Published:Updated:

மத்திய அரசு பயன்படுத்தும் ஆறு அஸ்திரங்கள்! #VikatanInfographic

மத்திய அரசு பயன்படுத்தும் ஆறு அஸ்திரங்கள்! #VikatanInfographic
மத்திய அரசு பயன்படுத்தும் ஆறு அஸ்திரங்கள்! #VikatanInfographic

த்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு மாற்று கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தனது ஆதிக்கத்தைத் திரைமறைவில் அரங்கேற்றிவருகிறது. எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று வெளியே பேசிக்கொண்டு, பின்னணியில் ஆறு அஸ்திரங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு முன்பெல்லாம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, மத்திய உளவுத்துறை ஆகியவற்றை அஸ்திரங்களாகப் பயன்படுத்தியது மத்திய அரசு. இந்த வரிசையில், ஆறாவது அஸ்திரமாக மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கின் நேரடி நிர்வாகத்தில் வரும் டெல்லி மாநில போலீஸையும் களத்தில் புதியதாக இப்போது இறக்கிவிட்டிருக்கிறார்கள். சசிகலாவின் அக்காள் மகன் தினகரன், தேர்தல் கமிஷனில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக புரோக்கர் சுகேஷ் சந்திரன் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது. அடுத்து, தேர்தல் கமிஷன். இது சுதந்திரமாக செயல்படும் துறைதான்! இருந்தாலும், ஆர். கே. நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் தரப்பட்ட விவகாரத்தில் வருமானவரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரிடமிருந்து பறிமுதல் செய்த ஆவணங்களைத் தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தினார்கள். அதையடுத்து, தேர்தல் ரத்தானது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை ஆகியவற்றின் கதாநாயகன் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. இவர்களுடன் இணைப்பில் இருந்தபடி, தமிழகத்தில் அரங்கேறும் ரெய்டு சமாச்சாரங்களுக்கும் பி.ஜே.பி-க்கும் சம்மந்தமேயில்லை என்று சொல்லிவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு. இவர்களுக்கெல்லாம் தலைவர் பி.ஜே.பி-யின் தலைவர் அமித் ஷா. 

இவர்கள்தான் தமிழக ரெய்டுகளின் பிதாமகன்கள் என்று தமிழகத்தில் எதிர்கட்சிகள் வெளிப்படையாகக் குற்றம்சாட்டுகின்றன. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் அரசியல் சதிராட்டம் தமிழகத்தில் துவங்கியது. மணல் குவாரி தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தது. 300 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கை மாறியதாகச் சொல்லி, அதற்குக் காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள் பெயர் விவரங்களுடன் சிக்கிய ஒரு டைரியின் பக்கங்களை வருமானவரித்துறையினர் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு இப்போது, அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.  

ஆறு அஸ்திரங்கள் எவை? 

வருமானவரித்துறை,  அமலாக்கத்துறை(இ.டி), சி.பி.ஐ., வருவாய் புலனாய்வுத்துறை(டி.ஆர்.ஐ)., மத்திய உளவுத்துறை(ஐ.பி.), டெல்லி போலீஸ்..ஆகியவைதான் அவை! .

முதலில், தேர்தல் கமிஷன் மத்திய அரசின் பிடியில் சிக்காத சுதந்திரமான அமைப்பு என்கிற பேனர் இருந்தாலும், சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் தரப்பில் தேர்தலை ரத்து செய்தது வருமானவரித்துறையின் ரெய்டில் சிக்கிய ஆவணங்களை மேற்கோள்காட்டித்தான்! டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனராக இருப்பவர் நஜீம் ஜைதி. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி இருக்கிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் தரப்பில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் வினியோகிக்கப்பட்டதாக எதிர்கட்சியினர் புகார் கிளப்பினார்கள். பறக்கும் படை, மோட்டார் சைக்கிளில் பணம் தரும் ஆட்களை வளைக்க அதிகாரிகள் என்று ஏராளமானவர்களைக் களத்தில் இறக்கி விட்டனர். எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், ஆறு மத்திய பார்வையாளர்கள், 61 கண்காணிப்புக் குழுக்களை நியமித்திருந்தது தேர்தல் கமிஷன். இவ்வளவு உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் பணப் பட்டுவாடவைத் தடுக்கமுடியவில்லை. அப்போதுதான் வருமானவரித்துறையினருக்கு தகவல் சொல்லி அவர்களை வரவழைத்தது தேர்தல் கமிஷன். அவர்களின் கிடுக்கிப்பிடியில் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. ரெய்டில் கிடைத்த ஆவணங்களைச் சுட்டிக்காட்டி, தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். 

1. ஐ.டி(விசாரணை)

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லியின் கீழ் டெல்லியில் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மற்றும் அதே வாரியத்தின் ஐ.டி.(விசாரணை) பிரிவின் உறுப்பினர். இந்த இருவரும்தான் முக்கியமானவர்கள். இப்போது இதன் தலைவராக இருக்கும் சுசீல் சந்திரா, நிர்வாக வசதிக்காக ஐ.டி.(விசாரணை) உறுப்பினர் பதவியையும் கவனிக்கிறார். இதற்கு அடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் இதன் டைரக்டர் ஜெனரல் முரளிகுமார் செயல்படுகிறார். ரகசியமாக வரும் தகவல்களை வைத்து  அலுவலகங்கள், வீடு என்று எந்த இடமானாலும் பூதக்கண்ணாடியுடன் ரெய்டு நடத்துவதுக்கென்றே பயற்சி பெற்றவர்கள் இந்தத்துறையின் அதிகாரிகள்.  சட்டவிரோதமான முறையில் பணம் சேர்க்கிறார், வரி ஏய்ப்பு செய்கிறார் என்றால் இவர்களுக்குத் தகவல் வரும். வந்ததும், இன்ஸ்பெக்டர் ரேங்கில் சிலரை  கண்காணிப்பு ('சர்வேலன்ஸ்') என்கிற முறையில் அந்தப் பிரமுகரை  ரகசியமாக ஃபாலோ பண்ணுவார்கள். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்களைத் தேர்தெடுத்து அவர்களைப் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் முன்கூட்டியே சேகரித்து விடுவார்கள். பிறகு, சட்டப்படி ரெய்டு நடத்துவார்கள். விஜயபாஸ்கர் வீட்டில் ஏராளமான பணத்தை எதிர்பார்த்து ரெய்டு போனார்கள். ஆனால், பெரிய அளவில் ஏதும் சிக்கவில்லை. விஜயபாஸ்கர் தொடர்புடைய மற்றவர்களிடம் இருந்து சில கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரெய்டு முடிந்தவுடன், கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கேள்வித்தாளை ரெடி பண்ணி, விஜயபாஸ்கருக்கு சம்மன் கொடுத்து, வரச் சொல்லி, அந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுதிச் தரச் சொல்லி வாங்கினார்கள். இதை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள்.

2. அமலாக்கத்துறை(இ.டி)

இதன் இயக்குநர் கர்னல் சிங், டெல்லியில் இருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் மண்டல இணை இயக்குநராக பிரசாத் இருக்கிறார். சென்னை ஏரியாவுக்கான அலுவலகம் கிரீம்ஸ் ரோட்டில் இயங்குகிறது. தமிழகத்தில் பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீது இந்தத் துறையினர்தான் நடவடிக்கை எடுத்து விசாரித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. பொதுவாக, வருமானவரித்துறையினரில் பிடியில் சிக்கும் நபரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கான ஆவணங்களை கைப்பற்றினால் அவைகள் அமலாக்கத்துறையின் கவனத்துக்குப் போகும். அப்போதுதான், இந்தத்துறை அதிகாரிகள் களத்தில் குதிப்பார்கள். அந்தச் சொத்துக்கள் வந்ததற்கான ரிஷிமூலத்தை துருவி விசாரிப்பார்கள். சட்டவிரோதமான பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 7 வருடங்கள் வரை தண்டனை வாங்கித்தருவார்கள். கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்கும் புள்ளிகள்தான் இவர்களின் டார்க்கெட். விஜயபாஸ்கர் தொடர்புடைவர்களிடம் சிக்கிய பணத்துக்கான பின்னணியை விசாரிக்கக் காத்திருக்கிறார்கள். இதுவரை இவர்களிடம் வருவாய்துறை ஏதும் சொல்லவில்லை. 

3. வருவாய் புலனாய்வுத்துறை(டி.ஆர்.ஐ)

டெல்லியில் இதன் டைரக்டர் ஜெனலராக இருப்பவர் ஜெயந்த் மிஸ்ரா. சென்னை தி.நகரில் ஆபீஸில் மண்டல கூடுதல் இயக்குநர் ஜெ.எம். கென்னடி இருக்கிறார். வங்கிகளில் அன்றாடம் நடக்கும் பண பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பார்கள். விமான நிலையம், துறைமுகம்..இங்கெல்லாம் போதை பொருள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள, தங்கம், பணம் ஆகியவற்றைக் கடத்தும் கோஷ்டியினரின் நெட்வொர்க்கை கண்காணித்து அதையெல்லாம் தடுக்கும் வகையில் ரெய்டு நடத்துவார்கள். சட்டவிரோத புள்ளிகளை இண்டர்நெட், போன் மூலம் ரகசியமாக நோட்டம் விட்டபடி இருப்பார்கள். விஜயபாஸ்கர் தரப்பினருடன் ஹாவாலா புள்ளிகள் யாராவது உள் நாட்டிலோ, வெளிநாட்டிலோ தொடர்பில் இருந்தார்களா? என்று ஏற்கெனவே பிடிபட்டவர்களிடம் ரகசிய விசாரணையைத் தொடங்கி விட்டனர். அவர்களிடம் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், கடைசியாக விஜயபாஸ்கரிடம் விசாரிக்கலாம்.

4. சி.பி.ஐ.

டெல்லியில் இதன் இயக்குநராக இருப்பவர் அலோக் குமார் வர்மா. சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டல இணை இயக்குநர் ஆபீஸில் நாகேஷ்வரராவ் செயல்படுகிறார். மத்திய அரசுத்துறைகளில் நடக்கும் லஞ்சம், ஊழல் விவகாரங்கள்மீது விசாரித்து இவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள். பொருளாதாரக் குற்றப்பிரிவு, சைபர் க்ரைம், மோடி, ஏமாற்றுதல் என்று அனைத்து விவகாரங்களையும் விசாரிக்கும் திறமையான அதிகாரிகள் இந்தத்துறையில் இருக்கிறார்கள். விஜயபாஸ்கர் விவகாரத்தில் யாராவது வருமானவரித்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும்போது, இவர்கள் மூக்கை நுழைப்பார்கள். 

5. மத்திய உளவுத்துறை(ஐ.பி)

சென்னை மையிலாப்பூரில் தமிழகத்துக்கான இணை இயக்குநர் ஆபீஸ் உள்ளது. தீவிரவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறவர்கள். இன்னொரு பக்கம்  தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள்  இப்படி பலதரப்பட்டவர்களின் டெலிபோன்களை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். மாற்று அரசுகள் ஆளும் மாநிலங்களில் ஏதாவது அரசியல் குழப்பம் செய்து மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு அடங்கிப்போகுமாறு செய்கிறவர்கள் இவர்கள். தமிழக ஆளும் கட்சிப் பிரமுகர்களின் குடும்பத்தினரை 'ஃபேமிலி ட்ரீ' போட்டு அவர்களின் திரைமறைவு விவகாரங்களை ஃபாலோ பண்ணுவார்கள். தேவைப்படும் நேரத்தில், மத்திய அரசின் மற்ற துறையினருக்கு தகவல் பரிமாற்றம் செய்வார்கள். இவர்கள்தான், விஜயபாஸ்கரை கடந்த 140 நாட்களாக பின்தொடர்ந்து அவரின் பி.ஏ-கள் யார்? உறவினர்கள் யார்? நண்பர்கள் யார்? அவரது துறையில் உள்ள உயர்அதிகாரிகள் யார்? என்பதில் ஆரம்பித்து அவர்களின் ஜாதங்களை விசாரித்து முகவரிகளைச் சேகரித்தனர். ரெய்டு நடக்கும் போது ஏற்படும் ரியாக்ஷன்கள், ரெய்டுக்குப் பிறகு நடக்கும் அரசியல் மாற்றங்கள் என்ன? என்பதை பல கோணங்களில் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நேரிடையாக, பிரதமர் அலுவலகத்துடன் பேச அனுமதி பெற்றவர்கள். தவிர, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுப்பிரிவு, சி.பி.ஐ, தேர்தல் கமிஷன் இவற்றில் நடக்கும் அன்றாட வேலை, உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள். அனைத்தையும் கண்காணித்து அவ்வப்போது மத்திய அரசுக்குத் தகவல் சொல்லுவார்கள். 

6. டெல்லி போலீஸ்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் நிர்வாகத்தில் வருகிறது டெல்லி போலீஸ். தேர்தல் கமிஷனில் இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் சுகேஷ் சந்திரன் மூலம் சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் ஹவாலா பண பரிவர்த்தனை தொடர்பானவற்றை விசாரிக்க அமலாக்கத்துறையும் இறங்கியுள்ளது. தற்போது திகார் சிறைச்சாலையில் இருக்கும் தினகரன், இந்த விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்கை மத்திய அரசு நினைத்திருந்தால், இதற்கென உள்ள விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால், தமிழக அரசியல் கட்சியினர் பி.ஜே.பி. மீது சர்ச்சையை கிளப்பி வருவதால், மற்ற விசாரணைப் பிரிவுகள் வேண்டாம்.டெல்லி போலீஸை விசாரிக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழகத்துக்குள் டெல்லி போலீஸார் நுழைந்து தினகரன் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் ரெய்டு நடத்தி சென்றது இதுதான் முதல் தடவை. 

-விகடன் டீம் 

இன்ஃபோகிராஃபி - கே.எம்.பிரசன்னா