Published:Updated:

மீனவர்கள் மீது தாக்குதல்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

மீனவர்கள் மீது தாக்குதல்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
மீனவர்கள் மீது தாக்குதல்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
மீனவர்கள் மீது தாக்குதல்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

சென்னை:இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த  வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா   கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,”கடந்த 26.6.2012 அன்று  கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற் படையினரால்  மீண்டும் துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர  விரும்புகிறேன்.

25.6.2012 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 704 இயந்திர மீன்பிடி படகுகள்  மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. அதில், 45 படகுகளில் சென்ற மீனவர்கள் 26.6.2012  அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்து  சித்ரவதை செய்துள்ளனர். மீனவர்களின்  வலைகளையும்,கயிறுகளையும் அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களை விரட்டி  அடித்துள்ளனர்.இதனால், மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், சமூக  விரோதிகளாலும் தாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த 12 மாதங்களில்  அப்பாவி மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்து,  இதில் தாங்கள் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என நான் வலியுறுத்தியதை தாங்கள்  அறிவீர்கள்.

இச்சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சி அடையச் செய்ததுடன், நமது மீனவர்களின் மனதில்,  மனரீதியிலான அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எந்தவிதமான  அரசியல் மற்றும்  பூகோள ரீதியிலான எல்லைகள் வரையறை இன்றி, கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள்  பரம்பரம்பரையாக மீன்பிடித்து வந்துள்ளனர். அந்த உரிமை தொடர்ந்து நிலைநாட்டப்பட  வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

ஆகவே,இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்  எனவும், கச்சத்தீவு அருகில் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்களை  துன்புறுத்தக் கூடாது எனவும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்,  மீனவர்களை தடுக்கக்கூடாது எனவும், தனது நாட்டு கடற்படையினருக்கு உத்தரவு  விடும்படி இலங்கை அரசிடம் தாங்கள் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்  கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.