Published:Updated:

சீனாவின் காலனியாகிறதா பாகிஸ்தான்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீனாவின் காலனியாகிறதா பாகிஸ்தான்?
சீனாவின் காலனியாகிறதா பாகிஸ்தான்?

சீனாவின் காலனியாகிறதா பாகிஸ்தான்?

சீனாவில் இருந்து ஐரோப்பிய, ஆப்ரிக்க நாடுகளை இணைக்கும் வகையில், பாகிஸ்தானையும் உள்ளடக்கி ஒன் ரோடு, ஒன் பெல்ட் என்ற புதிய பட்டு பாதைத் திட்டத்தைச் சீனா செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பான மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி செய்யும்படி கேட்டிருக்கின்றன. 

சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையானது, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் வழியாகப் பயணிக்கிறது. 'இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று இந்தியா அறிவித்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் தன் நாட்டையே சீனாவுக்குத் தாரைவார்க்கும் அளவுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. 

பாகிஸ்தானில் அதிக அளவில் முதலீடுகளைக் குவித்துள்ளது சீனா. ரயில் பாதை, நெடுஞ்சாலை, துறைமுகம், விமானம், மின் உற்பத்தி எனச் சீனா காலடி வைக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எங்கும் எதிலும் சீனாவின் முதலீடு பாய்ந்துள்ளது. பாகிஸ்தானின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் குறைந்த வட்டியில் அதிகக் கடனைக் கொடுத்திருக்கிறது சீனா. இதை எல்லாம் திருப்பிக் கொடுக்கும் சக்தி பாகிஸ்தானுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தக் கடன், கடனுக்கான வட்டியே பாகிஸ்தானை வீழ்த்திவிடும் என்று அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு இந்தியக் கம்பெனி என்ற போர்வையில் தொழில் செய்ய வந்த இங்கிலாந்து, ஒருகட்டத்தில் நாட்டையே பிடித்தது போன்ற சூழல் பாகிஸ்தானில் மீண்டும் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பயம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

சி.பி.இ.சி திட்டம் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேம்படும், சாலைகள் இணைக்கப்படுவதன் மூலம் தொழில் துறை மேம்படும், கண்ணாடி இழை பதிக்கப்படுவதால் நாடு முழுக்க அதிவேக இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்தப்படும், மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் நாட்டில் மின் தேவை முழுமையாகப் பூர்த்திச் செய்யப்படும் என்று பாகிஸ்தான் அரசு கூறுகிறது. ஆனால், சீனாவின் இந்தத் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், பாகிஸ்தானின் பெரும் நிலப் பகுதியை சீன நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டி இருக்கிறது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க, பெருநகரங்களின் சந்தைப் பகுதியில் 24 மணி நேர வீடியோ கண்காணிப்பிலும் சீனா ஈடுபட இருக்கிறது. விசா உள்ளிட்ட கடவுச்சீட்டு ஏதும் இன்றி, எந்த ஒரு சீனக் குடிமகனும் பாகிஸ்தானுக்கு வந்து செல்ல முடியும். இதுபோன்ற பல்வேறு சீனாவுக்குச் சாதகமான திட்டங்கள், சி.பி.இ.சி-யில் இருப்பதுதான் பாகிஸ்தான் பொருளாதார நிபுணர்கள், எதிர்க் கட்சிகளின் கவலை.

பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில், நாட்டின் திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான நிலைக்குழுத் தலைவர் பேசும்போது, "சீனாவுடன் நட்புறவுகொள்வதில் பாகிஸ்தானியர்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம். ஆனால், நாட்டின் நலன் என்று வந்தால், நட்பைவிட நாடுதான் முக்கியம். சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம் மூலமாகப் பாகிஸ்தான் நலம் பாதுகாக்கப்படவில்லை. இதன்மூலம் மீண்டும் கிழக்கு இந்தியக் கம்பெனி போன்ற நிலை உருவாகலாம்" என்றார். 

''நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்காமல், அந்நிய நிறுவனங்களுக்கு அனைத்துத் துறைகளையும் திறந்துவிடுவது, சீனத் தொழில் அதிபர்களைத்தான் வளர்த்தெடுக்கும். இதன்மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையே பாதிக்கும்'' என்கின்றனர் பாகிஸ்தான் தொழில் துறையினர். ஆனால், 'அனைத்தையும் புறக்கணித்துவிட்டுச் சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அந்த நாட்டு மீடியாக்களும், அதன் பொருளாதாரப் பாதைக்கான கதவைத் திறந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அந்தக் கதவு வழியாக என்ன வரப்போகிறது என்பதுதான் கணிக்க முடியாததாக இருக்கிறது' என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக நினைத்துப் பாகிஸ்தான் தனக்குத்தானே குழிதோண்டிக்கொள்கிறதோ என்றே சில பாகிஸ்தான் பொருளாதார நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.

போகிற போக்கைப் பார்த்தால் 2030க்குள் சீனாவின் பொருளாதார காலனி நாடாக பாகிஸ்தான் மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளதாக உலக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு