Published:Updated:

“ஆசைப்பட்டேன்... அது நிறைவேறவில்லை...!” சிறைக்குள் இருக்கும் வைகோவின் வருத்தம்

“ஆசைப்பட்டேன்... அது நிறைவேறவில்லை...!” சிறைக்குள் இருக்கும் வைகோவின் வருத்தம்
“ஆசைப்பட்டேன்... அது நிறைவேறவில்லை...!” சிறைக்குள் இருக்கும் வைகோவின் வருத்தம்

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஏப்ரல் 3-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தாலும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து அறிக்கை வெளியிட்டு தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். ம.தி.மு.க 24-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மே 6-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ‘கட்சி தொடக்க விழா’ கூட்டம் நடத்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறையில் இருந்தவாறே ம.தி.மு.க அதிகாரப்பூர்வ ஏடான சங்கொலியில் தொண்டர்களுக்கு கடிதமும் எழுதி வருகிறார். 5.5.2017 தேதியிட்ட இதழில், 'சிறை சென்றது ஏன்?' என்ற மூன்றாவது கடிதத்தில், 'தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் கலிங்கப்பட்டி ஊராட்சி' என்று எழுதியுள்ள கடிதத்தில் கூடங்குளம் அணு மின் நிலைய  பிரச்னை, சீமைக் கருவேல மரம் ஒழிப்பு, தேனி நியூட்ரினோ ஆய்வகம், மது ஒழிப்பு என்று பல்வேறு போராட்டக் களங்கள் குறித்து விளக்கி இருக்கிறார். குறிப்பாக, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மூடும் போராட்டத்தில் தனது தாயார் மாரியம்மாளின் போராட்டம் குறித்து உருக்கமாக எழுதியுள்ளார். அதை பார்ப்போம்.

''தமிழகம் எங்கும் நடந்தே சென்று டாஸ்மாக் கடைகளை அகற்றச் சொல்கிறோம். ஆனால் நமது சொந்த ஊரிலேயே அகற்றவில்லையே? என்ற எண் எண்ணம் என் இதயத்தில் முள்ளாக உறுத்திக் கொண்டே இருந்தது. காந்தியவாதி சசிபெருமாள் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் சாகடிக்கப்பட்டதை கண்டித்து 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், எனது தாயார் மாரியம்மாள் ஆகஸ்ட் 1-ம் தேதியே கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமத்து தாய்மார்கள்  பொதுமக்களுடன் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்துகிறார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. முன்பு போல வேகமாக நடக்க முடியாததால், நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அதை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு செல்ல அறப்போர் களத்துக்கு தலைமை தாங்கினார்.  அந்த உண்ணாநிலை போராட்டத்தில் துளி நீர் கூட பருகாததன் விளைவு விபரீதம் ஆகியது. தனது 94 வயதில் சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் இருக்கும் நிலையில் இந்த அறப்போராட்டம் நடத்தியதால் அவர் உடல் நலிந்தது.

ஆகஸ்ட் 2-ம் நாள் கலவர நாளாக விடிந்தது.  ஆகஸ்ட் 3-ம் தேதி அண்ணன் நல்லகண்ணு எங்கள் வீட்டுக்கு வந்து என் அன்னையிடம் பரிவுடன் பேசினார். ''பெரிய வீட்டு தாயி; போர்க்குணம் ரத்தத்திலேயே இருக்கிறது" என்று பாரட்டிவிட்டு சென்றார். சரியாக தொன்னூற்றி ஆறாம் நாள் நவம்பர் 6-ம் தேதி என் வீரத்தாய் மாரியம்மாள் இந்த உலகை விட்டு மறைந்தார்கள். நான் மருத்துவமனைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் உயிர் பிரிந்ததாம். தேர்தல் அரசியலில் நான் தோற்றதில் மனதுக்குள் வேதனைப்பட்டு இருப்பார்கள். அவர்கள் கண் மூடுவதற்குள் நமது இயக்க வெற்றியை அவர்கள் பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை.

2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி கலிங்கப்பட்டி ஊராட்சி மன்ற  கூட்டம் அதன் தலைவர் வை.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. 'டாஸ்மாக் கடை எண் 10862 அகற்றப்பட வேண்டும்' என்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கலிங்கப்பட்டி கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று 2016-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த அப்பீலை உச்சநீதிமன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மனுவை டிஸ்மிஸ் செய்து தூக்கி எறிந்தது. வாழ்க்கையில் பெரியதாக சாதித்துவிட்டோம் நாங்கள். இல்லை இல்லை... எல்லாப் புகழும் பெருமையும் வீரத்தாய் மாரியம்மாள் அவர்களுக்கே. அவர்தானே ஆகஸ்ட் 1-ம் தேதி அறப்போர்க்களம் அமைத்தார். உண்ணாமல், நீர் பருகாமல் போராடினார். அதனால்தானே மறுநாள் கலகம் ஏற்பட்டது. அந்த அறப்போராட்டத்தில்தானே உடல் நலம் பாழ்பட்டு உயிர் நீத்தார். இல்லையேல் இன்னும் ஐந்து ஆண்டுகளாவது உயிரோடு இருந்திருப்பாரே? இப்போது, கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது.

என் அன்புத் தாயார் மாரியம்மாள் மறைந்த பின்னர் சென்னையில் அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் இல்லம் சென்றேன். ''தம்பி உன் தாய் ஒரு வீரமங்கை. கலிங்கப்பட்டியில் உள்ள மக்கள்  அவருக்கு வெண்கலச்சிலை எழுப்ப வேண்டும்'' என்றார். இந்தச் செய்தியை நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ராசேந்திரன் கவனத்துக்கு கொண்டு போகச் சொன்னார். மது ஒழிப்பு பேரணி 21.03.2017 அன்று கலிங்கப்பட்டியில் நடந்தபோது ராசேந்திரன் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், ''வீரத்தாய்க்கு விழா எடுப்போம். வெண்கலச்சிலை எழுப்புவோம்'' என்று அறிவித்தார். 

கோடை வெயிலின் தாக்கம் தமிழர்களை வாட்டி வதைக்கிறது. மக்கள் படும் அவதியைப் போக்க நம்மால் இயன்றதைச் செய்வோம். மறுமலர்ச்சி மோர், நீர் பந்தல் ஆங்காங்கு அமைத்து பகல் முழுக்க அதனைப் பராமரிக்க கண்மணிகள் தங்கள் நேரத்தை முழுமையாக ஒதுக்கிப் பணிகள் செய்ய வேண்டும். கடிதம் மிக நீண்டுவிட்டது. ஆற அமர சிந்தித்து எழுதுவதற்கு சிறைக்குள்தானே நேரம் வாய்க்கிறது! - என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.