Published:Updated:

‘இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே காரணம்..!’ திருமுருகன் காந்தி

விகடன் விமர்சனக்குழு
‘இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே காரணம்..!’ திருமுருகன் காந்தி
‘இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே காரணம்..!’ திருமுருகன் காந்தி

"தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்" இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய கொடூரத்தை எடுத்துரைக்கும் வைரமுத்துவின் கண்ணீர் வரிகள் இவை. 

தமிழீழம் கோரி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே 1983-ல் தொடங்கிய போர்  2009-ல் முடிந்தது. போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2009-ம் ஆண்டு மே 12-ம் தேதியில் இருந்தே விடுதலைப்புலிகளின் முக்கிய  தலைவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தது இலங்கை ராணுவம்.மே 17-ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இது தமிழ் ஈழ உணர்வாளர்களுக்குப் பேரிடியாக இருந்தது.பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.   தமிழர்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டிய இலங்கை ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களைக்  கொன்று குவித்தது. இலங்கை இறுதிப் போரில் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என பலரும் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் தினத்தை கடைபிடித்து வருகிறார்கள்.தமிழகத்தில் உள்ள தமிழ் ஈழ உணர்வுள்ள அமைப்புகளும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்துள்ளன.

இனப்படுகொலைக்கு காரணம் இந்தியாவின் சூழ்ச்சி!

நினைவேந்தல் நிகழ்ச்சி தொடர்பாகவும் தொடர்ந்து  தமிழ் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பேசினோம். 

"இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்றக் கொண்டிருந்த நேரத்தில், இனப்படுகொலைகள் நடப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக அங்கிருந்து தகவல்கள் வந்து கொண்டிருந்தன.பொதுவாக எந்த ஒரு போரிலும் மனித உரிமைக்குழுவினர் போர் நடக்கும் இடத்துக்குச் சென்று  ஆய்வு செய்வார்கள். போரில் மனித உரிமை மீறல்கள்  நடந்தால் அதனை ஆவணப்படுத்தி சர்வேதேச சமூகத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.இது தான் போரின் விதிமுறையும் கூட. ஆனால்,இந்திய அரசின் சூழ்ச்சி காரணமாக மனித உரிமைக்குழுவினர் இலங்கைக்குச் செல்லாமல் தடுத்து  நிறுத்தப்பட்டனர். உண்மைகள் வெளி உலகத்துக்குத் தெரிந்து விடக்கூடாது என்று ராஜபக்‌ஷே அரசு மனித உரிமைக்குழுவுக்கு அனுமதி அளிக்கவில்லை. போரின் போது மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமைக் குழுக்கள் அனுப்பப்படுகின்றன.ஆனால், இறுதிப் போரில் மனித உரிமைக்குழு செல்ல முடியாதது என்பது வேதனைக்குரிய விஷயம்.

இறுதிகட்டப் போரில் இனப்படுகொலை நடப்பதாக தகவல் வந்து கொண்டிருந்தன. அப்போது இந்தப் போரை கண்காணிக்க இந்தியாவுக்கான ஐ.நா துணைப்பொதுச்செயலாளர் விஜய் நம்பியார் அந்த  இடத்துக்குச் செல்ல வேண்டும். அதுவே அவருடைய கடமையும் கூட.

ஆனால் அவர் அங்கு போகவில்லை. கால நிலை சரியில்லை என்று பாதியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார். விஜய் நம்பியாரின் அண்ணன் சதிஷ் நம்பியார்தான் இலங்கைப் போரை நடத்துவதற்கான ஆலோசகர். போரை நடத்தும் ஆலோசகராக அண்ணன் இருக்கும் போது தம்பி எவ்வாறு அந்த இடத்துக்குச் செல்வார்? எனவே இருவரும் திட்டமிட்டு அதைத் தவிர்த்து விட்டனர். அதுமட்டுமன்றி விஜய் நம்பியாருடன் வந்த மற்ற  ஐ.நா அதிகாரிகளையும்  தடுத்து நிறுத்தி மிரட்டியுள்ளனர். அவ்வாறு திரும்பி வந்த  ஐ.நா அதிகாரி ஒருவரை நான்  சந்தித்துப் பேசினேன். விஜய் நம்பியாரும்,சதிஷ் நம்பியாரும் சேர்ந்து கொண்டு ஐ.நா-வின் அனைத்துச் சட்ட விதிகளையும் மீறினார்கள் என்பது  அம்பலமாகியுள்ளது. இலங்கையின் மீறல்கள் ஒருபுறம் இருக்க ஐ.நா-வின் நடவடிக்கைகள் அதைவிட மோசமானதாக இருந்தது. போரில் தவறு இழைத்தவர்கள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்று ஐ.நா சொன்னது. ஆனால் இலங்கை அரசு இன்று  வரை சிறு  துளி அளவு கூட விசாரணையைத் தொடங்கவில்லை என்பதுதான் உண்மை.

குற்றவாளியை குற்றவாளியே விசாரித்த கொலை களம்

இலங்கை அரசு இப்படி  தப்பித்துக் கொண்டிருப்பதற்கு ஐ.நா-வின் மோசமான செயல்பாடுதான் காரணம்.குற்றவாளியே குற்றவாளியை

விசாரித்த கொலைகளம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.இது குறித்து வீக்கிலிக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள  தகவலில், இறுதி கட்டப் போரில் நடப்பது என்ன என்பது குறித்து இந்திய அதிகாரிகளுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. இனப்படுகொலை நடவடிக்கையில் இவ்வாறு என்றால்,போரின் போது கைது செய்யப்பட்டவர்களை இலங்கை அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை. போரின் போது கைது செய்யப்படுபவர்களைப் போர் முடிந்து விட்டால் விடுவிப்பதுதான் விதி.அது மட்டுமன்றி கைது நடவடிக்கை என்பதே ஐ.நா-வின்  மேற்பார்வையில்தான் நடக்க வேண்டும்.இதுபோன்ற எந்த விதிமுறைகளும் இல்லாமல் அநீதி இழைத்துள்ளது இலங்கை.இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த எந்தத் தகவல்களையும் இலங்கை அரசு கூற  மறுக்கிறது. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்காலம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.போரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை வழங்கி பல்வேறு இடங்களில் நாங்கள் பேசி உள்ளோம்.அநீதி இழைக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை

சர்வதேச நீதிபதிகளும் இலங்கையின் மீது விசாரணை தேவை என்று கூறிய பின்பும் ,அதில் இனப்படுகொலை குற்றவாளியாக ஒருவரைக் கூட இலங்கை அரசு கைது செய்யவில்லை. ஈழ தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.அதற்கு  இந்திய அரசும்  ஒருவகையில் காரணமாக உள்ளது.8 வருடமாக அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை இந்திய அரசு தடுத்து  வரும்,பெரும் பணியை இந்திய அரசு செய்து வருகிறது.அதற்கான  காரணம் என்னவென்றால் சர்வதேச விசாரணை நடந்தால் இந்திய அரசும்  குற்றவாளி  கூண்டில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலேயே இந்த விசாரணையை இந்திய அரசு தடுத்து வருகிறது.அண்மையில் ஜெனிவா-வில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34-வது கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா களமிறங்கிய நிலை மிகவும் கவலைக்குரியது. இலங்கையில் நடந்த போரில் தவறிழைத்தவர்களை நாங்களே விசாரணை செய்து இரண்டு ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியது இலங்கை அரசு. ஆனால் இதுவரை எந்த விசாரணையும் இல்லை.

இந்த நிலையில்தான்  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவைக் கூட்டத்தில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை அரசுக்குக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த காலநீட்டிப்பை இந்தியா,இங்கிலாந்து,அமெரிக்கா ஆகிய நாடுகள்தான்  வாங்கி கொடுத்துள்ளன.அதற்கான காரணம் என்னவென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக மைத்ரி பால சிரிசேனா தலைமையிலான அரசு இருக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக மூன்று நாடுகளும் இவ்வாறு செய்துள்ளன.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.கொலைகாரர்களைப் பாதுகாக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.எனவே தமிழ் ஈழஉணர்வாளர்கள் ஒன்றுபட்டு இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும்.அதன் ஒரு பகுதியாக இறுதிகட்டப் போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் விதமாக நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 21 -ம் தேதி மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில்  இந்த நிகழ்வு நடைபெறுகிறது.நீதிகேட்டு போராடிய கண்ணகியைப் போன்று இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக நீதி கேட்கும் நிகழ்வுதான் நினைவேந்தல் நிகழ்ச்சி" என்றார்.