத்தில் பிரிட்டனும், 22.49 புள்ளிகள் பெற்று 41- வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. ஊடகச்  சுதந்திரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது. 43.17 புள்ளிகள் பெற்று 133 வது இடத்தில் இந்தியா உள்ளது ' என்கிறார் அழுத்தமாக. 

இந்தியாவின் நிலை:

பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்த சர்வதேச ஊடகக்  கண்காணிப்புக்  குழு அறிக்கை ஒன்றை கடந்தாண்டு வெளியிட்டது. அதில் 1992 இல் இருந்து இந்தியாவில் பணியில் இருக்கும்போதே 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர்.மேலும் ‘பத்திரிகையாளர்கள் மீது வரும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பணியின் போது தாக்கப்படுதல் போன்ற அசம்பாவிதங்களைத்  தடுக்க இந்தியா தவறிவிட்டது எனக்  கடுமையாகப்  பதிவு செய்கின்றனர்.  பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்த சர்வதேச ஊடக கண்காணிப்புக்  குழுவின் உறுப்பினர் சுஜாதா மதோக் கூறும்போது, ‘அரிதிலும் அரிதான பத்திரிகையாளர் கொலை வழக்கில் தான் குற்றவாளி கைது செய்யப்படுகிறார்’ என்கிறார். தொடர்ந்து , ‘நீதித்துறை, காவல் துறையில் நிலவும் லஞ்சம் , ஊழல் குற்றவாளிகள் கூடாரமாக மாறிய அரசியல் என அனைத்தும் சேர்ந்து பத்திரிகையாளர்கள் மீதான படுகொலைகளில் இருந்து குற்றவாளிகளை எளிதில் தப்பிக்கச்  செய்துவிடுகிறது.’ என்கிறார் அழுத்தமாக. இந்தக்  கொலைகள் பணி செய்யும்போதே நேர்ந்துள்ளது. ஊழல் , குற்றச்செயல்களை புலனாய்வு செய்யும்போது கடுமையான ஆபத்துகளை, புது டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களைவிட , இந்தியாவின் சிறு நகரங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களே  சந்திக்கின்றனர். என்கிறது நியூயார்க்கை மையப்படுத்தி  இயங்கும் இந்த கண்காணிப்புக்  குழு.

இந்திய பிரஸ் கவுன்சில் எச்சரிக்கை :

பத்திரிகை சுதந்திரம் என்பது இந்தியாவில் கேள்விக்குறியாக உள்ளது. பல சமயம் கைவிடப்பட்ட ஒன்றாக உள்ளது. என்று இந்திய பிரஸ் கவுன்சில் தெரிவிக்கிறது. அதன் 2015 அறிக்கையில் , ‘பெரும்பாலும் கொலையாளி தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறான்’ என்கிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்புச்  சட்டம் இயற்றவேண்டும்’ என்றும் இந்திய பிரஸ் கவுன்சில் கோருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய அளவில் பத்திரிக்கை பாதுகாப்பு கடும் அச்சுறுத்தல்களைச்  சந்தித்து வருகிறது. கடந்தாண்டு மட்டும் சர்வதேச அளவில்  78 பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். இந்தாண்டு, மூன்றரை மாதங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 'இது ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு வெளியிட்ட ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரம்." ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி பணியாற்றவும் போராட இந்நாளில் உறுதியேற்போம்" என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.  எங்கெல்லாம் பத்திரிகை, ஊடக குரல்வளை நெறிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது.எங்கெல்லாம் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறாரோ, அங்கெல்லாம் உண்மைகளும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது.உண்மைகளை பாதுகாப்பது ஊடக, இதழியல் அறம் மட்டுமல்ல, மானுட அறமுமாகும்.