Published:Updated:

பன்னீர்செல்வத்தை மிஞ்சும் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசம்..! - தாமரையில் கரைகிறதா இரட்டை இலை?

பன்னீர்செல்வத்தை மிஞ்சும் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசம்..! - தாமரையில் கரைகிறதா இரட்டை இலை?
பன்னீர்செல்வத்தை மிஞ்சும் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசம்..! - தாமரையில் கரைகிறதா இரட்டை இலை?

குடியரசுத் தலைவருக்கான தேர்தலை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. 'தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசின் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்த இருக்கிறார் பிரதமர் மோடி. அதன் ஒருபகுதியாகத்தான் சேகர் ரெட்டியிடம் பணம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த பட்டியலை அனுப்பி வைத்தனர். மாநில அரசை தங்கள் பிடிக்குள் வைப்பதற்காக இந்த ஆயுதம் ஏவப்பட்டது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, பன்னீர்செல்வத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பியது பா.ஜ.க. அதற்கேற்ப, 'ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு, தினம்தினம் கூட்டத்தைக் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் பன்னீர்செல்வம். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் அவரால் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்த முடியவில்லை. 'தங்கள் நோக்கம் நிறைவேறவில்லை' என்பதை அறிந்ததும், எடப்பாடி பழனிசாமி அரசை வழிக்குக் கொண்டு வரும் வேலைகள் தொடங்கின. இதை ஏற்றுக்கொண்ட பழனிசாமி, தன்னுடைய டெல்லி தொடர்புகள் மூலம் ஆட்சி அதிகாரத்துக்கு எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். இதற்குப் பாலமாக இருந்தவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. மத்திய அரசுக்கு இணக்கமான அரசாகவே தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதெல்லாம் ஒத்திகை நடவடிக்கைதான். 'அ.தி.மு.கவை முழுமையாக பா.ஜ.கவுக்குள் கொண்டு வர வேண்டும்' என்பதுதான் அமித் ஷாவின் திட்டம். "ஜூலை மாதம் தேர்தல் முடிந்த பிறகு தமிழக அரசை முழுமையாக தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் பா.ஜ.க வேகம் காட்டும்" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், 

"பன்னீர்செல்வத்தைவிடவும் எடப்பாடி பழனிசாமி அரசு கூடுதல் விசுவாசத்துடன் மத்திய அரசுடன் இணக்கமாக நடந்துகொள்கிறது. நேற்று மின்துறை அமைச்சர் தங்கமணி, பிரதமரை சந்தித்துப் பேசினார். 'பலவகையிலும் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்' என்பதைக் காட்டுவதற்கான சந்திப்பு அது. ஜெயலலிதா அதிகாரத்தில் இருந்தபோது, எம்.எல்.ஏக்கள் அனைவரும் அந்த அதிகாரத்தின் பக்கம் நின்றனர். தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிகாரம் இருக்கிறது. எம்.எல்.ஏக்களும் அவர் பின்னால் நிற்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவோடு கூட்டணி அமைத்தால், 20 எம்.பி சீட்டுக்கள் வரையில் கேட்கும் முடிவில் பா.ஜ.க உள்ளது. அதற்கு பழனிசாமி சம்மதித்தாலும், சிதறிக் கிடக்கும் அ.தி.மு.கவின் மூன்று அணிகளால், வாக்கு சதவீதம் சிதறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். கொங்கு மண்டலத்தில் வேண்டுமானால், ஓரளவுக்கு வெற்றி கிடைக்கலாம். முழுமையான வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை. அதுவே, அ.தி.மு.கவைக் கரைத்து, முழுதாக தாமரைக்குள் ஐக்கியம் ஆக்கும்போது, நல்ல பலத்தைக் காட்ட முடியும் என பா.ஜ.க தலைமை கணக்குப் போடுகிறது. இந்த முயற்சிக்கு கார்டனில் உள்ளவர்கள் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை அடக்குவதற்காகத்தான் சேகர் ரெட்டி ஆயுதம் வீசப்பட்டிருக்கிறது" என்றவர், 

"போயஸ் கார்டன் ராஜ்ஜியத்துக்குள் 2011-ம் ஆண்டு கால்பதித்தார் சேகர் ரெட்டி. அன்றிலிருந்து பொதுப் பணித்துறையின் அனைத்து பணிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார். இதற்காக ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு பலவிதமான சலுகைகளைச் செய்துகொடுத்து வந்தார். இதன் அடிப்படையில், மூத்த அமைச்சர்களும் பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் சிலரும் ரெட்டியுடன் நட்புறவில் இருந்தனர். சசிகலா தரப்பினருக்கு பெரும் தலைவலியாக சேகர் ரெட்டி விவகாரம் அமைந்திருக்கிறது. அ.தி.மு.கவுக்குக் குழிதோண்டக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக சேகர் ரெட்டியின் ஆவணங்களைப் பார்க்கின்றனர்.

மாநில அரசின் கவனத்துக்கு லஞ்சப் பட்டியலை அனுப்பி வைப்பதன் மூலம், 'உங்கள் பிடி எங்கள் கையில்தான்' என நேரிடையாக எச்சரிக்கை விடுக்கிறது மத்திய அரசு. கொங்கு மண்டல லாபியைக் கையில் வைத்துக்கொண்டே, தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் வேலைகளில் பா.ஜ.க ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறது" என்றார் நிதானமாக. 

"அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்மீது ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து மாநில விஜிலென்ஸ் கமிஷனின் பொறுப்பை தலைமைச் செயலாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து நேற்று ஆளுநருக்குக் கடிதம் அனுப்பிய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், 'உள்துறைச் செயலாளரை, மாநில விஜிலென்ஸ் ஆணையராக கூடுதல் பொறுப்பில் நியமித்துள்ள இடைக்கால நடவடிக்கையால் மாநில விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ள சுயாதீனத்தன்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான அக இணையத்தில் (இண்ட்ராநெட்) கூட வெளியிடாமல் பாதுகாக்கப்படும் மர்மம், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள தவறான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது' எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதற்குப் பதில் அளிக்கும் தலைமைச் செயலக வட்டாரமோ, ' தலைமைச் செயலாளருக்குத்தான் வருமான வரித்துறை கடிதம் எழுதியுள்ளது. இதன்படி, தலைமைச் செயலாளர் கட்டுப்பாட்டில் உள்ள அவரது துறைக்கு, அவரே பரிந்துரை செய்துகொள்ள முடியாது என்பதால்தான், உள்துறை செயலரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்தவித மர்மமும் இல்லை' என்கின்றனர். இந்த லஞ்சப் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்" என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசை முழுமையாக பா.ஜ.க பக்கம் கொண்டு வருவதன் மூலம், வலிமை வாய்ந்த கட்சியாக உருமாறலாம் எனக் கணக்குப் போடுகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். இதற்கு சசிகலா தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால்தான், அவர்களுக்கு எதிராக பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். 'பா.ஜ.கவின் கரைப்பு முயற்சிக்கு கொங்கு மண்டல கேபினட் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கப் போவதில்லை' என உறுதிபடக் கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.