Published:Updated:

‘தமிழிசை தலைவராக நீடிக்கக் கூடாது!’ - பொன்னார் உள்ளடியால் கலங்கும் பா.ஜ.க

‘தமிழிசை தலைவராக நீடிக்கக் கூடாது!’ - பொன்னார் உள்ளடியால் கலங்கும் பா.ஜ.க
News
‘தமிழிசை தலைவராக நீடிக்கக் கூடாது!’ - பொன்னார் உள்ளடியால் கலங்கும் பா.ஜ.க

‘தமிழிசை தலைவராக நீடிக்கக் கூடாது!’ - பொன்னார் உள்ளடியால் கலங்கும் பா.ஜ.க

'தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவர்' என சில பெயர்கள் வலம் வரத் தொடங்கியுள்ளன. 'தமிழிசைக்கு எதிராக சிலரைக் களம் இறக்கியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அமித் ஷா வருகையின்போது, மாநிலத் தலைவர் மாற்றம் குறித்து வலியுறுத்த இருக்கிறார்கள். அதனால்தான், ' தமிழிசை நீக்கப்பட இருக்கிறார்' என்ற தகவலைப் பரப்புகின்றனர்" எனக் கொதிக்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர். 

உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தமிழ்நாடு, ஒடிஸா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. அதன் ஒருபகுதியாக வரும் 10-ம் தேதி சென்னை வருகிறார். அதனை அடுத்த இரண்டு நாள்களும் கோவை மாவட்டத்தில் பலதரப்பட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச இருக்கிறார். "மாநிலத் தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.கவை பலமுனைகளிலும் வளர்த்தெடுக்க கடுமையாக பாடுபட்டார். தலைவர் பதவிக்கு அவரை அறிவித்தபோதே ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். பொதுவாக, மாநிலத் தலைவர் பதவியை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவார்கள். 'இரண்டாவது முறையும் தமிழிசையே தொடரட்டும்' என வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார் அமித் ஷா. இதனை கட்சியின் மற்ற நிர்வாகிகள் ரசிக்கவில்லை. 'தமிழிசைதான் தலைவர் என எழுத்துமூலமாக உத்தரவு வரவில்லை. எனவே, அவரது நியமனம் செல்லாது' எனக் கொதித்தனர். இதற்கெல்லாம் கவலைப்படாமல் கட்சிப் பணி செய்து வந்தார் தமிழிசை. தற்போது அமித் ஷா வருகையொட்டி, கட்சிக்குள் மாற்றம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அதன் விளைவாகத்தான் மாநிலத் தலைவர் பதவிக்கு சிலரது பெயரை வலிந்து திணிக்கிறார்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

"ஒடிஸாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது பா.ஜ.க. இதற்கு அடிப்படைக் காரணம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் அந்த மாநில பா.ஜ.க தலைவரும் இணைந்து செயல்பட்டதுதான். 'அதேபோல், தமிழ்நாட்டிலும் மாநிலத் தலைவருடன் இணைந்து செயல்படுங்கள்' என பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது பா.ஜ.க தலைமை. அவரோ, மாவட்டத் தலைவர்களை அழைத்து, தன்னை மட்டும் முன்னிறுத்துமாறு வலியுறுத்துகிறார். மாநிலத் தலைவருடன் இணைந்து செயல்பட அவருக்கு விருப்பமில்லை. தற்போதுள்ள சூழலில், பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் களத்தில் இல்லாததால், அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, 'முதல்வர் ஆக முடியுமா?' என யோசிக்கிறார். 'இதற்கு இடையூறாக தமிழிசை இருப்பார்' எனக் கருதுவதால்தான், அவருடைய பதவிக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேநேரம், தமிழக அரசியல் சூழல் குறித்து, மோடியின் நம்பிக்கைக்குரிய நபர்கள் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'அ.தி.மு.கவுக்குப் பக்கபலமாக இருக்கும் சாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், நமது கட்சி எந்த வகையிலும் வளர்ந்துவிடாது. குறிப்பாக, உ.பியில் யாதவர் சமுதாயத்தை நாம் முன்னிறுத்தியிருந்தால், அதனால் எந்த லாபமும் நாம் அடைந்திருக்க முடியாது. அதேபோல்தான் தமிழக சூழலும். தமிழிசை தொடர்வதே நல்லது' எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழிசையின் தலைவர் பதவி 2019-ம் ஆண்டில்தான் முடிகிறது. அதே ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், கட்சித் தலைவர் பதவியை மாற்றம் செய்ய மாட்டார்கள். தலைவர்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதும் தமிழிசைதான். 'இப்படியொரு வாய்ப்பை அவருக்கு வழங்கிவிடக் கூடாது' என்பதால், தனி லாபி நடத்துகிறார் பொன்னார். அமித் ஷா வருகையின்போது, இந்த விவகாரம் வெடிக்கலாம்" என்றார் விரிவாக.

"தமிழகத்தின் அரசியல் சூழல்களைக் கணித்து அதற்கு ஏற்ற வகையில் சில முடிவுகளை எடுக்க இருக்கிறார் அமித் ஷா. இந்த நேரத்தில் உள்கட்சி விவகாரம் கிளம்புவதையும் சில நிர்வாகிகள் விரும்பவில்லை. இதைப் பற்றி தமிழிசையிடமும் அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அதற்குப் பதில் அளித்தவர், 'நான் என்னுடைய இமேஜை வளர்க்க விரும்பவில்லை. பிரதமரின் செல்வாக்கை உயர்த்தத்தான் பாடுபடுகிறேன். எந்த இடத்திலும் யாருக்கு எதிராகவும் நான் செயல்பட்டதில்லை. கட்சிப் பணிக்கே நேரம் சரியாக இருக்கிறது' எனப் பதில் கொடுத்தார். ஆனாலும், 'புதிய தலைவர் நியமிக்கப்பட்டே ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அதனால்தான், தனக்கு மிகவும் வேண்டிய கே.டி.ராகவன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட சில பெயர்களை வெளியிடுகிறார். இதற்கெல்லாம் தமிழிசை கவலைப்படவில்லை" என்கிறார் அவருடைய ஆதரவாளர் ஒருவர். 

பொன்.ராதாகிருஷ்ணன் தரப்பினரோ, "மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால், தலைமைப் பதவியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் அணிகள் உருவாகாமல் இருக்கும். இரண்டாவது முறையாக தலைவர் பதவிக்கு தமிழிசை நியமிக்கப்படக் காரணம், அந்த நேரத்தில் அவருடைய மகன் திருமணத்துக்கான வேலைகளில் இருந்தார். எனவே, வாய்மொழியாக அகில இந்தியத் தலைமை உத்தரவிட்டது. இன்னும் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. 'இந்தமுறை பெண் தலைமை வேண்டாம்' என்பதால்தான், கட்சிக்காக கடுமையாக உழைக்கும் சிலரது பெயர்கள் முன்னிறுத்தப்படுகின்றன. இதில் எந்தவித அரசியலும் இல்லை. இந்த விவகாரத்தில் பொன்னார் தலையிடவும் இல்லை" என்கின்றனர் தீர்மானமாக.