Election bannerElection banner
Published:Updated:

பாகிஸ்தானின் கோழைத்தன தாக்குதல்! 2013-ல் என்ன சொன்னது பி.ஜே.பி?

பாகிஸ்தானின் கோழைத்தன தாக்குதல்!  2013-ல் என்ன சொன்னது பி.ஜே.பி?
பாகிஸ்தானின் கோழைத்தன தாக்குதல்! 2013-ல் என்ன சொன்னது பி.ஜே.பி?

பாகிஸ்தானின் கோழைத்தன தாக்குதல்! 2013-ல் என்ன சொன்னது பி.ஜே.பி?

பாகிஸ்தான் தன்னுடைய கோரமான - கோழைத்தனமான முகத்தை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, இந்தியாவுக்குள் நுழைந்து, இந்திய ராணுவ வீரர் மற்றும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்று, அவர்களது உடலைச் சிதைத்துத் தன்னுடைய காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. எதிரியாக இருந்தாலும், கைது செய்யப்பட்டால் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று சர்வதேச விதிமுறைகள் பல இருந்தும், பாகிஸ்தான் அதை மதிப்பது இல்லை. அதன் வெளிப்பாடாகவே இந்தச் சம்பவமும் அமைந்திருக்கிறது. 

மே 1-ம் தேதி அதிகாலையில், பாகிஸ்தானின் பார்டர் ஆக்‌ஷன் டீமைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழு தரையில் ஊர்நந்தவாறே காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய வீரர்களைக் கொலை செய்து, உடலைச் சிதைத்துத் திரும்பியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வந்து சென்ற அடுத்த நாள் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஏப்ரல் 17-ல் இந்தியா மேற்கொண்ட பதில் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. ஆனால், இதுபோன்ற செயல்களில் பாகிஸ்தான் ராணுவம் எப்போதும் ஈடுபட்டது இல்லை என்று வழக்கம் போல மறுப்புத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான். நாடு முழுவதும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் கிளம்பியுள்ளதோடு, 'பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டும் வகையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் மக்கள் கோரி வருகின்றனர். ஆனாலும், மத்திய அரசு அமைதிகாத்து வருகிறது. 

"பாகிஸ்தானை எதிர்கொள்ள மோடிக்கு 56 இன்ச் மார்பு இருக்கிறதா?" என்று காங்கிரஸ் மிகக் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தியது. கடும் கண்டனங்கள் எழவே, சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷனரை அழைத்துத் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்தது மத்திய அரசு. 

படுகொலை செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரரின் மகள், 'தன்னுடைய தந்தை படுகொலைக்குப் பழியாக, 50 பாகிஸ்தான் வீரர்களின் தலை வேண்டும்' என்று சொல்லியிருந்தார். 2013-ல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபோது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ், "ஒரு வீரரின் தலைக்குப் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் உருள வேண்டும்" என்று பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. அதேபோல், பெண் எம்.பி ஒருவர் 'மன்மோகன் சிங்குக்கு வளையல் அனுப்பட்டுமா?' என்று கேட்டார். இன்றைக்கு அவர் மத்திய கேபினெட் அமைச்சராக இருக்கிறார். இந்திய வீரர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்வதை தடுக்க முடியாத தற்போதைய மத்திய அரசுக்கு அவர் வளையல் அனுப்புவாரா? என்று தெரியவில்லை.

2013ல் திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, "நம்முடைய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டு எனக்கு கோபம் வருகிறது. நம்முடைய மக்கள் தீவிரவாத தாக்குதலில் உயிரிழக்கின்றனர். இத்தாலி கடற்படை நம்முடைய மீனவர்களை சுடுகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நம் நிலத்துக்குள் புகுந்து வீரர்களை கொல்கின்றனர். ஆனால், டெல்லியில் உள்ள அரசோ பாகிஸ்தானுடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்றார். ஆனால் நம்முடைய வீரர்கள் இப்போது படுகொலை செய்யப்படும்போது அவருக்கு கோபம் வந்ததுபோலவே தெரியவில்லை.

அதற்காக பாகிஸ்தானுடன் போரில் இறங்க வேண்டும் என்று சொல்லவில்லை. பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு தனி அமைச்சரை நியமித்தாலே பெரிய உதவியாக இருக்கும். கோவா முதல்வர் பதவியை ஏற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் மனோகர் பாரிக்கர். இதைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பாதுகாப்புத் துறைக் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. இந்திய ஆட்சி நிர்வாகத்தில், எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் பல கட்ட யோசனைகள், அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை ஒப்புதல்கள் பெற வேண்டியுள்ளது. நிதித்துறையைக் கையில் வைத்துக்கொண்டு பிசியாக இருக்கும் அருண்ஜெட்லியால் பாதுகாப்புத் துறையைக் கவனிக்கப் போதுமான நேரம் இருக்காது. எனவே, போர் அச்சுறுத்தல் உள்ள சூழலில், பாதுகாப்புத் துறைக்கு எனத் தனி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமாக இருக்கிறது. 

அதற்கு அடுத்தக்கட்டமாக, எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு உடனடியாக அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்பட வேண்டும். உடலின் வெப்பத்தை வைத்து உயிர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் தெர்மல் ஸ்கேனர்களை அளிக்க வேண்டும். உயர் தொழில்நுட்ப தெர்மல் ஸ்கேனர் இருந்திருந்தால், கடும் புகைமூட்டம், இருட்டிலும்கூடப் பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஊடுருவலைக் கண்டறிந்திருக்க முடியும். இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தான் வாலை ஒட்ட நறுக்க முடியும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு