Published:Updated:

வேலை நிறுத்தம் எதிரொலி ; நெருக்கடியை சமாளிக்க தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..!

வேலை நிறுத்தம் எதிரொலி ; நெருக்கடியை சமாளிக்க தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..!
வேலை நிறுத்தம் எதிரொலி ; நெருக்கடியை சமாளிக்க தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..!

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வேலைநிறுத்தம் தொடங்கியதையடுத்து, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

வேலை நிறுத்தம் எதிரொலி ; நெருக்கடியை சமாளிக்க தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..!

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முடக்கியுள்ளனர்.

இதனால் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து இயக்கம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதலே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டதை கடிதம் எழுதி எழுத்துபூர்வமாக அமைச்சரிடம் அளிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் சென்றனர். கடிதத்தை வாங்க மறுத்த அமைச்சர், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தச் பேச்சுவார்த்தையில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, தி.மு.க உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

வேலை நிறுத்தம் எதிரொலி ; நெருக்கடியை சமாளிக்க தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை..!

அரசு அளிக்கும் உத்தரவை அரசாணையாக வெளியிட வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு இடையில் பலத்த காவலுக்கு மத்தியில் பேருந்துகளை இயக்க காவல்துறையினர் முயற்சி செய்துவருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்தை சீர் செய்ய கூடுதலாக மின்சார ரயிலை இயக்க தமிழக அரசு முயற்சி செய்துள்ளது. அதன்படி கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல எழும்பூர்-திருநெல்வேலி, சென்ட்ரல்-கோயம்புத்தூர் மற்றும் எழும்பூர்-திருவாருர் மார்க்கங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, பேருந்து மீது கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.