Published:Updated:

மலைக்க வைக்கும் 'மணல்' கணக்கு...! முதல்வர் அறிவிப்பின் பின்னணி!

மலைக்க வைக்கும் 'மணல்' கணக்கு...! முதல்வர் அறிவிப்பின் பின்னணி!
மலைக்க வைக்கும் 'மணல்' கணக்கு...! முதல்வர் அறிவிப்பின் பின்னணி!

மலைக்க வைக்கும் 'மணல்' கணக்கு...! முதல்வர் அறிவிப்பின் பின்னணி!

'மிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும். இதன் மூலம் மணல் விலை கட்டுப்படுத்தப்படும். மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் ஆற்றுப் படுகைகளில் எதிர்காலத்தில் மணல் இல்லாமல் போய்விடும். எனவே அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முற்றிலும் நிறுத்தப்படும்.'' - இது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பாகும். 'மணல் கொள்ளை என்பது நதிகளின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. அந்த கொடிய வன்முறைக்கு எதிரான முதல்வரின் சிறந்த நடவடிக்கை இது' என்று நீங்கள் கருதினால் மன்னிக்கவும்... நீங்கள் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் அப்பாவி-யாக கருதப்படுவீர். ஏனெனில், 'முதல்வர் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பின்னணியில், பல ஆயிரம் கோடி  லாபம் தரும் கார்ப்பரேட் வணிக நலன் உள்ளடங்கியுள்ளது' என எச்சரிக்கின்றனர் சில நேர்மையான மூத்த அதிகாரிகள். தொடரும் அவர்கள், அதன் நுட்பமான அரசியலை விரிவாக விவரித்தனர்.

''மணல் இருந்தால்தான் நிலத்தடி நீர் உயரும். ஆகவே பொதுமக்கள் இனி தாங்கள் கட்டுகின்ற கட்டிடங்களுக்கு 'எம் சான்ட்' (Manufactured Sand) மணலை பயன்படுத்துங்கள். கட்டுமான தொழிலில் ஈடுபடுகின்றவர்களும் படிப்படியாக 'எம் சான்ட்'- க்கு மாறுங்கள் என வலியுறுத்தியுள்ளார் முதல்வர். ஏன் திரும்ப திரும்ப இதை வலியுறுத்தினார் என்பதை அறிவதற்கு முன் 'எம் சான்ட்' என்றால் என்னன்னு தெரிஞ்சுக்குறது சரியா  இருக்கும். 'எம் சான்ட்' என்றால் செயற்கையாக உற்பத்தி செய்யும் மணல்-ன்னு  புரிஞ்சுக்கலாம். கடினமான கிரானைட் கற்கள், கருங்கற்கள்  போன்ற கற்களை தூள் தூளாக அரைத்து மணலாக கொண்டு வருவதே 'எம் சான்ட்' ஆகும். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இந்த முறையிலேயே  கட்டட கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.  நம் தமிழ்நாட்டில் மட்டுமே மணல் வைத்து கட்டடம் கட்டும் முறை உள்ளது. இப்படிப்பட்ட 'எம் சான்ட்' மணல் தொழிலை நோக்கி எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமான மைன்ஸ்  பிரதர்ஸ் நகர்வதே முதல்வரின் வலியுறுத்தலுக்கான முதன்மையான காரணம்.

யாரிந்த மைன்ஸ்  பிரதர்ஸ்?

ஒடிசா மாநிலத்தில், ஆறுகள் சங்கமிக்கும் பெயர் கொண்ட இந்த மைன்ஸ் நிறுவனம் இரும்பு தாது பொருட்களை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்துவருகிறது. இத்தொழிலை நடத்திவரும் மைன்ஸ் பிரதர்ஸ் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட பெரும் தொழிலதிபர்கள். இவர்களின் பூர்வீகம் சேலம் மாவட்டம். எடப்பாடி பழனிசாமியின்  சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாமல் அவருக்கு மிக நெருக்கமான நட்பு வட்டத்திலிருப்பவர்களும்கூட. பெரிய அளவிலான 'வைட்டமின் சி' பரிமாற்றங்கள் இவர்களுக்குள் உண்டு. இவர்களுக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் குவாரிகள் இருக்கின்றன. இப்போ புதுசா பெருந்துறை, கரூர், மதுரை, திருச்சி, சென்னை-ஆந்திரா பார்டரில் என பல  இடங்களில் குவாரிக்கு நிலம் வாங்கியிருக்காங்க. அதுல 'எம் சான்ட்' மணல் அரைக்கும் 'கிரஷர்' கொண்டு வராங்க. ஆற்று மணல் அள்ளுவதன் மூலமே ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இப்போ, யோசிச்சுப் பாருங்க ஆத்து மணல் அள்ளுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் ? மக்கள் 'எம் சான்ட்' மணல் வாங்க தீவிரமாவார்கள். எம் சேண்ட் மணல் வணிகம் பூம் ஆகும். அதன் மூலம் தனியார் முதலாளிகள் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். கார்ப்பரேட் முதலாளிகளான மைன்ஸ்  பிரதர்ஸ், மொத்தமாக பெரிய தொகையை மூலதனம் செய்யும்பொழுது, சிறு சிறு குவாரி வைத்திருப்பவர்கள் அடிபடுவார்கள். இறுதியில் இல்லாமல் போவார்கள். அதன் பின் இந்த  கார்ப்பரேட் முதலாளிகள் வைப்பதே விலையாகும். சில நூறுகளில் தொடங்கும் இந்த வர்த்தகம் போகப் போக பல ஆயிரம் கோடிகள் லாபம் கொடுக்கும். எனவே, ஓசூரில் கிரஷர் போட்டு 'எம் சான்ட்' மணல் அரைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள் மைன்ஸ் பிரதர்ஸ். போகப்போக பிற மாவட்டங்களில் பணிகளைத் தொடர உள்ளனர்.தற்போது இந்த தொழிலில் பல அமைச்சர்களும் களமிறங்க தயாராகியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி போட்ட லாப கணக்கு :

மூன்று முக்கிய காரணங்களே முதல்வரை, இந்த முக்கிய அறிவிப்புக்கு தள்ளியது. முதல் காரணம், ஆத்து மணல் கொள்ளைக்கு எதிராக பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தன. மக்களிடமும்  கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு உணர்வு பெருகியபடி இருந்தது. இரண்டாம் காரணம்,  மத்திய சுற்றுச்சூழல் அமைப்பிடமிருந்து தொடர்ந்து எதிர்க்குரல்கள் வெளிப்பட்டு வந்தன. இதை சரிக்கட்ட வேண்டும். மூன்றாம் காரணம், தமக்கு வேண்டப்பட்ட மைன்ஸ் பிரதர்ஸ் இந்த தொழிலில் தீவிரமடைய திட்டமிட்டது. ஆக, ஆத்து மணல் தடையால் மக்களிடமும், சுற்றுச்சூழல் அமைப்புகளிடமும் நல்ல பெயர் கிடைக்கிறது. அதேசமயம் எம் சான்ட் நோக்கி மக்களை நுகர்வாளர்களாக மாற்றுவதன் மூலம் தொடர்ச்சியாக சீராக நடக்க இருக்கும் வணிகம் மூலம் லாபமும் கிடைக்கும் என தற்போது  ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கெனவே கிரானைட்  மாஃபியாக்கள் மூலம் கல்குவாரிகளில்  நடக்கும் சட்டவிரோத வணிகம் எத்தனை ஆயிரம் கோடி என்று மக்களுக்கே தெரியும். தற்போது  குவாரி கிரஷர் வைத்து எம் சான்ட் தொழில் செய்வதன் மூலம்  கிடைக்கும் லாப கணக்கை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். போகப்போக பாருங்கள் எல்லாம் உங்களுக்கே புரியும்" என்றனர் அர்த்தமுடன்.மேற்கண்ட தகவல்களை திரட்டி தமது ரிப்போர்ட்டாக மேலிடத்திற்கு அனுப்பியுள்ளது மத்திய புலனாய்வுத்  துறை. இவையனைத்தையும் கூர்ந்து கண்காணித்து வருகிறது மத்திய பி.ஜே .பி அரசு.

மக்கள் சேவையே மகேசன் சேவை :

''ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசுவார்கள். மக்கள் மீதான அக்கறையிலும், இயற்கை மீதுள்ள பற்றுதலின் காரணத்தினாலுமே ஆத்து மணலுக்கு மாத்து மணலாக எம் சான்ட் மணல் முறையை யோசித்தார் முதல்வர். அதற்கான முயற்சிகளையும் தொடங்கியுள்ளார். அதையும் சிறுமைப்படுத்தலாமா? அவரைப் பொறுத்தவரை 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதில் தெளிவாக இருப்பார்'' என்கின்றனர் எடப்பாடி பழனிசாமியுடன் வலம் வரும் ஆதரவாளர்கள். 

மக்கள் சேவையோ... கார்ப்பரேட் சேவையோ... உண்மைகளை ஒருநாளும் மண்மூடி மறைக்கமுடியாது!

அடுத்த கட்டுரைக்கு