Published:Updated:

கைத்தறியில் மின்சாரம்... வியக்கவைக்கும் வில்லேஜ் விஞ்ஞானி! #RenewableEnergy

ஜி.பழனிச்சாமி
கைத்தறியில் மின்சாரம்... வியக்கவைக்கும் வில்லேஜ் விஞ்ஞானி! #RenewableEnergy
கைத்தறியில் மின்சாரம்... வியக்கவைக்கும் வில்லேஜ் விஞ்ஞானி! #RenewableEnergy


சோலார், பயோகியாஸ், எரிகட்டி, காற்றாலை உள்ளிட்ட ஆற்றல்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசு படுத்தாத சுயசார்பு மின்சார உற்பத்தி பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் கோவையைச் சேர்ந்த நெசவாளி ஒருவர் தான் புடவை நெசவு செய்யும் கைத்தறியில் இருந்து சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்து வீட்டு வெளிச்சத்திற்கு தேவையான பல்புகளை எரியவிடுகிறார்.

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச்சேர்ந்த காரப்பன் என்கிற நெசவாளிதான் கைத்தறி மூலம் மின் உற்பத்திக்கு செய்யும் நுட்பத்தைக் கண்டுபிடித்த வில்லேஜ் விஞ்ஞானி. இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கொடுத்து கௌரவ நெசவு பயிற்சியாளராகவும்      காரப்பனை நியமனம் செய்துள்ளது சேலம்பொன்னம்மா பேட்டையில் இயங்கிவரும் தேசிய கைத்தறி கல்லூரி மற்றும் சேவைமையம்.
கைத்தறியில் இருந்து மின்சாரம் எப்படி உற்பத்தியாகிறது என்பதை காணும் விதமாக சேலம் தேசிய கைத்தறி சேவை மையத்திற்கு சென்றோம்.

காலும் கையும் ஒரு சேர வேலைசெய்ய, கவனமாக புடவை நெசவில் இருந்தார் காரப்பன். கைத்தறி வேலையை கவனைத்துக்கொண்டே நம்மிடம் பேசினார் .

”எனக்கு சொந்த ஊர் கோவை சிறுமுகை. நான் பள்ளிக்கூடமே போனதில்லை. 10 வயசில் பிடித்த நெசவை 60 வருஷமா விடாமல் செய்துவர்றேன். என்னோட உயிர் மூச்சே நெசவுதான். விவசாயத்துக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் மேற்கொண்டுவரும் தொழில்  நெசவுதான். அப்படியிருந்தும் அதில் சொல்லும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை. புதிய தொழில் நுட்பங்கள் இதில் ஏற்படவே இல்லை. பரம்பரை பரம்பரையாக ஒரே மாதிரியான வாழ்க்கை சூழலில்தான் நெசவாளிகள் உள்ளார்கள். 
நெசவுத்தொழிலின் மேண்மை, அதில் உள்ள சிரமங்கள், புகுத்தப்பட வேண்டிய புதுமை போன்ற பல விஷயங்கள் வெளி உலகத்திற்கு தெரியாமலே இருக்கிறது. இதற்கான முதல் கட்ட முயற்சியாக ‘‘ கைத்தறி களஞ்சியம்‘‘ என்கிற புத்தகம் ஒன்றை நண்பர்கள் உதவியுடன் எழுதி வெளியிட்டேன். அந்தப்புத்தகம் நெசவாளிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில கல்லூரிகளில் பாடத்திட்டத்திலும் அந்த புத்தகம் சேர்க்கப்பட்டது. எழுதப்படிக்க தெரியாத, என்னுடைய புத்தகம் கல்லூரியில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது எனக்கான அங்கீகாரமாக எடுத்துக்கொண்டேன். தொடர்ந்து ஊனமுற்ற நெசவாளிகள் கைத்தறி தொழிலுக்கு தகுதியில்லை என்கிற நிலை இருந்து வந்தது. அதை மாற்றும் விதமாக ஊனமுற்றோரும் நெசவு செய்யும் விதமாக ஒரு தறியை வடிவமைத்தேன். அதை ஏற்றுக்கொண்ட அரசாங்கம். ஊனமுற்றோர் பயிற்சி பெரும் விதமாக தேசிய கைத்தறி சேவை மையத்தில் அதை பொருத்தியுள்ளார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் ஊனமுற்றோருக்கு இந்த தறிமூலம் பயிற்சி கொடுக்கும் பணியும் எனக்கு கொடுத்துள்ளார்கள்.

மேலும் நெசவு கூடத்தில் எந்த நேரமும் நல்ல வெளிச்சம் இருக்கவேண்டும். அப்போதுதான் துல்லியமாக நெசவை மேற்கொண்டு, சேதாரம் இல்லாமல் புடவை உற்பத்திசெய்யமுடியும். அடிக்கடி ஏற்படும் மின்தடையால் சரியாக நெசவு செய்யமுடியாமல் நெசவாளிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். உற்பத்தியும் வெகுவாக குறைந்தது. இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று முயற்சி செய்தேன். அந்த முயற்சியின் விளைவுதான் கைத்தறியில் இருந்து மின் உற்பத்தி.

மொத்தம் 7ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு தறியில் உற்பத்தி செய்யும் மின்சாரம் மூலம் 7 எல்.ஈ.டி.பல்புகளை எரிய வைக்கமுடியும்.
வழக்கமாக இயங்கும் தறியில் சிறு மாற்றம் செய்து , கைத்தறி இயங்கும் போது சுழலும் சக்கரத்தில் சிறிய டைனமோ ஒன்றை பொருத்தி வீலோடு சேர்த்டு அதையும்த சுழல விட்டு அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து விளக்குகள் எரிக்கிறேன்.
புடவை நெசவுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இந்த மின் உற்பத்தி நடக்கிறது.

முதலில் பரிசாத்த முறையில்தான் இந்த கைத்தறி மின் உற்பத்தியை தொடங்கினேன். இதை கேள்விப்பட்டு எனது வீட்டுக்கு வந்து பார்த்த தேசிய கைத்தறி மையத்தின் அதிகாரிகள், உங்கள் வீட்டில் மட்டும் இந்த மின் உற்பத்தி நடை பெற்றால், அது குடத்துக்குள் இட்ட விளக்காகி விடும். இது உலக நெசவாளிகளுக்கும் போய் சேர வேண்டிய தொழில் நுட்பம் என்று கூறி,  சேலத்தில் உள்ள தேசிய கைத்தறி மையத்தில் மின் உற்பத்திக்கு தோதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி ஒன்றை அமைத்து, அதை இயக்கி மின் உற்பத்தி செய்யும் பரிசாத்த நெசவை இயக்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்து விட்டார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த தறியை இயக்கி வருகிறேன். பல் வேறு மாவட்டங்களைச்சேர்ந்த நெசவாளிகள் எனது கண்டு பிடிப்பை நேரில் வந்து பார்த்து வியந்து போகிறார்கள்.அதோடு நில்லாமல் தங்கள் வீட்டு கைத்தறியிலும் இது போன்ற மின் உற்பத்தி கருவி அமைத்து த்ருமாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

என்ற காரப்பன்.... கைத்தறியில் மின் உற்பத்தி என்பது ஆரம்பம். வரும்காலங்களில் நெசவாளி கிராமங்களில் இயங்கும் அனைத்து கைத்தறிகளிலும் மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படி ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான தறியில் இருந்து மின் உற்பத்தி நடைபெறும் போது, அது அந்த கிராமத்தின் முழு முன்தேவையை பூர்த்தி செய்யும். அரசாங்கத்தை எதிர்பார்க்க தேவையில்லை. அரசாங்கம் மானியம் கொடுத்தால் பாட்டரிகள் மூலம்சேமித்து இரவிலும் தடை இல்லா மின்சாரம் பெறமுடியும். சுயசார்புடன் வாழமுடியும்” என்றார் காரப்பன்.

காரப்பன்: 9865924102