Published:Updated:

சேகர் ரெட்டியிடம் சொத்து வாங்கிய அமைச்சர்கள் யார்? - டெல்லிக்கு ‘சிக்னல்’ கொடுத்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

சேகர் ரெட்டியிடம் சொத்து வாங்கிய அமைச்சர்கள் யார்? - டெல்லிக்கு ‘சிக்னல்’ கொடுத்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive
சேகர் ரெட்டியிடம் சொத்து வாங்கிய அமைச்சர்கள் யார்? - டெல்லிக்கு ‘சிக்னல்’ கொடுத்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

சேகர் ரெட்டியிடம் சொத்து வாங்கிய அமைச்சர்கள் யார்? - டெல்லிக்கு ‘சிக்னல்’ கொடுத்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

மிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது வருமான வரித்துறை. ‘சட்டமன்றத் தேர்தலில் கார்டன் தரப்பில் இருந்து செலவுகளைக் கையாண்டதே சேகர் ரெட்டிதான். அ.தி.மு.கவை ஒட்டுமொத்தமாக வீழ்த்தும் ஆயுதமாகவும் ரெட்டி இருக்கப் போகிறார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

‘அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பு சாத்தியம் ஆக வேண்டும் என்றால், இந்த ஆட்சி கலைக்கப்பட்டால்தான் முடியும்' என நேற்று பேட்டியளித்தார் நடிகர் ஆனந்தராஜ். அதையொட்டியே காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்திலேயே சேகர் ரெட்டி மீது பார்வையை அழுத்தமாகப் பதித்தது வருமான வரித்துறை. ஜெயலலிதா மரணமடைந்த ஓரிரு நாட்களில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி உள்பட மூன்று பேரை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சென்னை, வேலூர் என ரெட்டி தொடர்பான வர்த்தக நிறுவனங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அதன்பின்னர், ரெட்டிக்கு கார்டன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்த அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவையும் விசாரித்தது வருமான வரித்துறை. தலைமைச் செயலகம், ராமமோகன ராவின் மகன் நடத்தும் தொழில் நிறுவனங்கள் என ஆளும்கட்சி வட்டாரத்தையே கலங்கடித்தது மத்திய அரசின் அதிரடி சோதனைகள். இந்த விவகாரத்தில் சிறைத் தண்டனையை எதிர்கொண்டு வருகிறார் சேகர் ரெட்டி.

‘அடுத்து தங்களை நோக்கித்தான் வருவார்கள்’ என அமைச்சர்கள் அச்சப்பட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நெருங்கவில்லை. “பொதுப்பணித்துறையை பன்னீர்செல்வம் கையாண்டு வந்த நேரத்தில்தான் கார்டனுக்குள் கால்பதித்தார் சேகர் ரெட்டி. அதே 2011 காலகட்டத்தில் கார்டனை விட்டு ஜெயலலிதாவால் விரட்டப்பட்டார் சசிகலா. இந்த இடைவெளியில் கார்டன் நெருக்கத்தை வலுவாகவே பயன்படுத்திக் கொண்டார் ரெட்டி. சசிகலா மீண்டும் கார்டனுக்குள் வந்த பிறகு, அவருடைய நம்பிக்கைகுரியவராகவும் வலம் வந்தார். பொதுப் பணித்துறையின் மிக முக்கியமான ஒப்பந்தங்கள் எல்லாம் ரெட்டிக்கே வந்து சேர்ந்தன. கார்டனின் அன் அக்கவுண்ட்டுகளை ரெட்டி நிறுவனமே கையாண்டு வந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவை ஒட்டுமொத்தமாக வீழ்த்துவதற்கு சேகர் ரெட்டியை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், 

“சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் ஜெயலலிதா. இந்த வெற்றிக்கு ரெட்டியும் ஒரு காரணம். 60 சட்டமன்றத் தொகுதிகளின் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். அந்த அறுபது தொகுதிகளிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவருக்கும் பணத்தை வாரி இறைத்தார். 'எந்தெந்த வழியாக பணத்தைக் கொண்டு செல்லலாம்?' என அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படிதான் அமைச்சர்கள் செயல்பட்டனர். திருப்பூர் அருகே பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னரும் கார்டன் மர்மத்தின் ஒருபகுதியாகவே இருந்தது. அரசின் மூத்த அமைச்சர்கள் பலரும் ரெட்டி நிறுவனத்தோடு நெருக்கமான தொடர்பில் இருந்தனர். அமைச்சர்களின் சொத்துக்களை அவர்தான் கையாண்டு வந்தார். ரெட்டி கைதான நேரத்தில், 'பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் சிக்குவார்' என எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் 151 கோடி ரூபாய்க்குப் போலியான வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, பணத்தை முதலீடு செய்ததாக தகவல் வெளியானது. அதன்பிறகு இளங்கோவன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியும் தப்பித்துக் கொண்டார். இப்போது ஆட்சிப் பொறுப்பில் பழனிசாமி இருந்தாலும், சசிகலாவுக்கு நெருக்கமான அமைச்சர்களை தூக்கியடிக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதன் ஒருபகுதியாகத்தான் வருமான வரித்துறை கடிதத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது" என்றார் விரிவாக. 

"சேகர் ரெட்டி விவகாரத்தின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட ஐந்து அமைச்சர்களின் பெயர் அடிபட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண விநியோகப் பட்டியலைப் பார்த்தால், எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்பட ஏழு அமைச்சர்கள் சிக்குகின்றனர். இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, விஜயபாஸ்கரை நீக்கும் முடிவில் இருக்கிறார் பழனிசாமி. இதை அறிந்து சசிகலா ஆதரவு அமைச்சர்கள் கொதிப்பில் இருக்கின்றனர். ‘டெல்லியில் இருந்து தகவல் வருகிறது. அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் செய்கிறோம். வேண்டுமானால் அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள்' எனக் கறாராகக் கூறிவிட்டது முதல்வர் அலுவலகம். அமைச்சர்களை சமாதானப்படுத்தும் எண்ணத்திலும் பழனிசாமி இல்லை. வருமான வரித்துறை அறிக்கையின்படி, லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்ய உள்ளனர். இரண்டு அமைச்சர்களைப் பெயரளவுக்கு நீக்கிவிட்டு, அரசைக் காப்பாற்றிக் கொள்ளும் முடிவில் இருக்கிறார் பழனிசாமி" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு