Published:Updated:

"மோடியை எதிர்க்கும் ராஜபக்‌ஷே..!’ பிரதமரின் இலங்கைப் பயண சீற்றம்

விகடன் விமர்சனக்குழு
"மோடியை எதிர்க்கும் ராஜபக்‌ஷே..!’  பிரதமரின் இலங்கைப் பயண சீற்றம்
"மோடியை எதிர்க்கும் ராஜபக்‌ஷே..!’ பிரதமரின் இலங்கைப் பயண சீற்றம்

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை செல்கிறார். அங்கு நடைபெறும் புத்தமத மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மோடியின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈழ உணர்வாளர்கள், "மோடியின் இந்தப் பயணத்தால் அங்கு வாழும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை" என்று கூறியுள்ளனர்.

கௌதம புத்தரின் பிறந்த நாளையொட்டி, ஐ.நா.சபை ஏற்பாடு செய்துள்ள சர்வதேச புத்தமத மாநாடு,கொழும்பில் மே 12-ம் தேதி முதல் 14-வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள இரண்டு நாள் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து இலங்கையின் மத்திய மாகாணத்துக்குச் சென்று கண்டி பகுதியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். திகோயா நகருக்கு அருகே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்காக கட்டுப்பட்டுள்ள மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் அந்த மக்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். 


 

பிரதமரை வரவேற்கிறோம்!

பிரதமர் மோடியின் பயணம் குறித்து, இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பேசினோம். 'இந்தியப்

பிரதமரின் வருகையை நாங்கள் மிகுந்த ஆவலுடன் வரவேற்கிறோம். அதேநேரத்தில் அவருடைய வருகை என்பது ஆக்கபூர்வமான முறையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். 'இலங்கை வந்தோம்...நிகழ்வில் பங்கேற்றோம்.. ' என்று இல்லாமல். மலையக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மோடியின் பயணம் இருக்க வேண்டும். திரிகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு விமானசேவை தொடங்க வேண்டும். இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது, பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வு மேம்படுவதற்கான நலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை இந்தியப் பிரதமரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வழங்க இருக்கிறோம்".என்றார்.

 

பிரதமரின் பயணத்தில் அரசியல் ஆதாயம்...

ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பிரதமரின் இலங்கை வருகையை ஆதரித்த போதிலும், தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்களிடையே பிரதமர் பயணம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்தப் பயணம் அரசியல் ஆதாயத்துக்கானது என்று தெரிவிக்கிறார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. "பிரதமரின் பயணத்திட்டம், பொருளாதார காரணங்களைக் கருத்தில்கொண்டே வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திரிகோண மலையில் இரண்டு பெட்ரோலிய எண்ணெய்க் கிடங்குகள் உள்ளன. இந்த எண்ணெய்க் கிடங்குகளை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோதே இந்த எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது. ஒருபக்கம் பொருளாதார நலன் சார்ந்ததாக இந்தப் பயணம் அமையும் அதேநேரத்தில், மற்றொரு பக்கம் இலங்கைத் தமிழர்களை 'இந்துத்துவா' அடையாளத்தின்கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் அறியப்படுகிறது.

தவிர, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவன மூதலீடுகள், மற்ற நிறுவனங்களின் முதலீடுகள் போன்றவற்றை இறுதி செய்வதும் பிரதமர் பயணத்தின் நோக்கம். அவரது பயணத்தால், அங்குள்ள தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை. பிரதமரின் நடவடிக்கை, ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலனுக்கு எதிரானது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே-வை இந்தியா அழைத்துவந்து அவருக்கு விருந்தளித்தார்.  அண்டை நாடுகளுடன் உறவுகள் மேம்படவே இந்த உபசரிப்பு என்று மோடி பேசினார். ஆனால், மோடியின் வருகைக்கு ராஜபக்சே தற்போது எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், கறுப்புக்கொடி காட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார். சிங்களர்களுக்கு

ஆதரவாகப் பேசியவருக்கே எதிர்ப்பு என்றால், மத்திய பி.ஜே.பி. அரசின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தோற்றுப்போன வெளியுறவுக் கொள்கைக்கு பலியானவர்கள் தமிழர்கள் என்பது உண்மை" என்றார் ஆதங்கத்துடன்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன், மோடியின் இலங்கை பயணத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கேட்டறிய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில், "தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை அரசுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி இலங்கை செல்வதையொட்டி, கொழும்பு உள்ளிட்ட பிரதமர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கறுப்புப் பூனை காமாண்டோ படையினர் இலங்கை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.