Published:Updated:

2-ம் திருமணம் செய்த பெண் எம்.எல்.ஏ. மீது சரமாரி தாக்குதல்!

Vikatan Correspondent
2-ம் திருமணம் செய்த பெண் எம்.எல்.ஏ. மீது சரமாரி தாக்குதல்!
2-ம் திருமணம் செய்த பெண் எம்.எல்.ஏ. மீது சரமாரி தாக்குதல்!

கவுகாத்தி: முதல் கணவரை விவாகரத்து செய்யாமல்,மதம் மாறி 2-ம் திருமணம் செய்து கொண்ட பெண் எம்.எல்.ஏ.வையும்,அவரது புதிய கணவரையும் 200 பேர் கொண்ட கும்பல் ஓட்டலில் புகுந்து அடித்து உதைத்த சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில்,பாரக் பள்ளத்தாக்கில் உள்ள போர்கோலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ரூமி நாத் (33).காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவருக்கு,ராகேஷ் சிங் என்ற கணவரும்,2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

கணவருடன் ஒன்றாக வசித்து வந்த ரூமி நாத்,'பேஸ் புக்' இணைய தளம் மூலம்  ஜகி ஜாகீர் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.இது அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.இந்த காதல் திருமணம் செய்யும்வரை நீண்டது.

ஜாகீர் வேறு மதத்தை சேர்ந்தவர்.ரூமிநாத்தை விட ஜாகீர் 5 வயது இளையவரும்கூட.ஜாகீரால் ஈர்க்கப்பட்ட ரூமி நாத்,வீட்டை விட்டு வெளியேறி, முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.பின்னர்,கடந்த மாதம் அவர் ஜாகீரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால், முதல் கணவரை விவாகரத்து செய்யவில்லை. தற்போது ரூமி நாத் கர்ப்பமாக உள்ளார்.இவர்களது திருமணம் அசாம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கிடையே,தனது மனைவியை காணவில்லை என்று ரூமி நாத்தின் முதல் கணவர் ராகேஷ் சிங் போலீசில் புகார் செய்தார்.

2-ம் திருமணம் செய்த பெண் எம்.எல்.ஏ. மீது சரமாரி தாக்குதல்!

இந்நிலையில்,நேற்று முன்தினம் ரூமி நாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்.அவர் அங்கு தங்கி இருப்பதை அறிந்த 200-க்கும் மேற்பட்டோர் இரவில் அங்கு திரண்டு வந்தனர்.

அவர்களின் அறைக்குள் புகுந்த கும்பல்,ரூமி நாத்தையும்,ஜாகீரையும் சரமாரியாக அடித்து,உதைத்தது.ரூமி நாத்தை சிலர் முகத்திலேயே எட்டி உதைத்து,கீழே தள்ளினர்.சிலர் இருவரையும் கீழே தள்ளி,கண் மூடித்தனமாக அடித்து, உதைத்தனர்.பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.

ரூமி நாத் 2-வது திருமணம் செய்து கொண்டதையும்,குறிப்பாக அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியதையும் பொறுக்க முடியாத கும்பல்தான் அவர்களை தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.கர்ப்பிணியான ரூமி நாத்துக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு வலியால் துடித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று ரூமி நாத்தையும், அவரது 2-வது கணவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சைக்கு பின்னர் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைநகர் கவுகாத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,அவர்களுக்கு 4 சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்தது.அவர்கள் நன்றாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் குழு தெரிவித்தது.

பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ. விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களது அறைக்கும், வீட்டுக்கும் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

தான் தாக்கப்பட்டது குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்த ரூமிநாத் எம்.எல்.ஏ.,"
திருமணம் என்பது எனது சொந்த விஷயம்.இதில் மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை.என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தாக்குதல் நடத்தி உள்ளனர். என்னை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.

சிலர் என்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு,சில்மிஷம் செய்தனர்.உடல் ரீதியாக பலவந்தம் செய்தனர்.அடக்கமுள்ள,மரியாதை உள்ள,பண்புள்ள ஒரு பெண் மீது நடந்த இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ரூமி நாத் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டது அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அந்த மாநிலத்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ. தாக்கப்படுவது இதுதான் முதல் முறை.

ரூமி நாத் தற்போது எம்.எல்.ஏ. ஆகி இருப்பது 2-வது தடவையாகும். இதற்கு முன்னர் இவர் பா.ஜனதா சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு,குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.