Election bannerElection banner
Published:Updated:

தனிக் கட்சி தொடங்குகிறாரா தினகரன்? - அ.தி.மு.கவைக் கைவிடும் சசிகலா குடும்பம்

தனிக் கட்சி தொடங்குகிறாரா தினகரன்? - அ.தி.மு.கவைக் கைவிடும் சசிகலா குடும்பம்
தனிக் கட்சி தொடங்குகிறாரா தினகரன்? - அ.தி.மு.கவைக் கைவிடும் சசிகலா குடும்பம்

தனிக் கட்சி தொடங்குகிறாரா தினகரன்? - அ.தி.மு.கவைக் கைவிடும் சசிகலா குடும்பம்

டெல்டா மாவட்டங்களில் புதிதாக போஸ்டர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. 'டி.டி.வி பேரவை' என்ற பெயரில் சில தனி நபர்கள் இதை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். ‘அ.தி.மு.கவின் அதிகாரம் சசிகலா குடும்பத்தை விட்டு சிறிது சிறிதாக நழுவிக் கொண்டிருக்கிறது. 'குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருந்து ஒரு சக்தியாக உருவெடுக்க வேண்டும்' என சசிகலா கோரிக்கை வைத்துள்ளார். தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார்கள்' என்கின்றனர் தஞ்சை அ.தி.மு.கவினர். 

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்பை மறு சீராய்வு செய்யும் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் சசிகலா. இதன்மூலம், 'சிறை வாழ்க்கையில் இருந்து மீண்டு வர முடியும்' என நம்புகிறார். 'அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. இணைப்பு முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதே சசிகலா குடும்பம்தான். இரட்டை இலை விவகாரத்துக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் தொடரும். சீராய்வு மனுவின் மீது சாதகமான தீர்ப்பு வருவது சந்தேகம்தான்' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். "கடந்த சில வாரங்களாக சசிகலா குடும்பத்தை எதிர்த்து நடக்கும் அரசியல் காய் நகர்த்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் அவரது குடும்ப உறவுகள். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட 89 கோடி ரூபாய் விவகாரம், அரசுக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை உணர்ந்துதான், 'மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்' என அமைச்சரவைக் கூட்டத்திலேயே பேசினார் முதலமைச்சர் பழனிசாமி. 'கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நாம் மீண்டும் நுழைய முடியாத அளவுக்கு நெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என அவரது குடும்ப உறுப்பினர்கள் பேசிக் கொண்டு வருகின்றனர். அதன் எதிரொலியாக, தனிக்கட்சி என்ற பேச்சும் எழுந்துள்ளது" என விவரித்த மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 

"தஞ்சாவூர், மன்னார்குடி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக அவரது சமுதாயத்தினர் உள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், காமராஜ் உள்பட நான்கு பேரை அமைச்சராக அமர வைத்தார். அவரால் பதவிக்கு வந்தவர்களே, அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, டி.டி.வியின் செயல்பாடுகள் குறித்து, சசிகலா குடும்பத்தினர் விரிவாகவே விவாதித்துள்ளனர். அந்த விவாதத்தில், 'ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவால்தான் கட்சியை ஒன்றுபடுத்த முடிந்தது. சொல்லப் போனால் கட்சியைக் காப்பாற்றியவர் அவர்தான். அன்று 'பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிசாமியா?' என யோசித்து அதிகாரத்தை விட்டுக் கொடுத்திருந்தால், கட்சிக்காரர்கள் யாரும் ஒன்றுமையுடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில், 'பன்னீர்செல்வம் நம்பகத்தன்மை அற்றவர்' என்ற அடிப்படையில், சசிகலாவை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்திருக்க வேண்டும். டி.டி.விக்கு பின்புலமாக இருந்தது சசிகலா இமேஜ்தான். அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டி.டி.வியை கட்சிக்குள் சேர்த்து, பதவி கொடுத்தது சசிகலாதான். ஆனால், அவருடைய இமேஜை ஆர்.கே.நகரில் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.'

அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் யார் பலம் பெறுகிறார்களோ, அவர் பின்னால்தான் அனைவரும் செல்வார்கள். 122 எம்.எல்.ஏக்கள் பலம் பிளஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு எனக் கட்சியை மெதுவாக வளைத்துக் கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் தலைமையில் அதிகாரம் செல்லும்போது, எம்.எல்.ஏக்களும் ஏற்றுக் கொள்வார்கள். எந்தப் பதவியிலும் இல்லாத சசிகலாவை, அதிகாரம் என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். அதே அடிப்படையில் முதலமைச்சர் பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்வதற்கு எந்தத் தயக்கமும் காட்டப் போவதில்லை. பன்னீர்செல்வத்தின் துரோகத்தை மக்கள் மத்தியில் முன்வைப்பதில் நாம் தோற்றுவிட்டோம்.

இனி வரும் காலங்களில், 'பன்னீர்செல்வமா, எடப்பாடியா?' என்ற யுத்தம்தான் வலுக்கும். உள்ளாட்சித் தேர்தலுக்குள் தனிக் கட்சி தொடங்கி, நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் முன்னேற முடியும். மத்திய அரசின் அதிகாரமும் நமக்கு எதிராக உள்ளது. மாநில அதிகாரமும் நம் கையைவிட்டுச் சென்றுவிட்டது. நம்முடைய சமூகத்தையும் மோடிக்கு எதிரான சக்திகளையும் ஒன்று திரட்டி, தனிக்கட்சி தொடங்கலாம். இதைப் பார்த்து, நமக்கு ஆதரவாக நமது சமூகத்து எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என நினைக்க வேண்டாம். நம்மோடு பேசிக் கொண்டு இருக்கும் எம்.எல்.ஏக்கள்கூட நம்முடைய முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். சொந்த பலத்தில் முன்னேறுவோம்' எனப் பேசியுள்ளனர். குறிப்பாக, டி.டி.வி தலைமையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும் என்பதை சசிகலா வலியுறுத்தி வருகிறார். இதனைக் குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை" என்றார் விரிவாக.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. தினகரனின் பெரா வழக்குகள் வரிசையில் இதுவும் சேர்ந்துவிட்டது. ஜெயா டி.வி நிர்வாகம் மட்டும்தான் சசிகலா குடும்பத்தின் கைகளில் இருக்கிறது. அதையும் கைப்பற்ற பன்னீர்செல்வம் அணியினர் போராடி வருகிறார்கள். 'அரசியல் இல்லாமல் ஒதுங்கி இருக்க சசிகலா குடும்பத்தினர் தயாராக இல்லை. ஏதேனும் ஒரு அமைப்பாக செயல்படுவோம் எனத் திட்டமிடுகின்றனர். இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்திவிட்டு, அதன்மூலம் மத்திய அரசின் பார்வையில் இருந்து ஒதுங்குவதும் அவர்களின் திட்டமாக இருக்கலாம்' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு