Election bannerElection banner
Published:Updated:

“தி.மு.கவும் அ.தி.மு.கவும் தான் பணநாயகத்தின் ஆணிவேர்!” - முன்னாள் தேர்தல் ஆணையரின் காட்டம்

“தி.மு.கவும் அ.தி.மு.கவும் தான் பணநாயகத்தின் ஆணிவேர்!” - முன்னாள் தேர்தல் ஆணையரின் காட்டம்
“தி.மு.கவும் அ.தி.மு.கவும் தான் பணநாயகத்தின் ஆணிவேர்!” - முன்னாள் தேர்தல் ஆணையரின் காட்டம்

“தி.மு.கவும் அ.தி.மு.கவும் தான் பணநாயகத்தின் ஆணிவேர்!” - முன்னாள் தேர்தல் ஆணையரின் காட்டம்

தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா நடக்கும் என்பது வழக்கமாகிவிட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ததாகக் கூறி... அந்தத் தேர்தல் கடைசி நேரத்தில் தேர்தல் கமிஷனால் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் எதுவாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்துவது இல்லை. இதுகுறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி சமீபத்தில் பேசியபோது, "ஓட்டுக்குப் பணம் கொடுக்கக் கூடாது. அப்படிப் பணம் கொடுப்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று பல ஆண்டுகாலமாகத் தேர்தல் ஆணையம் சொல்லிக்கொண்டிருக்கிறது. இதை எந்தக் கட்சிகளும் கேட்டப்பாடில்லை. அப்படி அவர்கள் பணம் கொடுப்பது தெரியவந்தால், அவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தொடங்கிவிடுகிறது பணப்பட்டுவாடா. இது ஒருபக்கம் இருக்க, ஆளும் கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ தேர்தல் நெருங்கும்போது, ஒருவர் மீது ஒருவர் வழக்குத் தொடுக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால்தான், தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தொடுக்கப்படும் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவுப் போட்டது. பொய்யான வழக்குகளைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகத் திகழ்கிறது. 

தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தமிழ்நாட்டைத் தவிர, வேறு எந்த மாநிலங்களிலும் இதுபோன்ற நிலை இல்லை. இங்குதான் ஒவ்வொரு தேர்தலுக்கும் பணம் கொடுக்கும் முறை மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் காலை பத்திரிகைகளில் பணம்வைத்துக் கொடுப்பார்கள். ஆனால், இப்போது மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்கிறார்கள்; கூப்பன்கள் கொடுக்கிறார்கள்; வாக்காளர்கள் நகைகள் அடகுவைத்திருந்தால் அதை மீட்டுத் தருகிறார்கள்; மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்காமல், அவர்களுக்குப் போய்ச்சேரும் வேறு வழியை யோசிக்கிறார்கள். மக்களும் இப்போது பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டுப்போட வேண்டும் என்ற எண்ணத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எல்லா மக்களையும் நான் குறை சொல்லவில்லை. மக்களைப் பணம் வாங்க வேண்டும் என்று தமிழகத்தில் இரு கட்சிகள்தான் பழக்கப்படுத்தி இருக்கின்றன. இந்தப் பழக்கம் மக்களுக்கு வர அந்த இரு கட்சிகளே ஆணிவேராக இருக்கிறது. அவர்கள் செய்தது தமிழகத்துக்கே அவமானம் ஆகிவிட்டது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி எங்குப் பேசினாலும், தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலமும் நினைவுக்கு வராது. 

மேலும், ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் அதன்மூலம் எப்படி அதிகப்படியான சொத்துக்கள் சேர்க்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன. அந்தச் சூழல் மாறும்வரை ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் மாறாது. இடைத்தேர்தலின் போதுகூடப் பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அதைத் தடுக்க முடியாமல் போனது. பொதுவாக ஒரு தொகுதிக்கு 2,50,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அவர்களைக் கண்காணிக்க மூன்று முதல் ஐந்து கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்த முறை ஆ.கே.நகர் இடைத்தேர்தலில் 270 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். கட்சியைச் சேர்ந்த ஒருவர் 50 வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியும். அப்படிப் பணம் சப்ளைச் செய்பவர்களைக் கண்காணிப்பது கடினம். ஒருவேளை, கண்காணிக்க நினைத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கண்காணிப்புப் பணியில் அமர்த்த வேண்டியிருக்கும். ஏற்கெனவே இருக்கும் அவமானம் போதாதென்று 5 ஆயிரம் மேற்பார்வையாளர்களை அமைத்து மேலும் அவமானப்பட வேண்டாம். மாற்றம் முதலில் அரசியல் கட்சிகளிடம் இருந்து தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

காலங்காலமாக இருந்துவரும் வழக்கம் என்றாலும், இந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் அளவுகடந்த பணம் புரண்டது. பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறி, பணத்தை வாரியிறைக்கச் செய்துள்ளது. மக்களும் தங்களின் தேவையை நிறைவுசெய்யும் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தேவையான பணத்தைக் கட்சிகள் கொடுத்துவிடும். அதன்பிறகு இருக்கும் காலத்துக்கு தேவையான வேலை, படிப்பு இல்லாமல்போக அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. ஓட்டுப் போடும்போது அடுத்த 5 ஆண்டுக்காலத்துக்கு அவர் மக்களுக்கு நல்லது செய்யும் தலைவராக இருப்பாரா என்பதைச் சிந்தித்தது வாக்களித்தால் போதுமானது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு