Published:Updated:

"தமிழகத்தை தண்ணி இல்லா காடாக்கப் பார்க்கிறார் மோடி!" - நல்லகண்ணு அதிரடி!

"தமிழகத்தை தண்ணி இல்லா காடாக்கப் பார்க்கிறார் மோடி!" - நல்லகண்ணு அதிரடி!
"தமிழகத்தை தண்ணி இல்லா காடாக்கப் பார்க்கிறார் மோடி!" - நல்லகண்ணு அதிரடி!

மிழகம் முழுக்க மணல் குவாரிகளை மூடிய தமிழக அரசு, அவற்றை 'அரசே ஏற்று நடத்தும்' என்று தெரிவித்து மணலைச் சுரண்டும் காரியத்துக்கு மறுபடியும் நாள் குறித்திருக்கிறது. இந்நிலையில், கரூரில் மணல் கொள்ளைக்கு எதிராக 'காவிரிப் பாதுகாப்பு இயக்கம்' நடத்திய பொதுக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கலந்துகொண்டு பேசினார். "தமிழகத்தின் ஜீவாதார நதியான காவிரியில் இருந்து, 25 வருஷத்தில் அள்ள வேண்டிய மணலை கடந்த ஒரே ஆண்டில் அள்ளிவிட்டார்கள். அதனால், இன்னும் 100 வருடங்களுக்கு மண் அள்ளக்கூடாது. தமிழகத்தின் பெரிய நதியான காவிரியில் தண்ணீர் வராமல் செய்துவிட்டால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் வசிக்கமாட்டார்கள். தமிழகத்தை தண்ணி இல்லாத காடாக மாற்றிவிட்டால், இங்குள்ள மக்கள் வேறு மாநிலங்களுக்குப் போய்விடுவார்கள். அப்புறம், தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் என்று மத்திய அரசு தங்களுக்கு வேண்டியதை எதிர்ப்பின்றி எடுத்து, இந்த மண்ணை இஷ்டத்துக்கு சுரண்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், நாம் அதை அனுமதிக்கக் கூடாது" என்றார் காட்டமாக.

மேலும், "நமக்கு ஜீவாதாரம் கொடுக்கும் நதி காவிரி. ஆனால், மணலைச் சுரண்டி காவிரியின் ஜீவாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள். ஒரு மீட்டர் ஆழத்துக்குதான் காவிரியில் மணல் அள்ளணும்கிறது விதி. ஆனால் 25 மீட்டர் ஆழம்வரை அள்ளி இருக்கிறார்கள். அதேபோல், மூன்று அடி அகலத்துக்குத்தான் அள்ளணும்கிறது விதிமுறை. ஆனால் 25 அடி அகலத்துக்கு அள்ளி காவிரியை பொட்டல்காடாக...மலடாக மாற்றிவிட்டார்கள். தமிழகத்துக்கு வருடத்துக்கு 25 டன் மணல்தான் தேவைப்படுகிறது. ஆனால் 90 ஆயிரம் டன் மணலை அள்ளி, கேரளா, கர்நாடகாவுக்கு கோடிக்கணக்கில் விற்று, நமது வளத்தை அழித்து விட்டார்கள். 'காவிரி தண்ணீர் பிரச்னை என்பது திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கு மட்டும்தான், நமக்கு ஏன் கவலைன்னு' மத்த மாவட்டத்து மக்கள் நினைக்குறாங்க. ஆனால், காவிரி அழிவது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பிரச்னை. அதனால், காவிரியைப் பாதுகாக்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரளணும். தமிழகத்தில் தற்போது அரசாங்கம் நடக்குதான்னே தெரியலை. தமிழகத்தை யார் ஆளுறாங்கன்னும் புரியலை. செயல்படாத அரசாக இந்த அரசு இருக்கு. மக்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கத் துடிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அனுமதி வாங்கவே போராட வேண்டி இருக்கு. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் மக்கள் திரண்டதுபோல, மணல் கொள்ளையைக் கண்டித்தும் இளைஞர்கள் திரண்டு போராட முன்வரணும். தமிழகம் தற்போது வரலாறுகாணாத வறட்சிக்குள் விழுந்திருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களே இயற்கை வளங்களைச் சுரண்டி காசாக்கத் துடிக்கிறார்கள். இதனால், இயற்கையை காக்கவோ, தண்ணீரை சேமிக்கவோ அவர்கள் தயாரில்லை. தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைக்க ஆயிரம் கரங்கள் ஆக்டோபஸ்களாக படர்ந்திருக்கின்றன. அத்தனை கைகளையும் அடக்கி, நாம் இயற்கையை காபந்து பண்ண ஒன்று திரளணும். இல்லையானால், இன்னும் இருபது வருடங்களில் தமிழகம் மக்கள் வசிக்கத் தகுதியற்ற நிலமாக மாறப்போவது உறுதி" என்று எச்சரிக்கை மணி அடித்து முடித்தார் நல்லகண்ணு.

"தமிழகத்திலேயே அதிகளவு மணல் சுரண்டல் நடந்தது; நடந்து வருவது கரூர் மாவட்டத்தில்தான். இம்மாவட்டத்தில் பாயும் காவிரியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரி நடத்தி, சட்டத்திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு, இஷ்டத்துக்கு மணலைச் சுரண்டிவிட்டார்கள்" என்று தெரிவித்து இரண்டு வருடங்களாகப் போராடி வருகிறது காவிரி பாதுகாப்பு இயக்கம். மேலும் "அரசின் விதிமுறைகளை மீறி, மணல் கொள்ளை மூலம் மூவாயிரம் கோடி ரூபாய்வரை பணத்தை 'ஸ்வாஹா' செய்து விட்டார்கள்" என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம், உயர்நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்ற பின்னரே நடந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் கௌதமன் பேசியபோது, "மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடினா, போலீஸ்காரங்க அடிக்கிறாங்க. பொய் வழக்கு போடுறாங்க. மக்களுக்கு ஆதரவாக போராடும் எங்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கும் போலீஸ், மாறாக சமூக விரோதிகளுக்கு பல்லக்குத் தூக்குகிறது. போலீஸாருக்காகவும்தான் நாங்கள் போராடுகிறோம் என்பதை அவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்? காவல்துறையினர், ஆள்பவர்களின் ஏவல் துறையாக இருப்பதால்தான் இவ்வளவு பிரச்னையும் ஏற்படுகிறது. மக்கள் நலனுக்கான எங்கள் போராட்டங்களை காவல்துறையினர் சிதைக்க நினைத்தால் கிளர்ந்தெழுவோம்" என்று சூளுரைத்தார்.

முன்னதாக, நடைபெற்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் பேரணியில் நல்லகண்ணு தவிர, காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், அனைத்துக் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உழவர் சந்தை அருகே தொடங்கிய பேரணி, பஜார், பேருந்து நிலையம் என எட்டு கிலோமீட்டர் சுற்றிவந்து மறுபடியும் உழவர் சந்தையிலேயே முடிந்தது.