Published:Updated:

“அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்காதது வருத்தமா இருக்கு!”

உருகும் அழகிரி மகன்ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

 ''மதுரையில படிச்சுட்டு இருக்கும்போது, ரெண்டு நாள் லீவு கிடைச்சாலும், மறுநாளே சென்னையில் வந்து நிப்பேன். ஊர்ல காலை வெச்சதும் நேரா அருளைப் பார்க்கத்தான் போவேன்!'' - இது, துரை தயாநிதி.

''என்னைவிட துரை, பத்து மாசம் பெரியவன். ஆனா, அவன்தான் என் நண்பேன்டா!'' - இது, அருள்நிதி.

இந்த பிரதர்களின் அன்பு, இப்போது அடுத்தகட்ட 'தகராறு’க்கு உயர்ந்திருக்கிறது. துரை தயாநிதி தயாரிக்கும் 'தகராறு’ படத்தில் அருள்நிதி ஹீரோ. இருவரையும் சந்தித்தேன்...

''தாத்தா, அடிக்கடி என்னிடம் சினிமா அப்டேட்ஸ் கேப்பார். சமீபத்தில் கோபாலபுரம் போயிருந்தப்ப, 'அருளை வெச்சு ஒரு படம் பண்றேன். பேர் 'தகராறு’னு சொன்னேன். 'நீங்க தகராறு பண்ணாமப் படம் எடுத்தா சரி’னு சொல்லி வாழ்த்தினார்.

சிம்புவின் நண்பர் கணேஷ்தான் படத்தின் இயக்குநர். மதுரை பின்னணியில் நாலு திருடர்கள் பத்தின கதை. புரோக்கன் இங்கிலீஷ், ஆக்ஷன், டான்ஸ், காமெடினு இதுல அருள், பக்கா ஹீரோவா இருப்பான். ஆனா, இந்தப் படம் எடுப்பதால் நம்ம குடும்பத்துக்குள்ள இன்னொரு பிரச்னை வந்துடக் கூடாதேனு மட்டும் யோசிச்சேன்!'' என்ற துரையைத் தொடர்கிறார் அருள்.

“அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்காதது வருத்தமா இருக்கு!”

''யாராவது துரைகிட்ட, 'ஏன் அருளை வெச்சு படம் பண்ற? வேறொரு ஹீரோவை வெச்சுப் பண்ணலாமே’னு சொல்வாங்க. என்கிட்ட, 'இந்தப் படத்தை இன்னும் பெருசாப் பண்ணியிருக்கலாம். நீங்க ஏன் அவர் பேனர்ல படம் பண்றீங்க’னு சொல்லலாம். ஆனா, நாங்க தெளிவா இருக்கோம். அதனால, 'தகராறு’க்காக எங்களுக்குள்ள தகராறு வராது!'' என்று சிரிக்கும் அருளின் தோளை அணைத்து இறுக்கிக்கொள்கிறார் துரை.

''நான் பட புரமோஷன்கள்ல பேசிட்டேதான் இருப்பேன். சார்தான் அவ்வளவு ஈஸியா சிக்க மாட்டார். இந்தப் பேட்டி முழுக்க நீங்க அவரையே கேள்வி கேட்டுக்கங்க!'' என்று பாலீஷாக நழுவினார் அருள்நிதி. நிமிர்ந்து அமர்ந்தார் துரை.

''சினிமா தாண்டி உங்களையும் அருள்நிதியையும் இணைக்கும் விஷயம் எது?''

''எங்களை மட்டுமில்லை... மொத்தக் குடும்பத்தையும் இணைப்பது கிரிக்கெட்தான். 1997-ல் எங்க தாத்தா சி.எம். சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச். இந்தியா தோத்துடுச்சு. மேன் ஆஃப் தி மேட்ச் விருது கொடுத்துட்டு, தாத்தா ராத்திரி 12 மணிக்கு மேலே வீட்டுக்கு வந்து, 'இந்தியா ஏன் தோத்துச்சு’னு ஒரு மணி நேரம் எங்களோட பேசிட்டு இருந்தார்.

இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் செமி ஃபைனலில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி. கடைசி சமயத்தில் போட்டியை நேரில் பார்க்கலாம்னு முடிவு பண்ணி, அப்பாகிட்டே சொன்னேன். நாலு டிக்கெட் வாங்கித் தந்தார். போட்டியில் இந்தியா ஜெயிச்சதும், மும்பை ஃபைனலுக்கு டிக்கெட் கேட்கலாம்னு அப்பாவுக்குத் தயங்கிட்டே போன் பண்ணேன். 'என்னப்பா, ஃபைனலுக்கும் டிக்கெட் வேணுமா? நீ கேட்பேனு தெரியும். அதான் முன்னாடியே சொல்லிட்டேன்’னு சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சித்தப்பா ஸ்டாலின்... அவரே ஒரு கிரிக்கெட் பிளேயர். எங்ககூட சளைக்காம கிரிக்கெட் விளையாடுவார்!''

“அப்பாவும் சித்தப்பாவும் பேசிக்காதது வருத்தமா இருக்கு!”

''அப்பா - சித்தப்பா எல்லாம் சினிமா பத்தி உங்ககிட்ட பேசுவாங்களா?''

''அப்பா, சினிமாவை அவ்வளவா ஃபாலோ பண்ண மாட்டார். 'என்ன பண்ணிட்டு இருக்க?’னு விசாரிச்சுட்டு, சின்னச் சின்னதா டிப்ஸ் கொடுப்பார் சித்தப்பா!''

''உங்க அண்ணன் உதயநிதி, 'நான் தயாரிக்கும், விநியோகிக்கும் படங்களுக்கு இந்த அரசாங்கம் வரிவிலக்குத் தர மறுக்குது’னு குற்றம்சாட்டியிருந்தார். உங்களுக்கு அந்தப் பிரச்னை இருக்கா?''

''இல்லாமல் இருக்குமா? 'தகராறு’க்கு 'யு’ சான்றிதழ் கிடைக்கிறது கஷ்டம்தான். அப்படியே கிடைச்சாலும், நிச்சயம் வரிவிலக்குக் கொடுக்க மாட்டாங்க. பேசாம, 'இவங்க இவங்க தயாரிக்கும், நடிக்கும் படங்களுக்கு வரிவிலக்குக் கிடையாது’னு ஒரு ஜி.ஓ. போட்டுட்டா, நாங்க பாட்டுக்கு மத்த வேலைகளைப் பார்த்துட்டுப் போயிருவோம்!''

''உங்க அப்பா அழகிரி, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிற மாதிரி தெரியுதே?''

''தலைமை ஏதாவது வேலை கொடுத்தா, கண்டிப்பா செய்வார். மேலே இருந்து அசைன்மென்ட் எதுவும் வரலை. அதனால், அமைதியா இருக்கார். ஒதுங்கியெல்லாம் இல்லை!''

''உண்மையைச் சொல்லுங்க... அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை அமைதியா இருக்கா... இல்லையா?''

''அப்பா, மதுரையில் தன் பிறந்தநாள் விழாவை மட்டும்தான் கிராண்டா செலிபரேட் பண்ணுவார். ஒரு லட்சம் பேருக்கு விருந்து வெச்சு, ஏழைகளுக்கு உதவி பண்றது ஊருக்குள் சின்னச் சலசலப்பை உண்டு பண்ணத்தான் செய்யும். அது ஒரு குற்றமா?

இப்ப சென்னையில், போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் ராதா கிருஷ்ணன் ரோட்ல எதிர்ல வண்டி வர்றதே தெரியாத அளவுக்கு, 'தமிழ்த் தாயே, ஈழத் தாயே’னு ஃபிளெக்ஸ், பேனர்லாம் வெச்சிருக்காங்களே! அதெல்லாம் உங்க கவனத்துக்கு வரலையா? அதைக் கண்டிச்சு, 'சென்னை ஸ்தம்பித்தது... சென்னை மக்கள் அவதி’னு ஏன் யாரும் குற்றம் சொல்றதில்லை!''

''அரசியல்ரீதியா அப்பா அழகிரிக்கும், சித்தப்பா ஸ்டாலினுக்கும் போட்டி இருக்குனு நினைக்கிறீங்களா?''

''ரெண்டு பேரும் நேர்ல பேசும்போது ரொம்பச் சந்தோஷமாத்தான் பேசிப்பாங்க. ஆனா, அவங்களைச் சுத்தி இருக்கிறவங்கதான் சின்னச் சின்ன விஷயங்களைகூட ஊதிப் பெருசாக்கி, இல்லாதது பொல்லாததைச் சொல்லிச் சங்கடப்படுத்திடுறாங்க. எந்த விஷயத்தைக் கேள்விப்பட்டாலும் ரெண்டு பேரும் உடனே ஒரு போன் போட்டு, 'என்ன ஸ்டாலின் இது உண்மையா?’, 'என்ன அழகிரி நான் கேள்விப்பட்டது நிஜமா?’னு பேசிட்டா, எந்தப் பிரச்னையும் உடனே தீர்ந்துடும். ஆனா, அப்பாவும் சித்தப்பாவும் அப்படிப் பேசிக்காம இருக்கிறது எனக்கு வருத்தம்தான். இவங்க ரெண்டு பேர்கிட்டயும், தங்களோட செல்வாக்கை வளர்த்துக்கிறதுக்காக சிலர் தூண்டிவிடுறதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். இவ்ளோதான் விஷயம். மத்தபடி ரெண்டு பேருக்கும் நடுவில் எந்தப் போட்டி பொறாமையும் கிடையாது!''

''சரி, ஜாலியா ஒரு கேள்வி... எதிர்காலத்துல உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதினு மூணு சகோதரர்களும் அரசியலில் குதிச்சுட்டா, யாருக்கு முதல்வர் பதவி?''

''காமெடியாவே இருந்தாலும் இது ரொம்ப டூ மச் கேள்வி!'' என்று சொல்லி துரை யோசிக்க, ''இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்..!'' என்று தாவி வந்தார் அருள்நிதி.

''உதய் அண்ணன்தான் முதல்வர். துரை, துணை முதல்வர். நான் ரெண்டு பேருக்கும் பி.ஏ. ஏன்னா, இப்போ அரசியல்ல 'பி.ஏ.’-வுக்குத்தான் பவர் ஜாஸ்தி!'' என்று சிரித்தபடி துரையைப் பார்க்க, ''ஜாலியாக் கேட்டீங்க... அதனால நானும் ஜாலியா சொல்றேன். ஒரு முதல்வர் பதவி இருந்தாத்தானே பிரச்னை... தமிழ்நாட்டை மூணாப் பிரிச்சுட வேண்டியதுதான்!'' என்று துரை அதிர அதிர சிரிக்க, அருள் கப்சிப்!

ஆத்தாடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு