Published:Updated:

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

ப.திருமாவேலன்

##~##

நாடாளுமன்ற வளாகத்தில் ஹாயாக நின்றிருந்தார் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி. அவரைச் சந்தித்த நிருபர்கள், 'தமிழ்நாட்டில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கும்?; கருணாநிதியை வைத்திருப்பீர்களா... கழற்றிவிடுவீர்களா?’ என்று கேட்டார்கள். சிரித்தபடியே, 'அதற்குள் என்ன அவசரம்? ஐந்து மாநிலங்களின் தேர்தல்கள் முடியட்டும். பிறகு சொல்கிறேன்’ என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் கூட்டணிகளை முடிவுசெய்யும் பொறுப்பை அந்தோணியிடம்தான் சோனியா கொடுத்துள்ளார். அவரே, ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்காகத்தான் காத்திருக்கிறார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை கமலாலயத்தில் இரண்டு இட்லி, இரண்டு வடை, ஒரு மசாலா தோசை, ஒரு கப் லஸ்ஸி சாப்பிட்டுவிட்டு, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் விழாவுக்குத் தயாரான மோடியிடம் பாரதிய ஜனதா நிர்வாகிகள், கூட்டணி பற்றி வாயைப் பிடுங்கப் பார்த்தார்கள். 'இப்போதைக்கு அதில் முடிவுசெய்ய எதுவும் இல்லை. ஐந்து

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

மாநிலங்களின் தேர்தல்கள் முடியட்டும். அவற்றின் முடிவுகளை வைத்து கூட்டணி பற்றி பேசிக்கொள்ளலாம்!’ என்று சொல்லிவிட்டு கார் ஏறினார்.

இப்படி இந்தியாவின் அனைத்து மாநில அரசியல் வியூகங்களும் அந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த மாநிலங்களின் தேர்தல்கள் நடப்பதால், அவற்றை, 'மினி பார்லிமென்ட் எலெக்ஷன்’ என்றே டெல்லி வட்டாரத்தில் குறிப்பிடுகிறார்கள்.  

ந்த ஐந்து மாநிலங்களிலும் முக்கியமானது டெல்லி சட்டமன்றத் தேர்தல். செங்கோட்டை இருக்கும் ஊரைக் கைப்பற்றினாலே, செங்கோட்டையை நெருங்கிவிட்டதாக அர்த்தம் என்பதால், டெல்லி சட்டமன்றம் அனைவரின் கவனத்தையும் அதிகமாக ஈர்த்துள்ளது. மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் நாற்காலியில் ஷீலா தீக்ஷித் அமர்ந்திருக்கிறார். பொதுவாக யாரையும் தனித்து வளரவிடாத காங்கிரஸ் தலைமை, அவரை மட்டும் அனுமதித்திருப்பதற்கு சோனியாவின் நட்பே காரணம். அமைதியானவர், அடக்கமானவர், சர்ச்சையில் சிக்காதவர் என்ற நல்ல பெயர் ஷீலாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மோசடிகள் அதை அதளபாதாளத்துக்கு இறக்கிவிட்டன. அந்த மோசடி வர்த்தகத்தின் பின்னால் ஷீலாவின் மகன் இருந்தார் என்பது சிக்கலை இன்னும் அதிகப்படுத்தியது. இந்தக் காலகட்டத்தில் கிளர்ந்தெழுந்த அண்ணா ஹஜாரே, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் டெல்லியை தங்களது போராட்ட மையமாக அமைத்தார்கள். அரசியல் கட்சிகள் மீதான கசப்பால் ஒதுங்கி இருந்த இளைய சமுதாயம், இவர்கள் பின் திரண்டது ஷீலாவை இன்னும் தர்மசங்கடப்படுத்தியது.

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

ஆனால், 'இதெல்லாம் எம்மாத்திரம்’ என்பதுபோல ஷீலாவுக்கு பெருந்துயரம் கொடுத்த சம்பவம், டெல்லியில் நிகழ்ந்த மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்காரம். 'பெண்கள் வாழ முடியாத நகரம்’, 'ஒரு பெண் ஆட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை’ என்றெல்லாம் நடு வீதியில் இறங்கி மாணவ-மாணவியர் போராடியபோது, வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், 'பெண்கள் ஏன் நேரங்கெட்ட நேரத்தில் வேலைக்குப் போகிறார்கள்?’ என்று ஷீலா கேட்டது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவியைத் தக்கவைக்கப் போராடுகிறார் ஷீலா.

பா.ஜ.க., தனது முதல்வர் வேட்பாளராக ஹர்ஷ வர்தனை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை முழுமையாக ஹர்ஷ வர்தன் பிடித்தால், நிச்சயம் ஷீலாவுக்கு சிக்கல்தான். ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் பா.ஜ.க-வுக்கு முழுமையாகப் போய்விடாமல் பிரிக்கும் கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி’ இருக்கிறது. 'அரவிந்த், அதிக வாக்குகளை வாங்குவது நமக்குத்தான் நல்லது’ என்று நினைக்கிறது காங்கிரஸ். ஆக, தலைநகர் அரசியல் தற்போது தள்ளாட்டத்தில் இருக்கிறது!

டெல்லிக்கு அடுத்த முக்கியத்துவம் மத்தியப் பிரதேசத்துக்கு அளிக்க வேண்டும். இங்கு மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கிறார் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சிவராஜ்சிங் சவுகான்.

அத்வானியின் அசைக்கமுடியாத சிஷ்யர். 'மோடி திறமைசாலி, குஜராத்தை முன்னேற்றியவர். அதனால் அவர் பிரதமர் ஆகலாம்’ என்று ஒரு கோஷ்டி மேளம் கொட்டியபோது, 'சவுகானும் திறமைசாலிதான். அவரும் மத்தியப்பிரதேசத்தை முன்னேற்றியவர். அதனால் அவர் பிரதமர் ஆகலாம்’ என்று கட்சிக் கூட்டத்தில் அத்வானி பேசும் அளவுக்குப் பெயர் வாங்கியவர். ஆனால், 'மோடி என் அண்ணன், அத்வானி என் தலைவர்’ என்று சொல்லித் தப்பித்த சாமர்த்தியசாலி சவுகான்.

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

எல்லா மாநிலங்களைப் போலவே கனிமவளக் கொள்ளை, சவுகானுக்கும் சிக்கலைக் கொடுத்தது. நரேந்திர குமார் என்கிற ஐ.பி.எஸ்.அதிகாரியை, லாரி ஏற்றிக்கொன்றுவிட்டுத் தப்பிக்கும் அளவுக்கு கொள்ளை நடக்கும் மாநிலம் அது. இந்தக் கெட்டப் பெயர் அனைத்தையும் 'முதியோர் நலன்’ என்ற அஸ்திரம்கொண்டு வீழ்த்திவிட்டார் சவுகான். ஆண் வாரிசு இல்லாத முதியோருக்கு மாதம் 500 ரூபாய் மாத ஊதியம் கொடுத்தார். மாவட்டம்தோறும் முதியோர் இல்லம் தொடங்கி, இரண்டு வேளை சாப்பாடு போடுகிறார். 60 வயதானவர்களுக்கு தீர்த்த யாத்திரை அறிவித்து, ஹரித்வார், பத்ரிநாத், அமர்நாத்... தொடங்கி ராமேஸ்வரம் வரை அழைத்துச் செல்கிறார். இந்துக்களுக்கு இப்படியென்றால், முஸ்லிம்களுக்கும் அஜ்மீர், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணி, சீக்கியர்களுக்கு அமிர்தசரஸ் என்று 'எம்மதமும் சம்மத’க் கொடி பிடிக்கிறார். இந்தக் 'கடவுளுடன் கூட்டணி’ வியூகத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி திண்டாடுகிறது!

ராஜஸ்தானை, 'மகாராஜாக்களின் மாநிலம்’ என்பார்கள். அதனால்தான் அங்கிருந்து வரும் தகவல்கள் அனைத்தும் மகாராஜா சேட்டைகளாக இருக்கின்றன. மாநிலத்தை இப்போது ஆள்வது காங்கிரஸ். அதன் முதலமைச்சர் அசோக் கெலாட். இவர் மீது    100 பக்கங்களுக்கு ஊழல் புகாரை வெளியிட்டுள்ளார் பாரதிய ஜனதாவின் ஸ்டார் வேட்பாளர் வசுந்தரா ராஜே சிந்தியா. இவர் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர். 'வசுந்தரா 22 ஆயிரம் கோடி முறைகேடு செய்துவிட்டார்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்தான் இந்த அசோக் கெலாட். இப்போது இவர் மீதும் ஊழல் புகார்.

இந்த நிலையில் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கிக்கொண்டே இருக்கிறார்கள் ஆளும் கட்சிக்காரர்கள். நர்ஸ் ஒருவர் கொலையில் கைதாகி இரண்டு அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள். உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சரான பாபுலால் நாகர், ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். 'அந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் சொல்வதுமாதிரி எதுவும் செய்யவில்லை’ என்று பாபுலால் சொல்வதை ம.பி. மக்கள் நம்பவில்லை. 'என்னைத் திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார்’ என்று எம்.எல்.ஏ-வான உதய்வால் அஞ்சானா மீதும் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். இப்படி தொடர்ந்து பாலியல் புகார்கள் வர, 'ராஜஸ்தான் மானமே போய்விட்டது’ என்று முதல்வர் அசோக் கெலாட்டே புலம்பும் அளவுக்கு நிலைமை விபரீதம்!

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

இலவச மருந்து விநியோகத் திட்டம் கொண்டுவந்தவர் கெலாட். குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர் சம்பளத்தில் பாதியை, அவர்களது மனைவியிடம் கொடுக்கும் சட்டம் கொண்டுவந்து பெண்கள் ஆதரவைப் பெற்றவர். ஆனாலும் சமீபத்திய பாலியல் புகார்கள் அவரை ஆட்டம் காணவைத்துள்ளன!

த்தியப்பிரதேசத்தில் சவுகான் போல சட்டீஸ்கரில் ராமன்சிங் கொடி பறக்கிறது. பா.ஜ.க-வின் தவிர்க்க முடியாத இன்னொரு சக்தி இவர். 'மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு முதல்வர்கள் கையேந்தி நிற்பார்கள். ஆனால், ராமன்சிங் அப்படி அல்ல’ என்று நரேந்திர மோடி இவரைக் கொம்பு சீவிவைத்துள்ளார். இருந்தாலும், 'நக்சலைட் வேட்டை’ என்ற பெயரால் மலை இன மக்களை ராணுவமும் போலீஸும் வேட்டையாடிவருவது ராமன்சிங் பதவிக்கு சிக்கல்

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

கொடுத்துள்ளது. இந்தியாவின் கனிம வளத்தில் 40 சதவிகிதமும், எஃகு உற்பத்தியில் 25 சதவிகிதமும் உள்ள மாநிலம் இது. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் சட்டீஸ்கரைக் குறிவைக்கின்றன. இந்த இடங்களைத் தாரைவார்க்க மலை இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்த நிறுவனங்களை எதிர்த்துப் போராடும் மாவோயிஸ்ட், நக்சலைட் அமைப்புகளுக்கு, மக்கள் முழுமையான ஆதரவைத் தருகிறார்கள். மலை இன மக்களிலேயே ஒரு பிரிவினரைப் பிரித்து அந்த மக்களோடு போலீஸும் அரசாங்கமும் மோதவிடுவது மாநிலமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஏதோ மத்திய அரசு எடுப்பதாகவும், தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்பதுபோலவும் ராமன்சிங் காட்டிக்கொள்கிறார். 'நக்சல் பகுதிகளில் ராணுவம் குவிக்கிறார்கள். ராணுவம் குவிப்பது தேவையில்லாத ஒன்று. இது ஒன்றும் போர்க்களம் அல்ல’ என்று ராமன்சிங் சொல்கிறார். ஆனால், இந்த அச்சுறுத்தல்களைச் செய்வதே அவர்தான் என்று மக்கள் சொல்கிறார்கள். மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40-ல் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்க இருப்பது இந்த விவகாரம்தான்!

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

மிசோரம் எப்போதும் காங்கிரஸின் கோட்டை. அங்கு தொடர்ந்து அந்தக் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது. கிறிஸ்தவ மக்களே அதிகம் வாழும் இந்த மாநிலத்தில் முதல்வராக இருக்கிறார் லால்தன் ஹவ்லா. மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகள் காங்கிரஸ் வசம். அந்தளவுக்கு இவர்களுக்குச் செல்வாக்கு. இங்கு பா.ஜ.க.-வுக்குச் செல்வாக்கே இல்லை. மிசோரம் தேசிய முன்னணிக்கு பரவாயில்லாத செல்வாக்கு இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மாநாடு ஒன்று நடக்க இருக்கிறது என்று சொல்லி, தேர்தல் தேதியையே மாற்றி அமைக்கும் அளவுக்கு  அந்த மதத்துக்கு அங்கே முக்கியத்துவம் உண்டு. தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் விலைவாசி உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. ஆனாலும், மாற்று அரசியல் கட்சிகள் இல்லாததால்... காங்கிரஸ் கோட்டையாகவே தொடர்கிறது மிசோரம்!

பிரதமர் தேர்தலுக்கான டிரெய்லர்!

துதான் ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலின் கள நிலவரம். டெல்லி, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸும், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க-வும் ஆட்சியில் இருக்கின்றன. இதில் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கலாம் என்றும், சட்டீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியை இழக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மோடி அலை காரணமாக டெல்லி, ராஜஸ்தானை பா.ஜ.க. கைப்பற்றினால் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் உற்சாகம் கிடைக்கும். டெல்லியை இழந்தாலே காங்கிரஸ் சோர்ந்துபோகும்.

மோடி, ராகுல்... இருவரில் யாருக்கு உற்சாகத்தீர்த்தம் கிடைக்கும்? டிசம்பர் மாதம் வரை காத்திருக்கத்தான் வேண்டும்!