Election bannerElection banner
Published:Updated:

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

‘‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' - இது, திப்பு சுல்தான்  தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்... 1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம் அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான். அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர் வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது. அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த் திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ, அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்; பழிவாங்க காத்திருந்தனர்.

''மக்களின் நன்மைக்காக!''

இந்தப் போர், திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது; இதயத்தையே வறுத்தெடுத்தது; இரவுபகல் எல்லாம் சிந்திக்கவைத்தது. அதற்குக் காரணம், திப்பு சுல்தான் முதன்முதலாகப் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமையைக் கண்டதுதான். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காண ஓடினார்; கண்டதும் கதறினார்; கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கட்டளை பிறப்பித்தார். காயங்களையும், சண்டைகளையும் பலமுறை பார்த்திருந்த ஹைதர் அலி... திப்புவிடம்,‘‘வா... நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார். வாலிப வயதில் இவ்வளவு பெரிய வலியையும், வேதனையையும் கண்டிராத திப்பு, அப்போதுதான் மேற்கூறிய வலிமிகுந்த வார்த்தைகளை உதிர்த்தார். வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும். அந்த வலிதான் அவரை, அப்படிச் சிந்திக்கவைத்தது; சிகரத்தில் ஏற்றியது; சிம்மசொப்பனமாக விளங்கவைத்தது.

தந்தையின் இறப்புக்குப் பிறகு அரியணை ஏறிய திப்பு சுல்தான், ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண அடிப்படையிலேயே தம்முடைய ஆட்சி மாற்றத்தைக் கொண்டுசென்றார்; உள்நாட்டு வணிகத்தை ஊக்குவித்தார்; உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை உரிமையாக்கினார்; குறிப்பாக, மது உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடைவிதித்தார். இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார். அதற்கு திப்பு, ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான். அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான். அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’ என்று பதிலுரைத்தார். 

ஆங்கிலேயரைப் பாராட்டிய திப்பு!

‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’ என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த திப்பு சுல்தான், துரோகிகளைக்கூட மன்னித்துவிடக் கூடியவர்; எதிரிகளிடம்கூட விசுவாசம் காட்டியவர்; எல்லா மதங்களையும் உயர்வாகக் கருதியவர்; எல்லோரிடமும் அன்பாகவே பழகியவர். ஒருமுறை... திப்புவின் நெருங்கிய கமாண்டரான முகம்மது அலி, அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார், திப்பு. ‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்க, ‘‘அவன் செய்த தவற்றுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன் முன்புசெய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’ என்று பதிலளித்தார். அதேபோல், ஒருசமயம்... திப்புவின் படைகள் மங்களூர் கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தபோது, இறுதிவரை போராடிக்கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில், இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன் கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல். எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து, ‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’ என்று பாராட்டினார். மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல், ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில். 

'நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற கொள்கையிலேயே எல்லோரிடமும் எப்போதும் போரிட்ட அவர், ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாகத் தீரமுடன் போரிட்டு இறந்துபோனார் திப்பு. இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களைத் தன்னுடைய இளம்வயது முதல் இறுதிமூச்சுவரை விரட்டிக்கொண்டிருந்த அந்த இளம்புலியின் நினைவு தினம் இன்று.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு