Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

டந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு 'ஷாக்’ தோல்வி கொடுத்தது, அப்போது தமிழகத்தை இருள் சூழவைத்த தாறுமாறு மின்வெட்டு! 'நான் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்’ என்று அப்போது வாக்குறுதி கொடுத்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், இப்போதோ முன்னைக்காட்டிலும் மோசமாக, மழைக்காலத்திலும் ஊழித் தாண்டவமாடுகிறது மின்வெட்டு. இடையில் ஒரு சில மாதங்கள், சற்றே தணிந்ததைப்போல தோற்றம் காட்டிய மின்வெட்டு, இப்போது முழுவேகத்துடன் தன் இருள் கரங்களை தமிழகம் முழுக்கப் பாய்ச்சியிருக்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த வரலாறு, தமிழகத்துக்கு உண்டு. ஆனால், இப்போது அந்தத் துறையே தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இடையில் சூரிய சக்தி மின்சாரம் குறித்து தமிழக அரசு அவ்வப்போது எழுப்பிய முழக்கங்கள்கூட இப்போது இல்லை.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், சேவை மற்றும் வணிக நிறுவனங்கள் தொடங்கி, பொருளாதாரத்தின் அச்சாணிகளாக விளங்கும் விவசாயம், குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரும் தொழிற்சாலைகள் வரை அனைத்தையும் முடக்கிப்போடும் இந்த மின்வெட்டால், தமிழகத்தின் ஏழரைக் கோடி மக்களும் தவியாகத் தவிக்கிறார்கள்.

'இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மின்வெட்டு பிரச்னை நூறு சதவிகிதம் தீர்ந்துவிடும்’ என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. 'வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல்போனதற்கு, காங்கிரஸ்-தி.மு.க-வின் கூட்டுச் சதிதான் காரணம்’ என்று அவர் ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரக் களத்தில் குற்றம் சுமத்துகிறார். 'இல்லை. மத்திய அரசும் முந்தைய தி.மு.க. அரசும் கொண்டுவந்த மின் உற்பத்தித் திட்டங்களை அ.தி.மு.க. புறக்கணிப்பதுதான் மின்வெட்டுக்குக் காரணம்’ என்று தி.மு.க. பதில் குற்றச்சாட்டை வீசுகிறது. இப்படி தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி போடும் இரைச்சலால், இருட்டிலும் புழுக்கத்திலும் தவிக்கும் மக்களிடையே எரிச்சல், வெக்கை மேலும் அதிகரிக்கத்தான் செய்கின்றன.

'அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து திட்டங்களைத் தீட்டுபவன்தான் தலைவன்’ என்பார்கள். ஆனால், இங்கிருப்பவர்களோ அடுத்த இடைத்தேர்தல் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்!